ஜோலார்பேட்டை அருகே 6 மாதங்களாக போர்வெல், டேங்குகள் பழுது குடிநீரின்றி பொதுமக்கள் தவிப்பு

ஜோலார்பேட்டை: ஜோலார்பேட்டை அடுத்த அம்மையப்பன் நகர், கட்டேரி ஊராட்சிகளில் பொதுமக்களுக்கு ஆழ்துளை கிணறுகள் அமைத்து மினி டேங்க்குகள் மூலமும், மேல்நிலை நீர் தேக்க தொட்டி மூலமும் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த ஊராட்சிகளில் உள்ள 14 ஆழ்துளை கிணறு மின்மோட்டார்கள், 27 மினி டேங்க்குகள் பழுதடைந்துள்ளது. இதனால் பொதுமக்கள் கடந்த 6 மாதங்களுக்கு மேலாக குடிநீரின்றி அவதிப்பட்டு வருகின்றனர். இதனால் காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் திருப்பத்தூர் சப்-கலெக்டரிடம் கோரிக்கை மனு அளித்தனர். அதன்படி அனைத்து கிராம பகுதிக்கும் காவிரி கூட்டு குடிநீர் இணைப்பு வழங்கும் பணிகள் தற்போது நடந்து வருகிறது. இந்த பணிகள் மந்தகதியில் நடந்து வருவதாக கூறப்படுகிறது. இதனால் 2 ஊராட்சிகளிலும் கடும் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

இதுதொடர்பாக ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நேற்று புகார் செய்யப்பட்டது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள், பழுதான மின்மோட்டார்களை சரி செய்யவும், காவிரி கூட்டுக்குடிநீர் திட்ட பணிகளை விரைந்து முடிக்கவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: