தாம்பரம் நகராட்சியில் தூய்மை பணிகள் சுணக்கம்: தொற்று நோய் பரவும் அபாயம்

தாம்பரம்: தாம்பரம் நகராட்சியில் மொத்தம் 39 வார்டுகள் உள்ளன. இதில் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் இருந்து  தினமும் சேகரிக்கப்படும் குப்பை மேற்கு தாம்பரம், கன்னடபாளையம் பகுதியிலுள்ள நகராட்சி  குப்பை கிடங்கிற்கு கொண்டு செல்லப்படுகிறது. நாளொன்றுக்கு சுமார் 100 டன் வரை இங்கு குப்பை கொட்டப்படுகிறது.தற்போது, இந்த குப்பை கிடங்கில், மலைபோல் குப்பை கழிவுகள் குவிந்து உள்ளதால், மேற்கொண்டு இங்கு குப்பை கொட்டுவதற்கு போதிய இடமில்லை. எனவே, தாம்பரம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள வீடுகள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகளிலிருந்து தூய்மை பணியாளர்கள் குப்பைகளை அகற்றுவதில்லை என கூறப்படுகிறது.

இதனால், பொதுமக்கள் சாலைகளில் ஆங்காங்கே குப்பைகளை கொட்டி விடுகின்றனர். இவ்வாறு கொட்டப்படும் குப்பைகயும் தூய்மை பணியாளர்கள் அகற்றுவதில்லை. இதனால் தாம்பரம் நகராட்சி முழுவதும் உள்ள சாலைகளில் ஆங்காங்கே குப்பை கழிவுகள் குவிந்துள்ளது. இதனால் கடும் துர்நாற்றம் வீசுவதுடன், கொசு தொல்லை அதிகரித்து,  டெங்கு, மலேரியா போன்ற தொற்று நோய் பரவும் நிலை ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே, உருமாறிய கொரோனா பரவி வரும் சூழ்நிலையில், டெங்கு, மலேரியா  போன்ற நோய்கள் பரவும் சூழல் இப்பகுதியினரை பீதியில் ஆழ்த்தியுள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள், தாம்பரம் நகராட்சியில் முறையாக குப்பையை அகற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories:

>