சாந்தினிசவுக் பகுதியில் இடிக்கப்பட்ட அனுமன் கோயிலை மீண்டும் கட்ட தீர்மானம்: வடக்கு டெல்லி மாநகராட்சியில் ஒருமனதாக நிறைவேறியது

புதுடெல்லி: சாந்தினி சவுக்கில் இடிக்கப்பட்ட அனுமன் கோயிலை மீண்டும் அதே இடத்திற்கு  அருகில் கட்டியெழுப்ப வேண்டும் என வடக்கு டெல்லி மாநகராட்சியில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேறியது. டெல்லி சாந்தினி சவுக் பகுதி  தற்போது அழகுப்படுத்தும்  பணிகள் நடைபெற்று  வருகிறது. இத்திட்டத்தின் ஒருபகுதியாக, அங்கிருந்த  நூற்றாண்டு பழைமை  வாய்ந்த அனுமன் கோயில்  உயர் நீதிமன்ற உத்தரவின் பேரில்  இடித்து  தரைமட்டாக்கப்பட்டது. தற்போது கோயில்  இடிக்கப்பட்ட  இடத்தில் திடீரென இரும்பு கம்பிகளை கொண்டு தற்காலிக கூடாரம்  அமைக்கப்பட்டு  அங்கு அனுமன் சிலை வைத்து பக்கதர்கள் வழிபாடு நடத்த  தொடங்கியுள்ளனர்.  இதனை நேரில் சென்று பார்வையிட்ட வடக்கு டெல்லி மாநகராட்சியின் மேயர்,  தற்காலிகமாக பக்தர்களால் எழுப்பப்பட்டுள்ள அனுமன் கோயிலுக்கு சட்ட  அங்கிகாரம் வழங்குவது குறித்து ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என கடந்த  ஞாயிறன்று தெரிவித்து இருந்தார். அதன்பின், இந்த விவகாரம் பற்றி திங்களன்று  அதிகாரிகள் மற்றும் கட்சியின் முன்னணி தலைவர்களிடம் மேயர் ஆலோசித்தார்.  அதன் முடிவில் சட்ட அங்கிகாரம் வழங்குவது என்று முடிவு எடுக்கப்பட்டது.  

இதற்கிடையே, நீதிமன்ற உத்தரவால் இடிக்கப்பட்ட அனுமன் கோயிலை மீண்டும் அதே  இடத்திற்கு அருகில் கட்ட அனுமதி வழங்க வேண்டும் என துணை நிலை ஆளுநருக்கு மத்திய  அமைச்சர் ஹர்ஷ்வர்தன் கடிதம் எழுதினார்.

இந்நிலையில் வடக்கு டெல்லி மாநகராட்சி கூட்டத்தில் அனுமன் கோயிலை மீண்டும் அதே இடத்தில் கட்ட வேண்டும் என்று தீர்மானம் கொண்டு வரப்பட்டு நேற்று ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானத்திற்கு பா.ஜ மற்றும் ஆம்ஆத்மி, காங்கிரஸ் கவுன்சிலர்களும் முழு ஆதரவு அளித்தனர். இதுபற்றி வடக்கு டெல்லி மாநகராட்சி மேயர் ஜெய்பிரகாஷ் நேற்று கூறியதாவது: அனுமன் கோயில் விவகாரத்தை அமைதியான முறையில் நாங்கள் தீர்வு கண்டுள்ளோம். அதன்படி மாநகராட்சி கூட்டத்தில் இதற்கான தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.

இதன்மூலம் கோயில் மீண்டும் அதே இடத்தில் அமைய வழியை கண்டுள்ளோம். இந்த தீர்மானத்தில் மாநகராட்சி எதிர்க்கட்சி தலைவரும், காங்கிரஸ் உறுப்பினர்களின் தலைவரும் கையெழுத்திட்டுள்ளனர். நான் நேரடியாக சாந்தினிசவுக் சென்று அங்கு அனுமனை தரிசிப்பேன். மேலும் மாநகராட்சியில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் குறித்து டெல்லி அரசுக்கும் கடிதம் எழுதுவேன். ஷாஜெகனாபாத் மறுசீரமைப்பு பணியில் அனுமன் கோயிலை பொதுப்பணித்துறை சேர்க்கக்கூடாது. இவ்வாறு அவர் கூறினார்.

ஆக்ரமிப்பாளர்கள் மீது கடும் நடவடிக்கை

கிழக்கு டெல்லி சீமாபுரியில் அதிக அளவு ஆக்கிரமிப்புகள் உள்ளன. இதனால் பொதுமக்கள் பாதிக்கப்படுகிறார்கள். இதுபற்றி சீமாபுரி எம்எல்ஏவும், சமூக நலத்துறை அமைச்சருமான ராஜேந்திரபால் கவுதம் நேற்று தலைமை செயலகத்தில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் மற்றும் பிறதுறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அதன்பின் கூறுகையில்,’ ஆக்கிரமிப்பாளர்கள், சட்டவிரோதமாக ஆக்கிரமித்தவர்கள் மீது அதிகாரிகள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதிக எண்ணிக்கையில் ஆக்கிரமிப்புகள் இருப்பதால் ஆம்புலன்ஸ் மற்றும் இதர அவசர சேவைகள் வேகமாக சாலையை பயன்படுத்த முடியவில்லை. எனவே ஆக்கிரமிப்பாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories:

>