சிவகாசி அருகே மேலும் ஒரு பட்டாசு ஆலையில் வெடி விபத்து: இதுவரை 5 பேர் பலி; 10-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதி.!!!!

சிவகாசி: சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் தற்போது வரை 5 பேர் உயிரிழந்துள்ளனர். விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே காளையர்குறிச்சியில் தனியார் பட்டாசு ஆலையில் திடீரென ஏற்பட்ட விபத்தில்  பத்துக்கும் மேற்பட்ட அறைகள் தரைமட்டமாகியுள்ளது.

இந்த வெடி விபத்தில் தற்போது வரை 3 பெண்கள் உட்பட 5 பேர் உயிரிழந்துள்ளனர். விபத்தில் காயமடைந்த 10-க்கும் மேற்பட்டோர் சிவகாசி அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளது. மேலும், வெடி விபத்தில்  சிக்கியவர்களை மீட்கும் பணியில் தீயணைப்புத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். தொடர்ந்து, விபத்து நிகழ்ந்த பட்டாசு ஆலையில் மாவட்ட எஸ்.பி. பெருமாள், வருவாய் அலுவலர் உள்ளிட்டோர் நேரில் ஆய்வு செய்து வருகின்றனர்.

இதனைபோன்று, கடந்த பிப்ரவரி 12-ம் தேதி சாத்தூர் அருகே அச்சங்குளம் பட்டாசு ஆலை வெடி விபத்தில் 23 பேர் பரிதாபமாக உயிரிழந்த நிலையில், மீண்டும் ஏற்பட்ட பட்டாசு ஆலை விபத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளது பொதுமக்கள் மத்தியில்  வேதனையை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில வாரங்களில் பட்டாசு ஆலைகளில் ஏற்பட்டுள்ள 3-வது விபத்து இது என்பது குறிப்பிடத்தக்கது.

விபத்து தொடர்பாக மாவட்ட எஸ்.பி. பெருமாள் கூறுகையில், விபத்தில் தரைமட்டமான அறைகளின் இடிபாடுகளை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது. உரிமம் முறையாக உள்ளது, விதிமுறைகள் மீறப்பட்டதா என்பது விசாரணைக்கு  பிறகே தெரியவரும் என்று தெரிவித்தார்.

Related Stories:

>