அதிமுகவை சசிகலாதான் காப்பாற்ற முடியும்: அமமுக துணைப் பொதுச் செயலாளர் ஜி.செந்தமிழன்

* அதிமுகவை மீட்டெடுப்போம் என்று சொல்லி வந்த நிலையில் டிடிவி.தினகரனை முதல்வர் வேட்பாளர் என அறிவித்து அமமுக தீர்மானம் நிறைவேற்றியுள்ளதே?

நாங்கள் அமமுக. எங்கள் நிர்வாகிகள் அனைவரும் எங்கள் பொதுச் செயலாளரை முதல்வராக பார்க்கிறோம். அதனால் அமமுக பொதுக்குழு தீர்மானத்தில் முதல்வர் வேட்பாளராக டிடிவி.தினகரனை அறிவித்துள்ளோம். அமமுக தொடங்கப்பட்ட அன்றே டிடிவி.தினகரன் சொல்லியிருக்கிறார். இந்த கட்சி ஜனநாயக முறையில் தான் அதிமுகவை மீட்டெடுக்கும் என்று. நாங்கள் நிச்சயமாக வெற்றி பெறுவோம். அதிமுகவை சசிகலா தலைமையில் தான் காப்பாற்ற முடியும். நிச்சயம் மீட்டெடுப்போம்.

* முதல்வர் வேட்பாளராக சசிகலாவை அறிவிக்காததற்கு என்ன காரணம்?

 அதிமுகவின் பொதுச் செயலாளர் சசிகலா. அந்த வழக்கு நிலுவையில் இருக்கிறது. நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் அனைத்தும் அமமுகவின் தீர்மானங்கள். எனவே தான் அமமுக பொதுக்குழுவில் எங்கள் பொதுச் செயலாளரை முதல்வர் வேட்பாளராக அறிவித்துள்ளோம்.

* அதிமுகவை மீட்டெடுப்போம் என்ற சசிகலாவின் சபதம் எப்போது நிறைவேறும்?

 அதற்கான சட்டப் போராட்டங்களும், ஜனநாயக போராட்டங்களும் தொடர்ந்து நடந்து வருகிறது. அது தேர்தலுக்கு முன்பா அல்லது தேர்தலுக்கு பின்பா என்பது சட்டத்தின் மூலம் எங்களுக்கு கிடைக்கக்கூடிய நியாயங்களை பொறுத்தும், மக்களை சந்திக்கும் நேரத்தில் எங்களுக்கு கிடைக்கக்கூடிய நியாயமான தீர்ப்புகளையும் வைத்து, ஆதரவுகளை பொறுத்தும் அதிமுகவை மீட்டெடுப்போம்.

* தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அமமுகவில் இருந்து அதிமுக பக்கம் பலர் போய்க் கொண்டிருக்கிறார்களே?

நாடாளுமன்ற தேர்தல் நடந்தபோது, அனைத்து கட்சிகளில் இருந்தும் அமமுகவில் வந்து இணைந்தனர். நாடாளுமன்ற தேர்தல் முடிவுகளில் அமமுகவுக்கு ஏற்பட்ட சறுக்கலுக்கு பின்பு ஒரு சில பேர் மட்டுமே திமுக உள்ளிட்ட கட்சிகளுக்கு சென்றனர். நிறைய பேரெல்லாம் செல்லவில்லை. இன்றைக்கு வேறு கட்சிகளில் இருந்து அமமுகவில் பலர் வந்து இணைந்து கொண்டிருக்கிறார்கள். சசிகலாவின் வருகையின் போது எந்த ஒரு தலைவருக்கும் இல்லாத அளவுக்கு கிட்டத்தட்ட 23 மணி நேரம் காத்திருந்து தாய்மார்கள், அதிமுக தொண்டர்கள், அமமுகவினர் வரவேற்பு கொடுத்தனர். அவர் சென்னை வரும் போது இரவையும் பொருட்படுத்தாமல் காத்திருந்து அவரை வரவேற்ற பின்பு தான் மக்கள் சென்றனர். சசிகலா மற்றும் டிடிவி.தினகரன் தலைமையை மக்கள் ஏற்றுக் கொள்வதைத் தான் இது காட்டுகிறது.

* ரயிலை முடக்கிய இலை.. இலையை விரட்டிய சூரியன்

தமிழகத்தில் 234 சட்டமன்றத் தொகுதிகள் உள்ளது. இதில் ஒரு சில தொகுதிகளின் பெயரை கேட்டதும், பெரும் அரசியல் அதிர்வுகளே நமது மனத்திரையில் ஓடும். இப்படி பரபரப்பின் உச்சம் பெற்ற தொகுதியாக ஒரு கட்டத்தில் மாறி நின்றது கிருஷ்ணகிரி மாவட்டத்தின் பர்கூர் சட்டமன்றத் தொகுதி. 1971ம் ஆண்டு இந்த தொகுதி உருவானது. அப்போது இந்த தொகுதியில் திமுக வேட்பாளராக போட்டியிட்ட கே.ஆர்.கிருஷ்ணன் வெற்றி பெற்றார். இதற்கடுத்து 1977ல் ஆறுமுகம், 1980ல் துரைசாமி, 1984ல் வெங்கடாசலம், 1989ல் ராஜேந்திரன், 1991ல் அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா என்று தொடர்ந்து 5 முறை அதிமுக வேட்பாளர்களே வெற்றியை ருசித்தனர்.

இதில் 1991ம் ஆண்டு நடந்த தேர்தலில் தாயக மறுமலர்ச்சி கழகம் என்ற கட்சியை தொடங்கினார் நடிகரும் இயக்குனருமான டி.ராஜேந்தர். கட்சி தொடங்கியவுடன் அதிரடியாக ஜெயலலிதாவை எதிர்த்து பர்கூர் தொகுதியில் போட்டியிட்டார். ரயில் சின்னத்தில் போட்டியிட்டவருக்கு, தேர்தல் முடிவில் தோல்வியே பரிசாக கிடைத்தது. அதோடு ரயில் சின்னமும் முடங்கிப்போனது. ரயிலை முடக்கிய இலை என்று தொண்டர்கள் ஆரவாரம்  செய்தனர். ஆனால் இந்த ஆராவாரத்திற்கு அடுத்து வந்த 1996ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் சம்மட்டி அடி கொடுத்தனர் பர்கூர் தொகுதி மக்கள். மீண்டும் அதே தொகுதியில் போட்டியிட்டார்  ஜெயலலிதா.

தேர்தல் முடிவுகள் தமிழகத்தையே அதிர வைத்தது. திமுக சார்பில் களமிறக்கப்பட்ட இளைஞர் சுகவனத்திற்கு 59ஆயிரத்து 148 (50.71சதவீதம்) வாக்குகளும், அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கு 50,782 (43.54சதவீதம்) வாக்குகளும் கிடைத்தது. 1991ல் ரயிலை முடக்கிய இலை என்ற கொண்டாட்டம், 1996ல் இலையை விரட்டிய சூரியன் என்று மாறியது. வெற்றி வேட்பாளராக சட்டமன்றத்தில் நுழைந்த சுகவனத்தை யானையின் காதில் நுழைந்த எறும்பு என்று அறிமுகப்படுத்தி அவையை கலகலப்பாக்கினார் அப்போது முதல்வராக பொறுப்பேற்ற கலைஞர் கருணாநிதி.

Related Stories:

>