2025ம் ஆண்டுக்குள் காசநோய் இல்லாத இந்தியாவை உருவாக்க பிரதமர் மோடி விருப்பம் : மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் உரை!!

டெல்லி : காசநோய்க்கு எதிரான மக்கள் இயக்கத்தைத் தொடங்குவது குறித்து, மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷவர்த்தன் தலைமையில் நேற்று மத்திய சுகாதார அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகள் மற்றும் இதர மேம்பாட்டுப் பங்காளர்களுடன்  உயர்நிலை ஆய்வுக் கூட்டம் நடந்தது.காசநோயைத் தடுப்பதற்கு அரசு மேற்கொண்டு வரும் பல்வேறு நடவடிக்கைகளை டாக்டர் ஹர்ஷவர்த்தன் விளக்கிக் கூறினார். உறுதியான முயற்சிகள் மற்றும்  ஆதார வளங்களின் உதவியுடன் இந்த நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாக அவர் தெரிவித்தார். ``2021 ஆம் ஆண்டை காசநோய் குறித்த ஆண்டாக ஆக்க நாம் விரும்புகிறோம் என்று அவர் கூறினார்.

எந்தப் பகுதியைச் சேர்ந்தவராக இருந்தாலும், எந்த ஊர் மற்றும் நகரில் மருத்துவ உதவியை நாடுபவராக இருந்தாலும், அவர்களுக்கு இலவசமாக, உயர் தரத்திலான காசநோய் சிகிச்சை கிடைப்பதை உறுதி செய்ய  மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளில் கடந்த சில ஆண்டுகளாக பெருமளவு முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதாக அமைச்சர் கூறினார். இந்த சேவைகளை நாட விரும்புவோர், தயக்கமின்றி முன்வந்து சிகிச்சை பெறுவதை இது ஊக்குவிக்கும் என்றும், 2025 ஆம் ஆண்டுக்குள் காசநோய் இல்லாத இந்தியாவை உருவாக்குவது என்ற இலக்கை எட்ட இது உதவிகரமாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

இந்த நோயைக் குணப்படுத்த பன்முகத்தன்மை கொண்ட புதிய அணுகுமுறைகளைப் பின்பற்றுவதன் முக்கியத்துவத்தை கோடிட்டுக் காட்டிய அவர், காசநோய் இல்லாத இந்தியாவை உருவாக்க துரிதப்படுத்தப்பட்ட மற்றும் நீடித்த கவனம் செலுத்தப்பட வேண்டும் என்று குறிப்பிட்டார். ``காசநோய் மேலாண்மை மற்றும் சேவைகள் கிடைக்கும் நிலையை மேலும் பலப்படுத்துவதற்கு தேசிய காசநோய் ஒழிப்புத் திட்டம் வழிவகுக்கிறது.

சமுதாய அமைப்புகளில் சுகாதார சேவைகளைப் பெறுவதற்கு முன்வரும் வகையில் காசநோயாளிகளை ஊக்குவித்தல் மற்றும் காசநோய்க்கு சிகிச்சை பெறுவதில் தயக்கத்தை நீக்குதல் ஆகியவற்றுக்கான மக்கள் இயக்கம் பரவலான மக்கள் தொகையை எட்ட வேண்டும்.  அதன் மூலமாகத்தான் இத் திட்டத்தை வெற்றிகரமானதாக ஆக்க முடியும் என்று அமைச்சர் கூறினார். பெருமளவு மக்களை சீக்கிரத்தில் எட்டுதல்,  காசநோய் சிகிச்சையின் பல்வேறு நிலைகளில் சமுதாயம் சார்ந்த அமைப்புகள் மற்றும் சமுதாயத்தின் முழுமையான பங்கேற்பு மற்றும் ஒத்துழைப்பு கிடைப்பதை உறுதி செய்தல் ஆகியவற்றின் முக்கியத்துவத்தை அவர் வலியுறுத்தினார். இவை தான் இத் திட்டத்தின் தூண்கள் போல இருக்கும் அம்சங்கள் என்றார் அவர்.

கோவிட் -19 பாதிப்பை வெற்றிகரமாக சமாளித்தது மட்டுமின்றி, நோய் கண்டறிதல் மற்றும் தடுப்பூசி மருந்துகள் அளிப்பதில் உலகின் நம்பிக்கை விளக்காக மாறியுள்ளதன் மூலம் இந்தியாவுக்குக் கிடைத்துள்ள அனுபவங்களின் அடிப்படையில், ``துல்லியமான தகவல்கள் அளித்தல் மற்றும் சுகாதார நடைமுறைகள் மற்றும் பொருத்தமான பழக்கவழக்கங்கள் குறித்து தீவிர கவனம் செலுத்தும் நிலையை இந்தப் பெருந்தொற்று பாதிப்பு ஏற்படுத்தியுள்ளது. அதேபோல காசநோய் அறிகுறிகள் குறித்து நாடு தழுவிய அளவில் தகவல்கள் பரவினால், இந்த நோயைக் கட்டுப்படுத்துவதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்த முடியும் என்று அமைச்சர் கூறினார்.

டெல்லியில் தாம் சுகாதார அமைச்சராக இருந்தபோது, போலியோ பாதிப்புக்கு எதிராக விழிப்புணர்வு ஏற்படுத்த மேற்கொண்ட முயற்சிகளையும், அந்தந்தப் பகுதியில் உள்ள மருந்து விற்பனை நிலையங்களின் பங்களிப்பும் அதில் இருந்ததையும் டாக்டர் ஹர்ஷவர்த்தன் நினைவுகூர்ந்தார்.

தேசிய அளவிலும், மாநில அளவிலும், மத்திய அரசு மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு ஒத்துழைப்பு அளிக்க மேம்பாட்டு பங்காளர்களுடன் இணைந்து உருவாக்கப்பட உள்ள தேசிய தொழில்நுணுக்க ஆதரவு குழு (என்.டி.எஸ்.யூ.) குறித்த கருத்துப் பரிமாற்றங்களுக்கு அமைச்சர் தலைமை வகித்தார். காசநோய் தடுப்புத் திட்டத்தின் கீழ் சிகிச்சை பெற முன்வருவோரின் எண்ணிக்கையை அதிகரித்தல், விழிப்புணர்வு ஏற்படுத்துதலுக்கு ஆதரவாக செயல்படுதல் மற்றும் தகவல் தொடர்பு அணுகுமுறைகளை செயல்படுத்த இந்தப் பிரிவு உதவிகரமாக இருக்கும்.

கடந்த சில ஆண்டுகளில் தங்களுக்குக் கிடைத்த அனுபவங்களைப் பகிர்ந்து கொண்ட, காசநோய் ஒழிப்புத் திட்டத்தில் பணியாற்றும் மேம்பாட்டு பங்காளர்கள், உத்தேசிக்கப்பட்டுள்ள மக்கள் இயக்கத்திற்கு ஆதரவாக செயல்படுவதற்கான திட்டங்களை முன்வைத்தனர்.

மத்திய சுகாதாரத் துறை செயலாளர் ராஜேஷ் பூஷண், கூடுதல் செயலாளர் (சுகாதாரம்) ஆர்த்தி அஹுஜா, டி.ஜி.எச்.எஸ். டாக்டர் சுனில்குமார், அமைச்சகத்தின் பிற மூத்த அதிகாரிகள் இந்த ஆய்வுக் கூட்டத்தில் கலந்து கொண்டனர். உலக சுகாதார நிறுவனத்தின் இந்தியப் பிரதிநிதி டாக்டர் ரோட்ரிகோ ஒஃப்ரின் மற்றும் பி.எம்.ஜி.எப்., யு.எஸ். எய்ட் போன்ற மேம்பாட்டு பங்காளர் அமைப்புகளின் பிரதிநிதிகளும் இந்த ஆய்வில் பங்கேற்றனர்.

Related Stories: