ரூ.1,330 கோடி நிலக்கரி இறக்குமதி விவகாரம் கூட்டு புலனாய்வு குழு விசாரணை கோரி பொதுநல வழக்கு: அரசு பதில்தர ஐகோர்ட் உத்தரவு

சென்னை: நிலக்கரியை வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்வது தொடர்பான 1,330 கோடி ரூபாய் மதிப்பிலான டெண்டர் ஊழல் தொடர்பாக கூட்டு புலன் விசாரணை  நடத்த கோரிய வழக்கில் தமிழக அரசு ஒரு வாரத்தில் பதில் தருமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை எண்ணூர் காமராஜர் துறைமுகம் மூலம்  20 லட்சம் டன் நிலக்கரியை வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்வதற்கான ஒப்பந்த அறிவிப்பை கடந்த ஜனவரி 18ம் தேதி தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் இணையதளம் மூலம் வெளியிட்டது. இந்நிலையில், வெளி நாடுகளில் இருந்து ரூ.1,330 கோடி அளவுக்கு நிலக்கரி இறக்குமதி டெண்டரில் முறைகேடு நடந்துள்ளது.

உரிய விதிகள் பின்பற்றப்படவில்லை. எனவே, இதுகுறித்து கூட்டு புலனாய்வு குழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் எனக்கோரி தமிழ்நாடு மின்சார வாரியத்தின் முன்னாள் பொறியாளர் செல்வராஜ் உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் சுப்பையா, சத்திகுமார் சுகுமார குரூப் ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வக்கீல் விஜய் ஆனந்த் ஆஜரானார். வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த மனுவுக்கு தமிழக அரசு மற்றும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் ஆகியோர் ஒரு வாரத்திற்குள் பதில்மனு தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டனர்.

Related Stories: