கர்நாடகாவில் இரும்புதாது ஏற்றுமதிக்கு தடை விதித்தது சரியே: மத்திய அமைச்சர் பிரகலாத்ஜோஷி பாராட்டு

பெங்களூரு: இரும்பு தாது ஏற்றுமதிக்கு தடை விதித்து கர்நாடக அரசு எடுத்துள்ள நடவடிக்கை சரியானது என்று மத்திய கனிம வளத்துறை அமைச்சர் பாராட்டு தெரிவித்துள்ளார். நாட்டில் கனிம களஞ்சியம் நிறைந்த மாநிலம் என்ற பெருமை கர்நாடகாவுக்கு உள்ளது. கோலார் மாவட்டம் தங்கவயல், ரெய்ச்சூர் மாவட்டம் ஹட்டி ஆகிய பகுதிகளில் தங்கம் கிடைக்கிறது. சித்ரதுர்கா, தாவணகெரே, கதக், கொப்பள் மாவட்டங்களில் பழுப்பு நிலக்கரி வெட்டி எடுக்கப்படுகிறது. பல்லாரி, ரெய்ச்சூர், ஷிவமொக்கா மாவட்டங்களில் இரும்பு தாது வெட்டி எடுக்கப்படுகிறது.  இத்தொழிலில் அரசியல்வாதிகள் உள்பட பலர் ஈடுபட்டு வருவதால், பல்லாரியில் அடிக்கடி குவாரி உரிமையாளர்கள் மற்றும் அரசியல்வாதிகள் இடையே மோதல் ஏற்படுவது வழக்கம். இந்நிலையில் குவாரி மோசடி புகார் அதிகரிக்க தொடங்கியதை தொடர்ந்து கடந்த 2010 ஜூலை 26ம் தேதி மாநில அரசு பிறப்பித்த உத்தரவில் எதிர்கால மாநிலத்தின் இயற்கை வளத்தை கருத்தில் கொண்டு இரும்பு தாது ஏற்றுமதி செய்வதை தடை செய்வதாக அறிவித்தது. மாநில அரசின் முடிவை எதிர்த்து சில குவாரி உரிமையாளர்கள் தொடுத்துள்ள வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

 இந்நிலையில் இரும்புதாது ஏற்றுமதி செய்ய அரசு தடை விதித்து எடுத்துள்ள முடிவு சரியானது என்று மத்திய கனிமவளத்துறை அமைச்சர் பிரகலாத்ஜோஷி பாராட்டு தெரிவித்துள்ளார். டெல்லியில் இந்திய தொழில் கூட்டமைப்பு ஏற்பாடு செய்திருந்த கருத்தரங்கில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு அவர் பேசியதாவது: நாட்டில் இயற்கை அன்னை கொடுத்துள்ள கனிம சொத்து முழுவதையும் இக்கால தேவைக்கு நாம் பயன்படுத்திக் கொண்டால், எதிர்கால தலைமுறையினர் பாதிக்கப்படுவார்கள். பின் வரும் தலைமுறையினரின் நலனை கருத்தில் கொண்டு இருக்கும் கனிம வளத்தை அழியாமல் பாதுகாக்க வேண்டியது அவசிமாகும். அந்த வகையில் வெளிநாடுகளுக்கு இரும்பு தாது ஏற்றுமதி செய்வதை தடை செய்து கர்நாடக அரசு எடுத்துள்ள முடிவு சரியானது, பாராட்டுக்குறியது’’ என்றார்.

புதிய சட்டம் கொண்டு வரப்படும்

நமது நாட்டில் 250 கோடி டன் இரும்பு தாதுகள் பத்திரப்படுத்தி வைக்க வேண்டிய அவசியம் உள்ளது. தற்போதைய சூழ்நிலையில் இவ்வளவு இரும்பு தாதுகளை நாம் வைத்துள்ளோமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. கர்நாடக அரசின் வழியை பிற மாநிலங்களும் பின்பற்ற வேண்டும். மேலும் நமது நாட்டில் கிடைக்கும் கனிம சொத்தை நாம் வெளிநாடுகளுக்கு கொடுக்காமல், உள்நாட்டு தேவைக்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இது தொடர்பாக பிரதமருடன் ஆலோசித்து புதிய சட்டம் கொண்டு வர முயற்சி மேற்கொள்ளப்படும் என்று மத்திய அமைச்சர் தெரிவித்தார்.

Related Stories: