சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட உதயநிதி ஸ்டாலின் விருப்ப மனு தாக்கல்: சைதாப்பேட்டைக்கு மா.சுப்பிரமணியன் தாக்கல் செய்தார்

சென்னை: சென்னை சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட உதயநிதி ஸ்டாலின் நேற்று விருப்ப மனு தாக்கல் செய்தார். தமிழகம், புதுச்சேரியில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட விரும்புகிறவர்களிடம் இருந்து விருப்ப மனுக்கள் கடந்த 17ம் தேதி முதல் பெறப்பட்டு வருகிறது. கடந்த 8 நாட்களில் பல்லாயிரக்கணக்கானோர் விருப்பமனு தாக்கல் செய்துள்ளனர். இவர்களில் பலர் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் போட்டியிட வேண்டும் என்றும் சிலர் உதயநிதி ஸ்டாலின் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணியில் போட்டியிட வேண்டும் என்றும் விருப்ப மனு தாக்கல் செய்துள்ளனர்.

இந்நிலையில் 9வது நாளான நேற்றும் நிறைய பேர் விருப்ப மனுக்களை தாக்கல் செய்தனர். சென்னை சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் விருப்பமனு தாக்கல் செய்தார். சென்னை சைதாப்பேட்டை தொகுதியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் தமக்காகவும் சென்னை தெற்கு மாவட்ட திமுக செயலாளர் மா.சுப்பிரமணியன் தாக்கல் செய்தார்.

ஆயிரம்விளக்கு சட்டமன்ற தொகுதிக்கு தலைமை நிலைய செயலாளர் துறைமுகம் காஜா, வேளச்சேரி மற்றும் மயிலாப்பூர் சட்டமன்ற தொகுதிக்கு திமுக தலைமை நிலைய செயலாளர் பூச்சி முருகன், பழனி சட்டமன்ற தொகுதிக்கு மாவட்ட செயலாளர் ஐ.பி. செந்தில்குமார் எம்எல்ஏ, திருவள்ளூருக்கு வி.ஜி.ராஜேந்திரன், திண்டுக்கல் தொகுதிக்கு கொள்கை பரப்பு செயலாளர் திண்டுக்கல் ஐ.லியோனி உள்பட ஏராளமானோர் விருப்ப மனு தாக்கல் செய்தனர். நேற்று வரை 7,250 பேர் வரை விருப்ப மனுக்களை வாங்கியுள்ளனர். விருப்ப மனுக்களை வழங்க வருகிற 28ம் தேதி கடைசி நாள் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: