வெளிநாடுகளில் இருந்து ரூ.1331 கோடி நிலக்கரி இறக்குமதி டெண்டர் அறிவிப்பு தொடர்பாக பதிலளிக்க மின்வாரியத்துக்கு ஐகோர்ட் நோட்டீஸ்..!!

சென்னை: நிலக்கரி டெண்டர் வழக்கு தொடர்பாக மின்வாரியத்துக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டிருக்கிறது. நிலக்கரி இறக்குமதி டெண்டர் அறிவிப்பு தொடர்பாக விசாரணை நடத்தக்கோரி தொடர்ந்த வழக்கில் ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு மின்வாரியத்தின் முன்னாள் உதவி பொறியாளரும் டேக்ஸ் இந்தியா என்ற அமைப்பினுடைய நிர்வாகியுமான செல்வராஜ் என்பவர் நிலக்கரி டெண்டர் குறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றினை தாக்கல் செய்திருந்தார்.

அதில் நிலக்கரி இறக்குமதியில் தற்போது மின்பகிர்மான கழகம் டெண்டர் ஒன்றினை வெளியிட்டுள்ளதாகவும் கடந்த ஜனவரி 18ம் தேதி இந்த டெண்டர் அறிவிப்பு வெளியானதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார். 20 லட்சம் டன் நிலக்கரியை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்வதற்காக அறிவிக்கப்பட்ட டெண்டர் என்பது ஒரு தன்னிச்சையானது, சட்டவிரோதமானது என்று குறிப்பிட்டிருக்கிறார். குறிப்பாக டெண்டர் வெளிப்படை சட்டத்திற்கு எதிரானது என்றும் விதிமுறைகள் மீறப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார். 2 கோடி ரூபாய்க்கு மேல் உள்ள டெண்டருக்கு 30 நாட்கள் வரை கால அவகாசம் தர வேண்டும்.

அனால் இதில் வெறும் 15 நாட்கள் மட்டுமே கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாகவும் மனுவில் தெரிவித்திருந்தார். மேலும் நிலக்கரி இறக்குமதி நிறுவனங்கள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பான உண்மை உயர்நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருப்பதையும் சுட்டிக்காட்டினார். நமது நாட்டிலேயே போதுமான அளவு நிலக்கரி உள்ள நிலையில் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்ய வேண்டிய அவசியம் இல்லை என்றும் மனுவில் தெரிவித்திருக்கிறார்.

தற்போது மின்பகிர்மான கழகம் அறிவித்துள்ள டெண்டர் ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்டுவிட்டதாகவும், இந்த டெண்டர் இந்தோனேசியர் கம்பெனிக்கு சாதகமாக விடப்பட்டுள்ளதாகவும் மனுவில் குற்றம்சாட்டியிருந்தார். இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சுப்பையா அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அச்சமயம் வெளிநாடுகளில் இருந்து 1,330 கோடி நிலக்கரி இறக்குமதி டெண்டர் அறிவிப்பு தொடர்பாக ஒரு வாரத்தில் பதிலளிக்க மின்வாரியத்துக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Related Stories: