பெண் எஸ்.பி.க்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரம்!: விசாரணை குழு நியாயமாக, நேர்மையாக விசாரிக்க ஐ.பி.எஸ். அதிகாரிகள் சங்கம் கோரிக்கை..!!

சென்னை: பெண் எஸ்.பி.க்கு பாலியல் தொல்லை கொடுத்த அதிகாரி மீதான விசாரணையை அரசு அமைத்துள்ள விசாரணைக்குழு நியாயமாக, சுதந்திரமாக, நேர்மையாக விசாரிக்க ஐ.பி.எஸ். அதிகாரிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. பெண் எஸ்.பி. ஒருவர் தமிழகத்தின் சட்ட ஒழுங்கு டி.ஜி.பி. ராஜேஷ்தாஸ் மீது பாலியல் புகார் ஒன்றை அளித்திருந்தார். இது மிகவும் பரபரப்பாக பேசப்பட்டது. முக்கியமாக பல முக்கிய தலைவர்கள் இதற்கு கண்டனம் தெரிவித்து கருத்துக்களை பதிவிட்டிருந்தனர். திமுக எம்.பி. கனிமொழி மற்றும் தமிழச்சி தங்கபாண்டியன் ஆகியோர் கருத்துக்களை பதிவிட்டனர். மேலும் திமுக தலைவர் ஸ்டாலினும் இதற்கு கடும் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டிருந்தார்.

இதனையடுத்து தமிழக அரசு இப்புகார் மீதான நடவடிக்கையை மேற்கொள்ள ஆரம்பித்தது. கூடுதல் தலைமை செயலாளர் ரகுநந்தன் தலைமையில் விசாரணை குழு அமைத்து பாலியல் புகார் குறித்து விசாரிக்க உத்தரவு பிறப்பித்தது. அதோடு தமிழக சிறப்பு டி.ஜி.பி.யாக இருந்த ராஜேஷ்தாஸை அதிரடியாக கட்டாய காத்திருப்பு பட்டியலில் பணியிடமாற்றம் செய்து உத்தரவிட்டது. பாலியல் புகார் மீதான விசாரணை தொடங்கவுள்ள நிலையில் ஐ.பி.எஸ். அதிகாரிகள் சங்கம் சார்பில் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில், பெண் எஸ்.பி.க்கு மூத்த அதிகாரியால் பாலியல் தொல்லை தரப்பட்டது குறித்து ஐ.பி.எஸ். அதிகாரிகள் சங்கம் கவலை தெரிவித்துள்ளது.

தமிழகத்தின் சட்ட ஒழுங்கு டி.ஜி.பி. ராஜேஷ்தாஸ் மீதான பாலியல் புகார் என்பது மிக முக்கியமாக பார்க்கப்படுகிறது. இந்த புகார் குறித்து நியாயமான, சுதந்திரமான, நேர்மையான விசாரணையை அரசு அமைத்துள்ள விசாரணை குழு நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக வேலை செய்யும் இடத்தில் பெண்களுக்கு எதிராக நடக்கும் இந்த பாலியல் தொந்தரவுகள் தொடர்பாக ஒற்றுமையுடன் இருந்து ஐ.பி.எஸ். அதிகாரிகள் சங்கம் உறுதியாக குரல் கொடுக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சிறப்பு டி.ஜி.பி. ராஜேஷ்தாஸ் பணிநீக்கம் செய்ய வேண்டும் என்றும் அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

Related Stories: