×

சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸ் உத்தரவின்பேரில் பெண் ஐபிஎஸ் அதிகாரியின் கார் சாவியை பிடுங்கிய எஸ்பி கண்ணன்: வழக்குப்பதிவு செய்யும்படி தமிழக அரசுக்கு ஐபிஎஸ் அதிகாரிகள் கோரிக்கை

சென்னை: சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸ் உத்தரவின்பேரில், பெண் ஐபிஎஸ் அதிகாரியின் கார் சாவியை பிடுங்கிய செங்கல்பட்டு எஸ்பி கண்ணன் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஐபிஎஸ் அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி திருச்சி மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களுக்கு கடந்த 21ம் தேதி சுற்றுப்பயணம் செய்தார். பின்னர் அவர் காரில் சேலம் சென்றார். அப்போது முதல்வரின் பாதுகாப்பு பணிக்கு சட்டம் ஒழுங்கு சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸ் சென்றிருந்தார். முதல்வர் விழா முடிந்ததும், கரூர் வரை பாதுகாப்புக்காக சென்றவர், அங்கிருந்து சென்னை திரும்பினார்.

அப்போது கரூரில் முதல்வரின் பாதுகாப்பு பணியில் இருந்த ஒரு பெண் ஐபிஎஸ் அதிகாரியைப் பார்த்ததும், முக்கியமான விஷயமாக பேச வேண்டும் என்று காரில் ஏறும்படி கூறியுள்ளார். பெண் அதிகாரி காரில் ஏறியதும், தனது கார் டிரைவரைப் பார்த்து ராஜேஷ்தாஸ் முறைத்துள்ளார். டிரைவர் இறங்கியதும், பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். அவரிடம் எதிர்ப்பு தெரிவித்து விட்டு காரை விட்டு பெண் அதிகாரி இறங்க முயன்றபோது, வலுக்கட்டாயமாக காரில் அமர வைத்துள்ளார். பின்னர் டிரைவரை அழைத்து காரை எடுக்கும்படி கூறியுள்ளார்.

அப்போது பெண் அதிகாரியிடம் கள்ளக்குறிச்சியில் தனக்கு தெரிந்தவரின் சொகுசு விடுதி உள்ளது. அங்கு இருவரும் செல்லலாம் என்று கூறியுள்ளார். ஆனால் அதற்கு அந்த பெண் அதிகாரி, உங்கள் மகள்போல உள்ள என்னிடம் நீங்கள் இப்படி நடக்கலாமா என்று கேட்டுள்ளார். ஆனாலும் காரிலேயே பெண் அதிகாரியை பலவந்தப்படுத்த முயன்றுள்ளார். பின்னர் காரை நிறுத்தாவிட்டால் குதித்து விடுவதாக எச்சரித்துள்ளார். இதன்பின்னர் காரில் இருந்து பெண் அதிகாரியை இறக்கிவிட்டதாக கூறப்படுகிறது. பெண் ஐபிஎஸ் அதிகாரி நேர்மையானவர்.

வயதில் குறைந்தவர் என்பதால் உயர் அதிகாரி மட்டுமல்ல பெரியவர்களை பார்த்து வேகமாகவோ, கோபமாகவோ, அதிர்ந்தோ பேச மாட்டார். மிகவும் அமைதியானவர். இதனால்தான் சிறப்பு டிஜிபி தன் அதிகாரத்தை பயன்படுத்தலாம் என்று நினைத்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் அந்த பெண் அதிகாரியோ, காரில் சென்னை புறப்பட்டுள்ளார். முன்னதாக பெண் அதிகாரிக்கு தனி பிரிவு இன்ஸ்பெக்டராக இருந்தவர் மூலம் சமாதானப்படுத்த முயன்றுள்ளார். இந்த இன்ஸ்பெக்டர் கடந்த 18ம் தேதியே கரூருக்கு மாற்றப்பட்டவர். ஆனால், தொடர்ந்து இந்த பணியில் இருந்துள்ளார்.

பெண் அதிகாரி சென்னை செல்லும் தகவல் தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் மூலம் சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாசுக்கு தெரியவந்தது. உடனே பெண் அதிகாரியின் செல்போனுக்கு தொடர்பு கொண்டுள்ளார். அவர் போனை எடுக்காததால், வரும் வழியில் கள்ளக்குறிச்சி எஸ்பியிடம் போன் செய்து, பெண் ஐபிஎஸ் அதிகாரியின் காரை மறித்து அவரை என்னிடம் பேசச் சொல்லுங்கள் என்று கூறியுள்ளார். கள்ளக்குறிச்சி எஸ்பி மறுத்துவிட்டார். பின்னர் விழுப்புரம் எஸ்பி ராதாகிருஷ்ணனிடம் கூறியுள்ளார். அவரும் மறுத்து விட்டார். இதனால் செங்கல்பட்டு எஸ்பி கண்ணனிடம் கூறியுள்ளார்.

கண்ணனோ தனது அதிரடிப்படையுடன் சென்று செங்கல்பட்டில் வைத்து ஏதோ பெரிய தீவிரவாதியை மடக்குவதுபோல பெண் ஐபிஎஸ் அதிகாரியின் காரை மறித்துள்ளார். சிறப்பு டிஜிபியிடம் பேசினால்தான் உங்களை இங்கிருந்து அனுப்ப முடியும் என்ற கூறியுள்ளார். ஆனால் பெண் அதிகாரி மறுத்தவுடன் காரின் சாவியை பிடுங்கி, டிரைவரை வலுக்கட்டாயமாக இறக்கி விட்டுள்ளார். பின்னர் தன்னுடைய செல்போனில் இருந்து சிறப்பு டிஜிபியிடம் பேசும்படி கூறியுள்ளார். தான் சிறப்பு டிஜிபியை பற்றி புகார் செய்யப் போகிறேன். நீங்கள் தடுத்தால், உங்கள் மீதும் புகார் சொல்வேன் என்று எச்சரித்துள்ளார்.

ஆனால் அதையும் மீறி, தனது செல்போனில் இருந்து ராஜேஷ்தாசுக்கு போன் செய்து, பெண் ஐபிஎஸ் அதிகாரியிடம் பேச வைத்துள்ளார். அதன்பின்னர்தான் சென்னை வந்து பெண் ஐபிஎஸ் அதிகாரி புகார் செய்துள்ளார் என்று தெரியவந்துள்ளது.
இதனால் செங்கல்பட்டு எஸ்பி கண்ணன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர் மீதும் வழக்குப்பதிவு செய்ய வேண்டும். அவர் ஒரு ரவுடியைப் போல நடந்து கொண்டுள்ளார். பெண் அதிகாரியிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதே தெரியவில்லை. கூலிப்படையைப் போல செயல்பட்டுள்ளார். இதனால் அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஐபிஎஸ் அதிகாரிகள் கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளனர்.

மேலும் அவர்கள் தங்களது குரூப்பில் பதிவிடும்போது, ‘எஸ்பி கண்ணன் இப்படி செய்தது ராஜேஷ்தாஸ் செய்ததை விட சீரியஸாக எடுத்து கொள்ள வேண்டும். போலீஸ் வரலாற்றிலேயே இது ஒரு கருப்பு பக்கமாக உள்ளது. தற்போது அமைக்கப்பட்டுள்ள கமிட்டி ராஜேஷ்தாஸ் புகார் மனு மீது விசாரிக்கும்போது, மாவட்ட எஸ்பி கண்ணன் என்ன செய்தாரோ அதையும் விசாரிக்க வேண்டும். அந்த கமிட்டி பவர்புல் கமிட்டி. நீதி கிடைக்கும். ஒரு மாவட்ட எஸ்பியிடம் இருந்து தலைமை அலுவலக டிஜிபிக்கு புகார் வந்தால், அந்த புகார் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார்.

மற்றொரு அதிகாரி கூறும்போது, ‘‘பெண் அதிகாரியை மாவட்ட எஸ்பியுடன் வந்த கன்மேன்(தனி பாதுகாவலர்) மிரட்டியுள்ளார். இது, வெட்ககேடானது. அந்த மாவட்ட எஸ்பியை சஸ்பெண்ட் செய்ய வேண்டும். அவர் ஒரு கிரிமினல் மாதிரி நடந்து கொள்கிறார். அவரை உடனே பதவியில் இருந்து இறக்க வேண்டும்’’ என்றார். இன்னொரு பெண் அதிகாரி பதிவிடும் போது, நீதிக்காக காத்திருக்கிறோம். அதனால் தான் எங்களின் கருத்துக்களை கூறுகிறோம். அந்த எஸ்பி மீது நடவடிக்கை தைரியம் இல்லையா? பெண் எஸ்பியை மிரட்டியது சம்பந்தமாக ஏன் கண்ணன் மீது தனியாக வழக்கு பதிவு செய்யவில்லை.

எவ்வளவு தைரியம் இருந்தால் அந்த கண்ணன் சாவியை பிடுங்கி இருப்பார். இந்த கருத்து முழுவதும் ஸ்ட்ராங் மெசேஜை சொல்கிறோம். பாதிக்கப்பட்டவர்களோட நாங்கள் இருப்போம். அவருக்கு வருங்காலத்தில் எந்த மிரட்டலும், எந்த பாதிப்பும் வரக்கூடாது. அவர்கள் பாதுகாக்கப்படுவதை நாம் உறுதி செய்ய வேண்டும். பதவிகள் மற்றும் அதிகார பதவிகளைப் பிடிக்க எதையும் செய்யத் தயாராக இருக்கும் இதுபோன்ற அடிமை கூலிப்படையினரை நாம் வைத்திருக்கிறோம் என்று குறிப்பிட்டுள்ளனர்.

* யார் இந்த ராஜேஷ் தாஸ்?
ஓடிசா மாநிலத்தைச் சேர்ந்தவர். 1989ம் ஆண்டு ஐபிஎஸ் தேர்ச்சி பெற்று தமிழக பணிக்கு நியமிக்கப்பட்டார். திருவள்ளூர், திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் எஸ்பியாக பணியாற்றினார். 2002ம் ஆண்டு எஸ்பியாக திருவள்ளூரில் பணியாற்றியபோது காவலர் ஒருவரை பெல்டால் அடித்ததற்காக மனித உரிமை ஆணையத்தால் ரூ.2 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளார். அந்த மாவட்டத்தில், பெண் டிஎஸ்பி ஒருவரிடம் தவறாக நடக்க முயன்றதாக புகார் கொடுக்கப்பட்டதால் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். தென் மண்டல ஐஜியாக பணியாற்றியபோது கூடங்குளம் எதிர்ப்பாளர்கள் மீது தாக்குதல், முல்லைப் பெரியாறு போராட்டத்தின்போது தாக்குதல் என்று அவர் மீது குற்றச்சாட்டுகள் கூறப்பட்டன.

அவரைத்தான் தமிழக அரசு சட்டம் ஒழுங்கு ஏடிஜிபியாக நியமித்தார்கள். பின்னர் டிஜிபியாக பதவி உயர்வு பெற்றவுடன், சட்டம் ஒழுங்கு சிறப்பு டிஜிபியாக நியமிக்கப்பட்டார். இவருக்காக இந்தப் பதவி உருவாக்கப்பட்டது. இதனால் திரிபாதிக்கு இணையாக மாநிலம் முழுவதும் அதிகாரிகளை மிரட்டத் தொடங்கியதாக புகார்கள் எழுந்தது. இரு அதிகார மையங்கள் இருப்பதால் தமிழக போலீசார் என்ன செய்வது என்று தவித்தனர். ஆனால் தேர்தலுக்காக நியமிக்கப்பட்டவர் என்பதால் ராஜேஷ்தாசே முழு அதிகாரத்துடன் வலம் வந்தார். அந்த அதிகாரம்தான் அவரை தவறு செய்ய வைத்துள்ளது. மேலும் 3 பெண் ஐபிஎஸ் அதிகாரிகளிடம் நைசாக பேச்சுக் கொடுத்து தவறாக பேசியுள்ளார்.

அவர்கள் அவரிடம் கோபமாக பேசியதும் அமைதியாகியுள்ளார். தற்போது பாதிக்கப்பட்டவர் மிகவும் அமைதியானவர் என்பதால் தன்னுடைய வேலையை அவரிடம் காட்டியுள்ளார் என்கின்றனர் போலீஸ் அதிகாரிகள். தமிழகத்தில் 2002ம் ஆண்டு சட்டம் ஒழுங்கு டிஜிபியாக பணியாற்றிய ரவீந்திரநாத் மீதும், பெண் அதிகாரி ஒருவர் பாலியல் குற்றச்சாட்டுக்களை கூறினார். இதனால் அப்போது முதல்வராக இருந்த ஜெயலலிதா, 4 மாதமே டிஜிபியாக இருந்த ரவீந்திரநாத்தை சஸ்பெண்ட் செய்தார். சட்டம் ஒழுங்கு பணியில் இருந்த ஒரு டிஜிபி சஸ்பெண்ட் ஆவது இதுதான் முதல் முறை. இப்போது சிறப்பு சட்டம் ஒழுங்கு டிஜிபி சஸ்பெண்ட் ஆவதும் முதல் முறைதான்.

* கணவன் மனைவியை சேர்க்க நினைத்த மோடி பிரிக்க நினைத்த சிறப்பு டிஜிபி
பெண் ஐபிஎஸ் அதிகாரி தமிழகத்தில் பணியாற்றுகிறார். அவரது கணவரோ, ஐஏஎஸ் அதிகாரி. இதனால், அவர் புதுவை மாநிலத்தில் பணியாற்றினார். இப்போது டெல்லியில் பணியாற்றுவதாக கூறப்படுகிறது. இருவரும் தனித்தனியாக பிரிந்து வசிப்பதால், ஒரே மாநிலத்தில் பணியாற்ற அனுமதிக்க வேண்டும் என்று பிரதமர் மோடியிடம் இருவரும் சேர்ந்து மனு கொடுத்துள்ளனர். அப்போது, இருவரும் தனது சொந்த மாநிலமான குஜராத்தில் பணியாற்றும்படி கேட்டுக் கொண்டார். ஆனால் இரு அதிகாரிகளும் வேண்டாம். தமிழகம் அல்லது பக்கத்து மாநிலத்தில் உள்ள ஏதாவது ஒரு மாநிலத்தில் இருவரையும் பணி நியமனம் செய்யுங்கள் என்று கேட்டுக் கொண்டனர்.

இதற்கான நடவடிக்கைகளை எடுக்கும்படி மோடி உத்தரவிட்டுள்ளார். கணவன், மனைவி இருவரும் சேர்ந்து இருப்பதற்காக இந்த நடவடிக்கையை அவர் எடுத்துள்ளார். ஆனால், சிறப்பு டிஜிபியோ கணவன், மனைவி பிரிந்து வசிக்கின்றனர். இதனால் தனியாக இருக்கும் பெண் அதிகாரியின் வாழ்க்கையில் விளையாடலாம் என்று கருதி இந்த படுபாதக செயலை செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் மோடி இருவரையும் சேர்த்து வைக்க நினைக்கிறார். இவரோ நிரந்தரமாக பிரிக்க நினைக்கிறார் என்று ஐபிஎஸ் அதிகாரிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.

Tags : SP ,Kannan ,IPS ,DGP ,Rajesh Das ,Tamil Nadu government , SP Kannan snatches female IPS officer's car key on Special DGP Rajesh Das' orders: IPS officers request Tamil Nadu government to file a case
× RELATED பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க...