நாட்டில் உள்ள அனைத்தையும் விற்கும் மோடி அரசு: இந்த மத்திய அரசால் மக்களை கொடூரமாக சுரண்ட மட்டுமே முடியும்: மம்தா பானர்ஜி கடும் விமர்சனம்

கோல்கட்டா: நாட்டில் உள்ள அனைத்தையும் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு விற்பனை செய்வதாக மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி விமர்சனம் செய்துள்ளார். தமிழகம், அசாம் மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் விரைவில் சட்டப்பேரவை தேர்தல் நடக்க உள்ளது. இதற்கான தேர்தல் பிரச்சாரத்தில், மாநில மற்றும் தேசிய கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக, மேற்கு வங்க மாநிலத்தில் ஆட்சியை தக்க வைக்க மாநில முதல்வரும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவருமான மம்தா பானர்ஜி தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். மேற்கு வங்கத்தில் ஆட்சியை பிடிக்க பாஜகவும் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகிறது.

இதனிடையே இந்தியாவில் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு பெட்ரோல், டீசல் விலை கடுமையாக அதிகரித்துள்ளது. தொடர்ந்து உயர்ந்துவரும் பெட்ரோல், டீசல் விலை நடுத்தரவர்க்க மக்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. பெட்ரோல், டீசல் விலை உயர்வை பல்வேறு அரசியல் கட்சிகளும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் மேற்குவங்க மாநிலம் கோல்கட்டாவில் அம்மாநில முதல்வர் தலைமையில் பெட்ரோல், டீசல் மற்றும் காஸ் சிலிண்டர் விலை உயர்வைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பின்னர் பெட்ரோல் விலையுயர்வைக் கண்டிக்கும் வகையில் மம்தா பானர்ஜி பேட்டரி பொருத்தப்பட்ட எலக்ட்ரிக் இரு சக்கர வாகனத்தில் பயணம் மேற்கொண்டார்.

பின்னர் வாகனத்தில் இருந்தபடியே பேசிய அவர்; பெட்ரோல், டீசல் மற்றும் காஸ் சிலிண்டர் விலை இதுவரை இல்லாத அளவு அதிகரித்துள்ளது. பிரதமர் மோடி அரசின் செயல்பாடு இது தான். இது மக்களை வஞ்சிக்கும் அரசாக உள்ளது. மோடி அரசால் நாட்டில் உள்ள அனைத்தும் விற்பனை செய்யப்படுகிறது. மோடியும், அமித்ஷாவும் இணைந்து நாட்டையே விற்கிறார்கள். பி.எஸ்.என்.எல்., முதல் நிலக்கரி வரை நாட்டில் உள்ள அனைத்தும் விற்பனை செய்யப்படுகின்றன. மத்திய அரசு இளைஞர்களுக்கு எதிரானது, விவசாயிகளுக்கு எதிரானது, மக்களுக்கு எதிரானது. இந்த மத்திய அரசால் மக்களை கொடூரமாக சுரண்ட மட்டுமே முடியும் எனவும் கூறினார்.

Related Stories: