மீனவர்களுக்கு தேவை தனி அமைச்சகமே தவிர, மற்றோரு அமைச்சகத்தின் கீழ் வரும் ஒரு துறை அல்ல... பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி பதில்

டெல்லி: மீனவர்களுக்கு தேவை தனி அமைச்சகமே தவிர, மற்றோரு அமைச்சகத்தின் கீழ் வரும் ஒரு துறை அல்ல என்று பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பதில் அளித்துள்ளார். அண்மையில் ஒரு நாள் பயணமாக ராகுல் காந்தி புதுச்சேரிக்கு சென்றார். புதுச்சேரி சென்ற ராகுல் காந்தி முத்தியால்பேட்டையில் மீனவர்களுடன் கலந்துரையாடினார்.

அப்போது நாட்டின் முதுகெலும்பான விவசாயிகளுக்கு எதிராக மத்திய அரசு 3 சட்ட மசோதாக்களை நிறைவேற்றி உள்ளது. மீனவர்கள் கூட்டத்தில் விவசாயிகள் பற்றி நான் ஏன் பேசுகிறேன்? என உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கும். நான் உங்களை கடல் விவசாயிகளாக கருதுகிறேன். மத்தியில் நில விவசாயிகளுக்கு அமைச்சகம் இருக்கும்போது, கடல் விவசாயிகளுக்கு ஏன் அவ்வாறு இல்லை? என அவர் கூறினார். மேலும் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த உடன் மீனவர்களின் குறைகளை தீர்ப்பதற்கு தனி அமைச்சகம் உருவாக்கப்படும் என ராகுல் காந்தி தெரிவித்து இருந்தார்.

இந்தநிலையில் இன்று புதுச்சேரி வந்த பிரதமர் மோடி பொதுக்கூட்டத்தில் உரையாற்றினார். அப்போது ராகுல் காந்தியை விமர்ச்சிக்கும் வகையில், 2019-ல் மீனவர்களுக்கு அமைச்சகம் அமைத்துவிட்டதாக பிரதமர் கூறினார். அதனை அடுத்து தன் மீதான பிரதமர் மோடியின் விமர்சனத்துக்கு டிவிட்டரில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பதில் அளித்துள்ளார்.

அதாவது, மீனவர்களுக்கு தேவை தனி அமைச்சகமே தவிர, மற்றோரு அமைச்சகத்தின் கீழ் வரும் ஒரு துறை அல்ல. மேலும் இருவருக்காக இருவர் ஆட்சி நடத்தும் போக்கு மிகவும் மோசமானது என அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories:

>