போக்குவரத்து ஊழியர்கள் ஸ்டிரைக் தமிழகத்தில் 80 சதவீத அரசு பஸ்கள் ஓடவில்லை: பொதுமக்கள் கடும் அவதி; பேச்சு நடத்த அரசு அழைக்கவில்லை; போராட்டம் தொடரும் என அறிவிப்பு

சென்னை: தமிழகம் முழுவதும் போக்குவரத்து ஊழியர்களின் வேலை நிறுத்தப் போராட்டம் நேற்று துவங்கியதையடுத்து தமிழகத்தில் 80 சதவீத பேருந்துகள் இயங்கவில்லை. இதனால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளானார்கள். இதுவரை பேச்சுவார்த்தைக்கு அரசு அழைக்கவில்லை என்பதால் போராட்டம் தொடரும் என்று தொழிற்சங்கத்தினர் அறிவித்துள்ளனர். தமிழக அரசு 14வது ஊதிய உயர்வை தொடங்க வேண்டும். ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கு பணபலன்கள் உடனடியாக வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை அரசு போக்குவரத்துக்கழக தொழிலாளர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

இதுதொடர்பாக நடந்த அனைத்து பேச்சுவார்த்தைகளும் தோல்வியில் முடிந்துள்ளன. சென்னை குரோம்பேட்டையில் கடைசியாக கடந்த 18ம் தேதி நடந்த 14வது ஊதிய ஒப்பந்தப் பேச்சுவார்த்தையும் தோல்வி அடைந்தது. இதையடுத்து, தொழிற்சங்க கூட்டமைப்பின் கூட்டம் கடந்த 2 நாட்களுக்கு முன்பு நடைபெற்றது. இதில் தொமுச, சிஐடியு, ஏஐடியுசி, ஐஎன்டியூசி, எச்.எம்.எஸ், டிடிஎஸ்எப், எம்எல்எப், ஏஏஎல்எல்எப், டிடபில்யூயு உள்ளிட்ட தொழிற்சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் 25ம் தேதி தமிழகம் முழுவதும் பஸ்கள் ஓடாது என்று என்று போக்குவரத்து தொழிற்சங்கங்கள் அறிவித்தன.  

இந்தநிலையில், திட்டமிட்டபடி நேற்று காலை 6 மணி முதல் போக்குவரத்து ஊழியர்களின் போராட்டம் தொடங்கியது. தமிழகம் முழுவதும் பேருந்து பணிமனைகளின் முன்பாக போக்குவரத்து ஊழியர்கள் திரண்டு கோரிக்கையை வலியுறுத்தி அடையாள அட்டைகளை அணிந்திருந்தனர். பலர் வேலை நிறுத்த போராட்டத்தால் பணிக்கு வரவில்லை. மயிலாடுதுறை, திருப்பூர், ராஜபாளையம், உளுந்தூர்பேட்டை, செங்கல்பட்டு ஆகிய பகுதிகளில் முழுமையாக பேருந்துகள் இயங்கவில்லை. புதுக்கோட்டை, மதுரை, திருவண்ணாமலை, கோவை, தென்காசி, சாத்தூர், கோபிசெட்டிபாளையம், கும்பகோணம், தூத்துக்குடி, மரக்காணம், திருவாரூர் ஆகிய பகுதிகளில் குறைந்த அளவிலான பேருந்துகளே இயக்கப்பட்டது.

இதேபோல், சென்னையில் 3,200 எம்.டி.சி பேருந்துகளில் 70 சதவீத பேருந்துகள் இயங்கவில்லை. இதனால், தி.நகர், கிண்டி, ஆலந்தூர், சென்ட்ரல் உள்ளிட்ட நகரின் முக்கிய பகுதிகளில் மக்கள் கூட்டம் பல மணிநேரம் காத்திருந்தனர். இதனால் மருத்துவமனை, இன்டர்வியூ, அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு வேலைக்கு செல்வோரும் சிரமம் அடைந்தனர். இதேபோல், கோயம்பேட்டில் இருந்து மற்ற ஊர்களுக்கு செல்லும் 80 சதவீதத்திற்கும் மேற்பட்ட பேருந்துகள் இயங்கவில்லை. ஆனால், தமிழகம் முழுவதும் 50 சதவீத பஸ்கள் இயக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

வேலைநிறுத்தம் தொடர்பாக நேற்று மாலை நடைபெற்ற ஆலோசனையைத் தொடர்ந்து சிஐடியு பொதுச்செயலாளர் ஆறுமுக நயனார் நிருபர்களிடம் கூறியதாவது: இதுவரை பேச்சுவார்த்தைக்கு அரசு அழைக்கவில்லை. இடைக்கால நிவாரணமாக அறிவித்த ரூ.1000 என்னும் தொகையை, 2019ம் ஆண்டு, செப்டம்பர் 1ம் தேதி முதல் நடைமுறைப்படுத்த வேண்டும். ஓய்வூதியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு, பணப்பலன் ஆகியவற்றை வழங்க வேண்டும். இவ்வாறான எங்களது கோரிக்கையைத் தீவிரமாக வலியுறுத்தும் வகையில், தமிழகம் முழுவதும் உள்ள பணிமனைகளில் இன்று காலை 11 மணியளவில் ஆர்ப்பாட்டம் நடைபெறும். பின்னர் சென்னை, பல்லவன் இல்லத்தில் மாலை 4 மணியளவில் வாயிற்கூட்டம் நடைபெறும். மேலும் வேலைநிறுத்தம் தொடர்ந்து  நடைபெறும் என்று தெரிவித்தார்.

* ஷேர் ஆட்டோக்களில் அதிக கட்டணம்

பல போக்குவரத்து பணிமனைகளில் பேருந்துகள் இயங்காததால் ஷேர் ஆட்டோக்கள் இரண்டு மடங்கு கட்டணம் வசூலித்தன. ரூ.20 வசூலிக்கப்படும் இடங்களுக்கு ரூ.30ம், ரூ.40 வசூலிக்கப்படும் இடங்களுக்கு ரூ.60ம் என அதிக கட்டணம் வசூல் செய்யப்பட்டதாக பயணிகள் குற்றம் சாட்டினர். அதேபோல கால் டாக்சிகளிலும் கடுமையான கட்டண உயர்வு இருந்தது.

* மெட்ரோ, மின்சார ரயில்களில் கூட்டம்

பஸ் ஸ்டிரைக் காரணமாக, மெட்ரோ ரயில் மற்றும் மின்சார ரயில்களில் நேற்று காலை 6 மணி முதலே கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. கூட்டத்தை கட்டுப்படுத்த 5 நிமிடத்துக்க ஒரு ரயில் இயக்கப்பட்டது. இதேபோல், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் 5 நிமிடத்திற்கு ஒருமுறை ரயில் என்ற சேவை நீட்டிக்கப்பட்டது. வழக்கமாக காலை நேரங்களில் 2 ஆயிரம் பேர் வரை மட்டுமே மெட்ரோ ரயில் சேவையை பயன்படுத்துவார்கள். ஆனால் நேற்று 5 ஆயிரம் பேருக்கு மேல் மெட்ரோ ரயில் சேவையை காலையில் பயன்படுத்தினர். இதேபோல், புறநகர் ரயில்களிலும் வழக்கத்திற்கு அதிகமாகவே கூட்டம் இருந்தது.

* ஊழியர்களுக்கு எச்சரிக்கை

சில போக்குவரத்துக்கழகங்கள் ஊழியர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், ‘போக்குவரத்து நிறுவனம் அத்தியாவசிய சேவைக்குரிய நிறுவனமாகவுள்ளதால் பணியாளர்கள் உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டும். விடுப்புகள் ரத்து செய்யப்படுகிறது. வேலை நிறுத்தத்தில் கலந்து கொள்பவர்கள் மீது தக்க ஒழுங்குநடவடிக்கை எடுக்கப்படும்’ எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Related Stories: