×

தொழில் வளர்ச்சியில் தமிழ்நாடு முக்கிய பங்காற்றி வருகிறது; சுற்றுச் சூழலை பாதிக்காத தொழில் வளர்ச்சிக்கு மத்திய அரசு முன்னுரிமை அளிக்கும்: பிரதமர் மோடி பேச்சு

கோவை: சுற்றுச் சூழலை பாதிக்காத தொழில் வளர்ச்சிக்கு மத்திய அரசு முன்னுரிமை அளிக்கும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் புதிய திட்டங்களை தொடங்கி வைக்க பிரதமர் மோடி இன்று கோவை வந்தார். சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் பிரதமர் மோடி கோவை விமான நிலையம் வந்தார். அப்போது தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், முதல்வர் பழனிச்சாமி , துணை முதல்வர் பன்னீர்செல்வம் ஆகியோர் வரவேற்பு அளித்தனர். இதனை தொடர்ந்து கோவை கொடிசியா வளாகத்தில் நடைபெறும் அரசு நிகழ்ச்சியில் எம்ஜிஆர், ஜெயலலிதா படங்களுக்கு பரியாதை செலுத்தினார். பின்னர் 12,400 கோடி ரூபாய் மதிப்புள்ள திட்டங்களை தொடங்கி வைத்தார்.

* நெய்வேலியில் புதிதாக அமைக்கப்பட்ட 2 அனல்மின் நிலைய திட்டத்தை தொடங்கி வைத்தார்.

* நெய்வேலியில் ரூ.8000 கோடி செலவில் உருவக்கப்பட்டுள்ள புதிய அனல் மின் திட்டத்தைக் நாட்டுக்கு அர்ப்பணித்தார்

* தூத்துக்குடி துறைமுகம் கோரம்பள்ளம் பாலம், ரயில்வே மேம்பாலம், அதன் இணைப்புச் சாலையை திறந்து வைத்தார்

* மதுரை, திருப்பூர், திருச்சி உள்ளிட்ட இடங்களில் கட்டப்பட்டுள்ள அடுக்குமாடி குடியிருப்புகளை திறந்து வைத்தார்

* கிழ்பவானி கால்வாயை நவீனப்படுத்தும் திட்டத்துக்கு அடிக்கல் நாட்டினார்

* தென் மாவட்டங்களில் 709 மெகாவாட் சூரிய மின் உற்பத்தி நிலையங்களையும் நாட்டுக்கு அர்ப்பணித்தார்

* ரூ.12,400 கோடி மதிப்பிலான நலத்திட்டங்களையும் தொடங்கி வைத்தார் பிரதமர்

இதனை தொடர்ந்து தமிழில் வணக்கம் எனக் கூறி பிரதமர் மோடி உரையைத் தொடங்கினார். உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம் தொழுதுண்டு பின்செல் பவர். இதன் பொருள், உழவு செய்து அதனால் கிடைத்ததைக் கொண்டு வாழ்கின்றவரே சிறப்பாக வாழ்கின்றவர், மற்றவர் எல்லோரும் பிறரைத் தொழுது உண்டு பின் செல்கின்றவரே. தமிழ்நாட்டிற்கு பல நல்ல வளர்ச்சி திட்டங்களை தொடங்கி வைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். பவானிசாகர் அணை விரிவாக்கம் திட்டத்தால், 2 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும். இந்தியாவில் தொழில் வளர்ச்சியில் தமிழ்நாடு முக்கிய பங்காற்றி வருகிறது.

இரு பெரும் மின் திட்டங்களுக்கு இன்று அடிக்கல் நாட்டியுள்ளேன். தொழில் வளர்ச்சிக்கு மிக முக்கியம் தடையில்லை மின்சாரம் ஆகும். கடல் வணிகம் பாரம்பரியம் மிக்க மாநிலம் தமிழ்நாடு. துறைமுகத்தில் சரக்கு கையாளும் திறன் நவீனமயமாக்கல் மூலம் அதிகரிக்கும். சரக்கு இறக்கி பிரித்தனுப்பும் திறனுள்ள துறைமுகமாக தூத்துக்குடி துறைமுகம் விளங்குகிறது. ரூ.6 லட்சம் கோடி முதலீட்டில் 575 திட்டங்கள் கொண்ட சாகர்மாலா திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. துறைமுகங்கள் நவீனமயம், துறைமுகங்கள் இணைப்பு உள்ளிட்டவை சாகர்மாலா திட்டத்தில் அடங்கும்.

2035-ம் ஆண்டுக்குள் சாகர்மாலா திட்டத்தை நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. ஸ்ரீபெரம்பதூர் அருகே மப்பேட்டில் சரக்கு பெட்டகம் கையாளும் வளாகம் அமைக்கப்பட உள்ளது. 500 கிலோ வாட் சோலார் மின் திட்டம் ஏற்கனவே வ.உ.சி. துறைமுகத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. சுற்றுச் சூழலை பாதிக்காத தொழில் வளர்ச்சிக்கு மத்திய அரசு முன்னுரிமை அளிக்கும். தற்போது 140 கிலோவாட் சோலார் மின் உற்பத்தி திட்ட பணிகள் நடைபெறுகிறது. துறைமுகத்தின் மொத்த மின்தேவையில் 60% சோலார் திட்டம் நிறைவு செய்யும். ஒவ்வொரு குடிமகனுக்கும் கவுரவத்தை உறுதி செய்வதே வளர்ச்சியின் நோக்கம் எனவும் கூறினார்.


Tags : Tamil Nadu ,government ,Modi , Tamil Nadu is playing an important role in industrial development; Central government will give priority to environmentally friendly business development: Prime Minister Modi speech
× RELATED தொழில்முனைவோர் மேம்பாட்டு நிறுவனம்...