ஆர்.கே.பேட்டை அருகே அரசு பேருந்து கண்ணாடி உடைப்பு

பள்ளிப்பட்டு: ஆர்.கே.பேட்டை அருகே அரசு பேருந்து கல் வீசி கண்ணாடியை உடைத்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். அரசு ஊழியர்களாக அறிவிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி  அரசு போக்குவரத்து ஊழியர்கள் நேற்று முதல் தமிழகம் முழுவதும் வேலை நிறுத்தபோராட்டத்தில்  ஈடுபட்டு வருகின்றனர்.  இந்நிலையில், திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி, பொதட்டூர்பேட்டை ஆகிய அரசு போக்குவரத்து பணிமனைகளில் 90 சதவீத பேருந்துகள் ஒடவில்லை.

தொழிலாளர்கள் பெரும்பாலானோர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், பெரும்பாலான  பேருந்துகள் பணிமனைகளில் நிறுத்தப்பட்டுள்ளது. அதிமுக ஆதரவு அண்ணா தொழிற்சங்க  ஊழியர்கள் மட்டும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், பயணிகள்  பேருந்து வசதியின்றி அவதிப்படுகின்றனர். திருத்தணியிலிருந்து  மகன்காளிகாபுரம் சென்றுக்கொண்டிருந்த அரசு பேருந்து (தடம் எண் 48) அம்மையார்குப்பம் நோக்கி சென்றுக்கொண்டிருந்தது.

அப்போது, இருசக்கர வாகனத்தில் சென்ற மர்ம நபர்கள்  பேருந்து மீது கல்வீசியதில் கண்ணாடி உடைந்தது. ஓட்டுநருக்கு லேசான காயம் ஏற்பட்டது. இதனையடுத்து, பயணிகளை போலீசார் பத்திரமாக மீட்டு  அனுப்பிவைத்து பேருந்தை காவல் நிலையத்திற்கு எடுத்து சென்றனர். ஆர்.கே.பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து பேருந்து கண்ணாடி உடைத்த நபர்களை தேடி வருகின்றனர்.

Related Stories: