ஓபிஎஸ் மகனை ஜெயிக்க வைத்த அதே யுக்தி அரசு ஊழியர், ஆசிரியர்கள் ஆயிரம் பேருக்கு கம்ப்யூட்டர்: அமைச்சர் உதயகுமார் டெக்னிக்

தமிழக அமைச்சரவையில் ஒவ்வொருவரும் ஒரு ரகமாக உள்ளனர். அதில் அமைச்சர் உதயகுமார் புதிய ரகம். கடந்த ஆட்சியில் அமைச்சராக பதவி ஏற்றவுடன், ஜெயலலிதாதான் எனது கடவுள். அவர் இருக்கும் இடத்தில் செருப்பு அணியமாட்டேன் என்று கூறி தலைமைச் செயலகத்துக்கு செருப்பு அணியாமல் வந்தார். ஜெயலலிதாவே கூப்பிட்டு சத்தம்போட்டவுடன் செருப்பை அணியத் தொடங்கினார். ஜெயலலிதா இறந்தவுடன் ஓ.பன்னீர்செல்வம் முதல்வராக பதவி ஏற்றார். அப்போது சசிகலாவுக்கு முதல்வர் பதவியை ஓ.பன்னீர்செல்வம் விட்டுக் கொடுக்க வேண்டும் என்று கூறினார். இதைத் தொடர்ந்துதான் சசிகலாவுக்கு முதல்வர் பதவி மீதான ஆசை வந்தது. ஓ.பன்னீர்செல்வத்தை முதல்வர் பதவியில் இருந்து இறக்கினார்.

இப்போது எடப்பாடி அணி, ஓ.பன்னீர்செல்வம் அணி என மாறி மாறி தாவி வருகிறார். இது ஒரு புறம் இருந்தாலும், கடந்த மக்களவை தேர்தலின்போது தேனி தொகுதியின் பொறுப்பாளராக உதயகுமார் நியமிக்கப்பட்டார். அப்போது, ஒரு புதிய யுக்தியை கையாண்டார். அதாவது, தேர்தலின்போது ஓட்டு சதவீதம் பல இடங்களில் குறைவாக இருக்கும். குறிப்பாக கிராமங்களில் குறையும். அப்போது பூத்தில் உள்ள அதிகாரிகள், முக்கியமான கட்சிகளின் ஏஜென்டுகளை அழைத்து ஒவ்வொரு வேட்பாளருக்கும் சரிசமமான ஓட்டுக்களை போட்டு ஓட்டு சதவீதத்தை உயர்த்துவார்கள். இது கிராமங்கள் மற்றும் சிறிய நகரங்களில் நடைமுறையாகவே உள்ளது. ஓட்டு குறைந்தால், பூத்தில் உள்ள அதிகாரிகள் தேர்தல் ஆணையத்துக்கு பதில் சொல்ல வேண்டிய நிலை ஏற்படும். இதற்காகவே இந்த சமாதான ஏற்பட்டை செய்வார்கள்.

இதனால் மக்களவை தேர்தலின்போது பூத்தில் உள்ள அனைத்து அதிகாரிகளின் பட்டியலை தயாரித்த உதயகுமார், அனைவருக்கும் முதல் நாள் இரவே பதவிக்கு ஏற்றார்போல பணத்தை வெட்டினார். இதனால் பூத்தில் உள்ள அதிகாரிகள் உதயகுமார் சொல்படி செயல்படத் தொடங்கினர். இவ்வாறு அனைத்து வேட்பாளர்களுக்கும் சரிசமமான ஓட்டு போடுவதாக கூறும் தேர்தல் அதிகாரிகள் மொத்தமாக இரட்டை இலைக்கே போட்டுள்ளனர். இதனால்தான் தேனி மக்களவை தொகுதியில் அதிக அளவில் ஓ.பி.எஸ்.மகன் ரவீந்திரநாத்தால் வெற்றி பெற முடிந்தது.

இந்த டெக்னிக்கை தனது தொகுதியில் அமல்படுத்த முடிவு செய்துள்ளார். இதற்காக தனது தொகுதியில் உள்ள அரசு பள்ளி ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் என ஆயிரம் பேருக்கு கம்ப்யூட்டரை வாங்கி கொடுத்துள்ளாராம். தேர்தல் நேரத்தில் பூத்தில் அவர்கள் தனக்கு சாதகமாக நடப்பார்கள் என்று நினைக்கிறாராம். அதோடு தனது தொகுதியில் உள்ள 200 பத்திரிகையாளர்களுக்கும் வாங்கிக் கொடுத்துள்ளாராம். இவர், தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சர் பதவியையும் கூடுதலாக கவனிப்பதால் குறைந்த விலையில் கம்ப்யூட்டரை வாங்கி கொடுத்துள்ளாராம். இதேபோல தேர்தல் அறிவிப்புக்கு முன்னதாக பல அதிரடிகளை செய்ய அமைச்சர் உதயகுமார் ஒரு பெரிய பட்டியலே போட்டுள்ளாராம். இதனால் அந்த தொகுதி மக்கள் குஷியாக உள்ளார்களாம்.

* சீரழிந்த ராயபுரம் தொகுதி: ரெயின்போ விஜயகுமார் வண்ணாரப்பேட்டை (வழக்கறிஞர்)

ராயபுரம் தொகுதியில் பெரும்பாலான சாலைகள் குண்டும் குழியுமாக உள்ளது.  அமைச்சர் தொகுதி என்ற தான் பெயர் தான் உள்ளது. ஆனால் உள்கட்டமைப்பு வசதிகள் எதுவும் இல்லை. ராயபுரம் மேம்பாலத்தில் தினமும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகிறார்கள். எனவே, இதற்கு மாற்று ஏற்பாடு செய்ய எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தரமான மாநகராட்சி பள்ளிகள் இல்லை. இதனால், மாணவர்களின் கல்வித்தரமும் மேம்படவில்லை. மாநகராட்சி பள்ளியில் படித்த பலர் உயர்கல்வி பயிலாமல் 12ம் வகுப்பிலேயே இடைநின்று விடுகின்றனர். இங்கு மீனவர்கள் அதிகம் வாழுகின்றனர். மீன்களை பதப்படுத்தி வைக்க போதிய வசதியில்லை. விற்பனை செய்யும் வகையில் மீன் விற்பனை கடைகளும் முறையாக இல்லை. தொகுதி அமைச்சரோ அவர் தொகுதியில் உள்ள குறைகளை பார்க்காமல் எல்லா பிரச்னைக்கும் முன்னின்று பேசுவது தான் அவருடைய பழக்கமாக உள்ளது. அவரால் தொகுதிக்கு எந்த பயனும் இல்லை.

Related Stories: