எங்களுக்கு தலா 2 எம்எல்ஏ சீட் பார்சல்: அதிமுக மாவட்ட செயலாளர்கள் திடீர் கெத்து

அதிமுக கட்சியில் எங்களுக்கு தலா இரண்டு எம்எல்ஏ சீட் ஒதுக்க வேண்டும் என்று கட்சி தலைமையிடம் மாவட்ட செயலாளர்கள் திடீர் கோரிக்கை வைத்துள்ளனர். தமிழகம், புதுச்சேரி, கேரளா ஆகிய மாநிலத்தில் விரைவில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடுகிறவர்கள், சென்னையில் உள்ள அதிமுக கட்சியின் தலைமை அலுவலகத்தில் கடந்த 24ம் தேதி (நேற்று முன்தினம்) முதல் மார்ச் 5ம் தேதி வரை விருப்ப மனு வழங்கலாம் என்று கட்சி தலைமை அறிவித்துள்ளது. முதல் நாளில் 1000க்கும் மேற்பட்டவர்கள் விருப்ப மனு வாங்கினர். முதல்வர் எடப்பாடி பழனிசாமி சேலம் மாவட்டம் எடப்பாடி தொகுதியிலும், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் தொகுதியிலும் மீண்டும் போட்டியிட விருப்ப மனு அளித்துள்ளனர்.

அதேபோன்று அமைச்சர்கள் பலரும் ஏற்கனவே போட்டியிட்டு வெற்றி பெற்ற தொகுதியில் போட்டியிட விருப்ப மனு செய்துள்ளனர். நேற்று 2வது நாள் அமைச்சர்கள், தற்போதைய எம்எல்ஏக்கள் அதிகம் பேர் விருப்ப மனு வாங்கினர். அமைச்சர்கள் செல்லூர் ராஜு மதுரை மேற்கு, ஆர்.பி.உதயகுமார் மீண்டும் திருமங்கலம் தொகுதியில் போட்டியிட மனு தாக்கல் செய்தனர். தென்காசி தெற்கு மாவட்ட செயலாளர் செல்வ மோகன்தாஸ் பாண்டியன் எம்எல்ஏ மற்றும் தென்காசிக்கும், தென்காசி வடக்கு மாவட்ட கழக  செயலாளர் கிருஷ்ண முரளி என்ற குட்டியப்பா கடையநல்லூர் தொகுதிக்கும், சங்கரன்கோவில் தொகுதிக்கு முன்னாள் எம்எல்ஏ முத்துச்செல்வி, தமிழக அரசின் டெல்லி பிரதிதநிதி தளவாய்சுந்தரம் ஆகியோர் மனு தாக்கல் செய்தனர்.

இந்நிலையில், அதிமுகவில் உள்ள மாவட்ட செயலாளர்கள் கட்சி தலைமைக்கு திடீரென ஒரு கோரிக்கை வைத்துள்ளனர். அதன்படி, ஒவ்வொரு மாவட்ட செயலாளர்களும் கட்சியில் தங்களுக்கு 2 சீட் ஒதுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர். ஒரு தொகுதியில் மாவட்ட செயலாளர்களே நிற்க முடிவு செய்துள்ளனர். மற்றொரு தொகுதியில் தங்களுக்கு வேண்டியவர்களை போட்டியிட வைக்க விருப்பம் தெரிவித்துள்ளனர். இதன்மூலம் ஒரு பெரிய தொகையை சம்பாதிக்க முடியும் என்று அவர்கள் கருதுகிறார்கள்.

ஆனால், கட்சி தலைமையோ இதற்கு அனுமதி வழங்காது என்றே கூறப்படுகிறது. காரணம், தற்போது கட்சியின் ஒருங்கிணைப்பாளராக உள்ள ஓ.பன்னீர்செல்வம் தென்மாவட்டங்களில் தனது ஆதரவாளர்களை போட்டியிட வைக்க முயற்சி செய்து வருகிறார். இணை ஒருங்கிணைப்பாளரான எடப்பாடி பழனிசாமி கோவை, சேலம், திருப்பூர், சென்னை, திருச்சி, விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் தனது ஆதரவாளர்களுக்கு சீட் கொடுக்க முயற்சி செய்து வருகிறார். இந்த மாவட்டங்களில் போட்டியிட கட்சிக்கு ஒரு பெரிய தொகையை அன்பளிப்பாக பலரும் கொடுத்து வைத்துள்ளனர். இதனால் எந்தெந்த தொகுதியில் யாரை நிறுத்துவது என்று கட்சி தலைமை தான் இறுதி முடிவு எடுக்கும் என்று கூறப்படுகிறது.

Related Stories: