கத்தி முனையில் மாமூல் வசூல் உதவி ஆய்வாளர் மகன் கைது

அண்ணாநகர்: ஐசிஎப் பகுதி கடைகளில் கத்தியை காட்டி மிரட்டி மாமூல் வசூலித்த உதவி ஆய்வாளர் மகனை போலீசார் கைது செய்தனர்.

ஐசிஎப் பகுதியில் உள்ள கடைகளில் வாலிபர் ஒருவர்  கத்தியை காட்டி மிரட்டி மாமூல் வசூலிப்பதாகவும், மாமூல் தர மறுக்கும் கடைக்காரர்களுக்கு கொலை மிரட்டல் விடுப்பதாகவும் ஐசிஎப் போலீசாருக்கு, கடந்த 2 நாட்களுக்கு முன் தகவல் கிடைத்தது. ஆனால், போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அலட்சியமாக இருந்துள்ளனர். இதையடுத்து, பாதிக்கப்பட்ட வியாபாரிகள் போலீஸ் உயரதிகாரிகளிடம் இதுபற்றி புகார் அளித்தனர். அதன்பேரில், போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு ஐசிஎப் நியூ ஆவடி பகுதியில் கத்தியுடன் சுற்றி திரிந்த வாலிபரை பிடித்து, காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை செய்தனர்.

அதில், மாதவரம் பால் பண்ணை காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணிபுரியும் விவேக் ராஜன் என்பவரின் மகன் எபினேஷ் (28) என்பதும், இவர் பல நாட்களாக ஐசிஎப் நியூ ஆவடி ரோடு, அன்னை சத்யா நகர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள  கடைகளில் கத்தியை காட்டி மாமூல் வசூல் செய்ததும் தெரிய வந்தது. மேலும், கடைக்காரர்களை மிரட்டி வசூலித்த மாமூல் பணத்தில், நண்பர்களுடன் மது அருந்தி உல்லாச வாழக்கை நடத்தி வந்ததும் தெரியவந்தது. அவர் மீது வழக்குப் பதிவு செய்த போலீசார், எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். போலீஸ் எஸ்ஐ மகனே கத்தி முனையில் மிரட்டி கடைகளில் மாமூல் வசூலித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories:

>