போக்குவரத்து தொழிலாளர்களின் எந்த கோரிக்கையும் நிறைவேற்றவில்லை: கோடிஹள்ளி சந்திரசேகர் குற்றச்சாட்டு

பெங்களூரு: அரசு போக்குவரத்து தொழிலளர்களின் எந்த கோரிக்கையும் இதுவரை நிறைவேற்றவில்லை. ஆனால் பத்திரிகைகளில் மட்டும் அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற்றியுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது கண்டனத்துக்குரியது என்று விவசாய சங்க மாநில தலைவர் கோடிஹள்ளி சந்திரசேகர் தெரிவித்தார். பெங்களூருவில் இது தொடர்பாக கோடிஹள்ளி சந்திரசேகர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்களின் கோரிக்கைகள் குறித்து அரசுக்கு கொடுத்த கால அவகாசம் முடிந்துள்ளது. ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. போக்குவரத்து தொழிலாளர்களை அரசு போக்குவரத்து தொழிலாளர்களாக நியமிக்க வேண்டும் என்று வலியுறுத்தி டிசம்பர் 10-ம் தேதி முதல் 14-ம் தேதி வரை போராட்டம் நடத்தப்பட்டது. அப்போது கடைசி நேரத்தில் தொழிலாளர்களின் 9 கோரிக்கைகள் நிறைவேற்றுவதாக அரசு அறிவித்தது. அதே போல் மற்ற கோரிக்கைகள் நிறைவேற்ற மார்ச் 15-ம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டது.  

இதுவரை  ஒரு கோரிக்கையையும் மாநில அரசு நிறைவேற்றவில்லை. ஆனால் கோரிக்கைகள் நிறைவேற்றியிருப்பதாக பத்திரிகைகள் மூலம் அரசு தெரிவித்துள்ளது.  7 நாட்களில் முடிக்க வேண்டிய பணிகளை இதுவரை முடிக்காமல் அலட்சியமாகவுள்ளனர்.  அதே போல் போக்குவரத்து துறை நஷ்டத்தில் இயங்கி வருகிறது என்பதற்காக தொழிலாளர்களின் சம்பளத்தை பிடித்தம் செய்வது நியாயம் கிடையாது. சேவை அமைப்புகள் இலவசமாக சேவைகள் செய்ய வேண்டும். துறை நஷ்டத்துக்கு அரசே காரணம். போக்குவரத்து துறை தொழிலாளர்களின் கோரிக்கைகள் நிறைவேற்ற கவனம் செலுத்தி அவைகளை நிறைவேற்ற வேண்டும்’’ என்றார்.

Related Stories: