3-வது டெஸ்ட் போட்டி: இங்கிலாந்து அணியை 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி.!!!

அகமதாபாத்: அகமதாபாத்தில் நடந்த 3வது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணியை 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி வீழ்த்தியது. இந்தியா வந்துள்ள இங்கிலாந்து அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் இரு டெஸ்டில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்று தொடர் 1-1 என சமநிலையில் இருந்தது. இதற்கிடையே, குஜராத் மாநிலம் அகமதாபாத் நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நேற்று தொடங்கிய 3-வது டெஸ்ட் போட்டியில், டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் முதலில் பேட் செய்ய முடிவு செய்தார்.

கிராவ்லி, சிப்லி இருவரும் இங்கிலாந்து இன்னிங்சை தொடங்கினர். சிப்லி ரன் ஏதும் எடுக்காமல், இஷாந்த் வேகத்தில் ரோகித் வசம் பிடிபட... ரசிகர்களின் ஆரவாரத்தில் ஸ்டேடியம் குலுங்கியது. தனது 100வது டெஸ்டில் விக்கெட் வீழ்த்திய இஷாந்த் மகிழ்ச்சியில் ஆர்ப்பரித்தார். தொடர்ந்து, இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 112 ரன்னுக்கு ஆல் அவுட்டானது ( 48.4 ஓவர்). இதைத் தொடர்ந்து, முதல் இன்னிங்சை தொடங்கி விளையாடிய இந்திய அணி 3 விக்கெட் இழப்புக்கு 99 ரன் எடுத்து 13 ரன்கள் மட்டுமே பின்தங்கியிருந்தது.

தொடர்ந்து, இன்று தொடங்கிய 2-வது நாள் ஆட்டத்தின், முதல் இன்னிங்சில் இந்திய அணி அனைத்து விக்கெட்களையும் இழந்து 145 ரன்கள் எடுத்தது. இங்கிலாந்து அணி தரப்பில் ஜோ ரூட் 5 விக்கெட்டும், ஜேக்  லீச் 4 விக்கெட்டும் வீழ்த்தினர். பின்னர் தனது 2-வது இன்னிங்ஸை தொடங்கிய இங்கிலாந்து அனைத்து விக்கெட்களையும் இழந்து 81 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் இந்திய அணிக்கு 49 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. தொடர்ந்து, 49 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு களமிறங்கிய இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 49 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. முன்னதாக இரண்டு அணிகளும் தலா 1 போட்டிகளில் வென்றுள்ளது. இன்றைய வெற்றியை தொடர்ந்து இந்திய அணி 2:1 என்ற விகிதத்தில் முன்னிலை பெற்றுள்ளது.

இதற்கிடையே, 3-வது டெஸ்ட் போட்டி 2 நாளில் முடிவுக்கு வந்ததால் ரசிகர்கள் அதிருப்தியடைந்துள்ளனர். முதல்நாளில் 13 விக்கெட்களும், 2வது நாள் 17 விக்கெட்களும் விழுந்ததால் ஆடுகளம் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 1950ம் ஆண்டுக்கு பிறகு குறைவான நேரத்தில் முடிந்த 7-வது டெஸ்ட் போட்டி இது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: