திருக்குறள், பழமொழி பேசும் பிரதமர் மோடி, செம்மொழியாம் தமிழ் மொழிக்கு இதுவரை உரிய அந்தஸ்த்தை வழங்கவில்லை: எம்.பி. தயாநிதிமாறன் தாக்கு.!!!

வாணியம்பாடி: தமிழகம் வந்தால் திருக்குறள், பழமொழியைப் பேசும் பிரதமர் மோடி தமிழ் மொழிக்கு உரிய அந்தஸ்த்தை வழங்கவில்லை என திமுக எம்.பி தயாநிதிமாறன் குற்றஞ்சாட்டியுள்ளார். திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி சட்டமன்ற தொகுதியில் இன்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட மத்திய சென்னை திமுக நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதிமாறன் செய்தியாளர்களிடம் பேட்டியளித்தபோது, பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலையை மத்திய அரசு தொடர்ந்து உயர்த்தி வருகிறது. ரூ.30-க்கு விற்கப்படுகின்ற பெட்ரோல் மீது ஏறத்தாழ 63 ரூபாய் வரியை சுமத்தி பெட்ரோலின் விலையை ரூ.93-க்கு கொண்டு வந்து விட்டனர்.

அதேபோல் சமையல் எரிவாயுவின் விலையும் உயர்ந்துள்ளது. இதனால், சாமான்ய மக்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள் என்பதை மத்திய, மாநில அரசுகள் அக்கறை கொள்ளவில்லை.பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் திமுக சார்பில் போராட்டம் நடத்தப்பட்டது. ஆனால், ஆட்சியில் இருப்பார்கள் இதைபற்றி கவலைப்படாமல் இருக்கிறார்கள் என்றார்.

தமிழகத்தில் தேர்தல் நெருங்கி வருவதால் கடந்த 4 ஆண்டுகளில் இல்லாத அறிவிப்புகளை முதல்வர் பழனிசாமி அறிவித்து வருகிறார். அரசு பொது தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கு இந்த ஆண்டும் தேர்வு இல்லை என அறிவித்துள்ளார். சட்டப்பேரவை தேர்தலை கருத்தில் கொண்டு வாய்க்கு வந்ததையெல்லாம் முதல்வர் பழனிசாமி உளறிக்கொண்டிருக்கிறார். பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் ஊழலுக்கு எதிரானவர்கள் என்ற மாயையை உருவாக்கியுள்ளார்கள். மேற்கு வங்கத்திலும், புதுச்சேரியிலம் பணத்தை கொடுத்து சட்டப்பேரவை உறுப்பினர்களை விலைக்கு வாங்குகின்றனர். இது ஊழல் என்று தானே அர்த்தம் என்றார்.

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். ஆனால், அதற்கான பணிகள் இன்னும் தொடங்கப்படவில்லை. அங்கே அறிவிப்பு பலகை வைத்தது தான் மிச்சம். தமிழக மக்கள் முன் வைத்த எந்த கோரிக்கையும் மத்திய அரசு நிறைவேற்றவில்லை. ஆனால், தமிழகம் வந்தால் பிரதமர் மோடி திருக்குறள் பேசுகிறார், பழமொழியை படிக்கிறார். அவ்வையாரின் பொன்மொழிகளை சொல்கிறார். ஆனால், செம்மொழியாம் தமிழ் மொழிக்கு இதுவரை உரிய அந்தஸ்த்தை மத்திய அரசு வழங்கவில்லை. இந்திய மொழிகளில் தமிழ் மொழி எந்த இடத்தில் உள்ளது என்பது மக்களுக்கு தெரியும். பிரதமர் மோடியும், முதல்வர் பழனிசாமியும் தமிழகத்தின் விரோதிகள் என்றும் கூறினார்.

Related Stories: