வருமானம் வரும் பணிகளை மட்டும் கவனித்து கமிஷன் பார்த்த எம்எல்ஏ!: -முசிறி தொகுதி எம்எல்ஏ செல்வராஜ்

திருச்சி மாவட்டத்தில் மண்ணச்சநல்லுார், முசிறி, மணப்பாறை, திருவெறும்பூர், திருவெறும்பூர், லால்குடி, துறையூர் (தனி), ஸ்ரீரங்கம், திருச்சி கிழக்கு, திருச்சி மேற்கு ஆகிய 9 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. முசிறி தொகுதியானது ஒருபுறம் டெல்டா பாசன வசதி பெறும் பாசன நிலங்களும், மறுபுறம் வானம் பார்த்த பூமியும் உள்ள நிலப்பரப்பை உள்ளடக்கியது. 2016ல் தொகுதி மறுசீரமைப்பில் தொட்டியம் தொகுதி, முசிறி தொகுதியாக மாற்றப்பட்டது. முசிறி தொகுதி அதிமுக எம்எல்ஏவாக செல்வராஜ் உள்ளார்.

இவரை எதிர்த்து கடந்த 2016 தேர்தலில் திமுக கூட்டணி சார்பில் விஜய பாபு போட்டியிட்டார். தேர்தல் பிரசாரத்தின்போது செல்வராஜ் மக்களிடம் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாமல் திணறி வருகிறார். முசிறியை நகராட்சியாக தரம் உயர்த்துவது, அரசு மகளிர் கலை அறிவியல் கல்லூரி கொண்டு வருவது, தொட்டியம் பகுதியில் காவிரி ஆற்றில் கெரம்பு அமைப்பது, இளைஞர்கள் வேலைவாய்ப்பு பெற தொழிற்சாலை கொண்டு வருவது, முசிறியில் பாதாள சாக்கடை திட்டம், நெசவாளர்களின் தரம் உயர அவர்களுக்கு வேலை வாய்ப்பு என வாக்குறுதிகளை அள்ளி கொட்டினார். ஆனால் வாக்குறுதிகள் அனைத்தும் அதலபாதாளத்தில் தான் உள்ளது.

அய்யம்பாளையத்திலிருந்து காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தை செயல்படுத்தி இருந்தாலும் கூட மக்களுக்கு தினசரி குடிநீர் வழங்குவதில் சிக்கல் தற்போது வரை இருந்து வருகிறது. காவிரி ஆற்றிலிருந்து போர்வெல் மூலம் எடுத்து வரப்படும் தண்ணீரை முழுமையாக சேமித்து வைத்து அதனை வினியோகம் செய்வதற்கு ஏற்ற வகையிலான மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள், தரைமட்ட நீர்த்தேக்க தொட்டிகள் போதிய அளவு இல்லை. முசிறியில் இருந்து தொட்டியம் வரையிலான சாலை அகலம் குறைவாக இருப்பதால் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு உயிரிழப்புகள் நடைபெறுகிறது. ‘தார் சாலைகள் அமைப்பது, தெருவிளக்குகள், நிழல் கூடங்கள், பள்ளி சுற்றுச்சுவர் உள்ளிட்ட வருமானம் உள்ள பணிகளுக்கு மட்டுமே சிட்டிங் எம்எல்ஏ அதிகம் முக்கியத்துவம் கொடுத்து கமிஷன்தான் பார்த்துக்கொண்டார்’ என்கின்றனர் தொகுதி மக்கள்.

* ‘திட்டங்களை நிறைவேற்ற முயற்சி எடுத்துள்ளேன்’

முசிறி தொகுதி எம்எல்ஏ செல்வராஜ் கூறும்போது, ‘முசிறியில் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய முசிறி காவிரி குடிநீர் அபிவிருத்தித் திட்டம் ரூ.21.5 கோடி மதிப்பில் நிறைவேற்றப்பட்டுள்ளது. முசிறி அறிஞர் அண்ணா அரசு கல்லூரியில் ரூ.2 கோடியில் புதிய கட்டிடம், ஒன்றரை கோடி மதிப்பில் சுற்றுச்சுவர், தும்பலம் பள்ளிக்கு ஒரு கோடி மதிப்பில் பள்ளிக்கு கூடுதல் கட்டிடம், ஆய்வக வசதி ஆகியவையும் எனது முயற்சியால் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. முசிறியை மாவட்டமாக அறிவிக்கவும், தொட்டியத்திற்கு தீயணைப்பு நிலையம், புளியஞ்சோலை முதல் மகாதேவி வரையிலான வாய்க்கால் திட்டத்தை நிறைவேற்றவும், முசிறியை நகராட்சியாக தரம் உயர்த்துதல், பாதாள சாக்கடை திட்டத்தை கொண்டு வர சட்டசபையில் கோரிக்கை விடுத்து பேசினேன்’ என்றார்.

* ‘மடைதிறந்த வெள்ளமாக பேசிவிட்டு சென்றவர்தான் தொகுதி எம்எல்ஏ’

முசிறி திமுக ஒன்றிய செயலாளர் ராமச்சந்திரன் கூறும்போது, ‘வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை. திருச்சி- நாமக்கல் சாலையை நான்கு வழிச்சாலையாக மாற்றவில்லை. பெண்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தும் வகையிலான தொழிற் கல்லூரி கொண்டு வரவில்லை. காவிரி ஆற்றின் குறுக்கே சிறு தடுப்பணை கட்ட நடவடிக்கை எடுப்பதாக எம்எல்ஏ தெரிவித்திருந்தார். இதற்காக முசிறி அருகே காவிரி ஆற்றில் இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறதே தவிர ஆட்சி முடிவுறும் தருவாயில் கூட அதற்கான பணிகள் துவங்கவில்லை. தேர்தல் பிரசாரத்தின் போது மடைதிறந்த வெள்ளமாக பேசிவிட்டு சென்றார் தவிர செயலில் ஒன்றும் காட்டவில்லை’ என்றார்.

* நாங்களே 10 பேர் இருக்கோம், நீங்க வேற எதுக்கு?

தீபம் மாவட்டம் வந்தவாசி சட்டமன்ற தொகுதியில் இலை கட்சி சார்பில் போட்டியிட, பக்கத்து தொகுதியான செய்யாறு தொகுதியைச் சேர்ந்த மாவட்ட துணை செயலாளர் பொறுப்பில் இருக்குற பெண் நிர்வாகி ரொம்ப ஆர்வம் காட்டி வர்றாங்களாம். இதனால், வந்தவாசி தொகுதியைச் சேர்ந்த இலையின் ரத்தங்கள், கொதிச்சுப்போயிருக்காங்களாம். எங்க தொகுதியிலயே (வந்தவாசி) மாவட்ட மகளிர் அணி துணை செயலாளர் அன்னபூரணி விஜய், ஜெ. பேரவை ஒன்றிய செயலாளர் முனுசாமி, இளைஞர் பாசறை ஒன்றிய செயலாளர் நாகரத்தினம்னு 10க்கும் மேற்பட்டவங்க சீட் கேட்டு வரிசையில நிக்கிறாங்க, இப்படி சீட் கேட்கும் பட்டியல் நீண்டுகிட்டு இருக்க, பக்கத்து தொகுதியை சேர்ந்த ஒருத்தர் எப்படி நம்ம தொகுதிக்கு சீட் கேட்டு வரலாம்னு எதிர்ப்பு தெரிவிச்சு, போர் கொடி தூக்குறாங்களாம்.

எப்படி இருந்தாலும் இலை கட்சிதானே, அதுக்கு போய் எதுக்கு எதிர்ப்புன்னு ரத்தங்கள் கிட்ட விசாரிச்ச பிறகுதான், எதிர்ப்புக்கு காரணம் தெரிஞ்சது. வந்தவாசி தொகுதியில, ஏற்கனவே ஒருமுறை செய்யாறு தொகுதியைச் சேர்ந்த குணசீலமானவர் போட்டியிட்டு, எம்எல்ஏவாக ஆனாராம். அவர், தலைமை மருத்துவமனை, நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட அலுவலகம், விளையாட்டு மைதானம் ஆகியவற்றை செய்யாறு தொகுதிக்கு மாத்திட்டாராம். எனவே மீண்டும் செய்யாறு தொகுதியைச் சேர்ந்தவருக்கு, வந்தவாசியில சீட் கொடுக்க கூடாதுன்னு, ரத்தங்கள் மத்தியில ஹாட் டாப்பிக்காக பேசப்படுது.

Related Stories:

>