×

தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளில் மருத்துவக் கல்வி பயில நடவடிக்கை: பாஜக பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி உறுதி.!!!

கோவை: தமிழகம் வந்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, கோவை கொடிசியா வளாகத்தில் நடைபெறும் அரசு நிகழ்ச்சியில் பங்கேற்று ரூ.12,400 கோடி மதிப்புள்ள திட்டங்களை தொடங்கி வைத்தார். தொடர்ந்து, கோவை கொடிசியா வளாகத்தில்  நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றிய பிரதமர் மோடி, வெற்றி வேல்...வீர வேல் என கூறி பரப்புரையை தொடங்கினார். தொடர்ந்து பிரதமர் மோடி பேசுகையில், வணக்கம் தமிழ்நாடு, வணக்கம் கோயம்புத்தூர் என  தமிழில் பேசினார். தமிழக மக்களின் கண்ணிய வாழ்க்கைக்கு உத்தரவாதம் அளிக்கும் திட்டங்களை தொடங்கி வைத்துள்ளேன்.

பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்துவிட்டு தற்போது உங்களிடம் உரையாற்ற வந்துள்ளேன். தற்போது  தொடங்கிவைக்கப்பட்டுள்ள திட்டங்களால் ஒட்டுமொத்த தமிழகமே பயன்பெறும். தொழில் நகரமான கோவைக்கு வந்திருப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன் என்றார். தமிழ் மொழி உலகிலேயே மிகவும் பழமை வாய்ந்த மொழி. தமிழர் திருவிழாக்கள் உலகளவில் புகழ்பெற்றவை. தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளில்  மருத்துவக் கல்வி பயில நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார். மருத்துவம், பொறியியல் படிப்புகளை உள்ளூர் மொழிகளிலேயே பயிற்றுவிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

உள்ளூர் மொழியில் மருத்துவம், பொறியியல் படிப்புகளை பயிற்றுவிப்பதன் மூலம் இளைஞர்கள் பயன் பெறுவர். வளர்ச்சி அடிப்படையிலான அரசியலை மக்கள் விரும்புவது கடந்த 2 தேர்தல்களில் வெளிப்பட்டுள்ளது. கோவையில் மட்டும் 25 ஆயிரம் சிறு குறு நிறுவனங்கள் மத்திய அரசின் திட்டத்தால் பயன்பெற்றுள்ளன. சிறு வியாபாரிகளுக்கும் சிறு  விவசாயிகளுக்கும் முக்கியத்துவம் கொடுத்து வருகிறோம்.

புதிய தொழில் வாய்ப்புகளை ஏற்படுத்த தேவையான உதவிகள் செய்யப்பட்டு வருகின்றன. ஜவுளித்துறையில் உள் கட்டமைப்பை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அடுத்த 3  ஆண்டுகளில் இந்தியாவில் 7 ஜவுளி பூங்காக்கள் வரும் என உறுதி அளிக்கிறேன். ஸ்ரீபெரும்புதூர் அருகே மப்பேட்டில் சரக்கு பெட்டக பூங்கா அமைக்கப்படும் என்றார். 11 கோடி விவசாயிகள் பிரதமரின் நிதி உதவி திட்டத்தில் பயன்பெற்றுள்ளனர். ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் தமிழகம் அதிகளவில்  பயன்பெற்று வருகிறது.  தமிழகத்தில் மட்டும் 12 லட்சம் வீடுகள் பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில் கொடுக்கப்பட்டுள்ளன.

விவசாயிகளின் வாழ்வில் மாற்றம் கொண்டுவர வேண்டும் என விரும்புகிறோம். கொப்பரை தேங்காய்க்கான குறைந்த பட்ச ஆதார விலை 2 முறை  உயர்த்தப்பட்டுள்ளது. சிறு விவசாயிகளின் கண்ணியமான வாழ்க்கைக்கு செயலாற்றுகிறோம் என்பதில் பெருமைகொள்கிறேன். இந்தாண்டு தமிழகம் ஒரு புதிய அரசாங்கத்தை தேர்ந்தெடுக்கப் போகிறது. கூட்டுறவு மற்றும் கூட்டாட்சிக்கு உதாரணமாக தேசிய ஜனநாயக கூட்டணி திகழ்கிறது. வளர்ச்சியை மையப்படுத்தும் அரசைதான் மக்கள் விரும்புகிறார்கள். வளர்ச்சிக்கு  எதிரானவர்களை ஒதுக்கி வைக்க வேண்டும் என இந்திய மக்கள் விரும்புகின்றனர் என்றும் தெரிவித்தார்.


Tags : Modi ,Bhajaka ,Public ,Forum , Medical education in state languages including Tamil: Prime Minister Modi confirms at BJP public meeting !!!
× RELATED பிரதமர் மோடியின் பேச்சுக்காக...