ரூ.6.42 கோடி செலவில் புனரமைக்கப்பட்ட வ.உ.சி. பூங்கா பயன்பாட்டிற்கு வருமா?.. பொதுமக்கள் எதிர்பார்ப்பு

ஈரோடு: ஈரோடு ரூ.6.42 கோடி மதிப்பீட்டில் புனரமைக்கப்பட்டு அமைச்சர் செங்கோட்டையன் திறந்து வைத்த வ.உ.சி. சிறுவர் பொழுது போக்கு பூங்காவினை உடனடியாக பயன்பாட்டிற்கு விட வேண்டும் என மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

ஈரோடு மாநகரில் வ.உ.சி. பூங்கா 10 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இதில், பொழுது போக்கு பூங்காவில் கடந்த காலங்களில் மான், மயில், புலி சிறுவர் ரயில், அறிவியல் பூங்கா, தாமரைக்குளம், புல்வெளி, வானுயர்ந்த மரங்கள் பறவைகள் உள்ளிட்ட வன விலங்குகள் சரணாலயம் போல இருந்தது. மாநகர மக்கள் மட்டுமின்றி சுற்றுப்புற பகுதியை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் தினமும் பூங்காவிற்கு சுற்றுலா பயணிகள் போல வந்து சென்றனர்.

ஆனால், அப்போது இருந்த நகராட்சி அதிகாரிகள், பணியாளர்களின் அலட்சியத்தினால், பூங்காவை முறையாக பராமரிக்கவில்லை. இதன்காரணமாக, பூங்காவில் இருந்த புள்ளி மான்கள் ஒவ்வொன்றாக இறந்தன. உணவு தீனி இல்லாமல் தவித்த அரிய வகை விலங்குகளான புலி, கடமான் போன்றவை மீட்கப்பட்டு சென்னை வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு அனுப்பப்பட்டது. சிறுவர் ரயில் நிறுத்தப்பட்டதாலும், செயற்கை நீரூற்று பயன்பாடு இல்லாமலும் போனது. பொழுது போக்கு பூங்கா அருகில் அமைந்திருந்த சிறுவர் பூங்காவில் மழைக்காலங்களில் மழை நீர் தேங்கி குட்டை போல் காணப்பட்டது. மேலும், பூங்காவில் இருந்த விளையாட்டு உபகரணங்கள் உடைந்து பழுதாகியது.

இதனால், பொழுது போக்கு மற்றும் சிறுவர் பூங்காவில் எவ்வித வசதிகளும் செய்யப்படாததால், பொதுமக்களின் வருகை அடியோடு நின்றது. இதனால், இந்த இரண்டு பூங்காக்களும் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறியது. ஈரோடு மாநகரம் பல்வேறு வளர்ச்சியடைந்தும், பொதுமக்களுக்கு எவ்வித பொழுது போக்கு தளமும் இல்லாததால் மக்கள் விரக்தி அடைந்து வந்தனர். இதையடுத்து, வ.உ.சி. பொழுதுபோக்கு பூங்கா, சிறுவர் பூங்காவை சீரமைத்து தர வேண்டும் என மாநகர மக்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வந்தனர். இந்த கோரிக்கையை ஏற்ற மாநகராட்சி நிர்வாகம், மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் வ.உ.சி. பொழுதுபோக்கு பூங்கா, சிறுவர் பூங்காவை மேம்படுத்த ரூ.6.42 கோடி நிதி ஒதுக்கீடு செய்தது.

இந்த நிதியில், கடந்த 3 ஆண்டுகளாக சிறுவர், பொழுது போக்கு பூங்காவில் மேம்பாட்டு பணிகள் நடந்து வந்தது. இதில், புதிய செயற்கை நீரூற்று, சிறுவர்களுக்கான ரயில், புட்கோர்ட், மூலிகை செடிகள், அழகிய மலர் தோட்டங்கள், நடைபாதைகள், குழந்தைகளுக்கான விளையாட்டு உபகரணங்கள் போன்றவை அமைக்கப்பட்டது. இதனை கடந்த வாரம் ஈரோடு கலெக்டர் கதிரவன் தலைமையில் அமைச்சர் செங்கோட்டையன் திறந்து வைத்தார். ஆனால், திறக்கப்பட்டு ஒரு வாரத்திற்கு மேலாகியும் இன்னும் மக்கள் பயன்பாட்டிற்கு மாநகராட்சி நிர்வாகம் விடவில்லை. இதனால், உடனடியாக பூங்காக்கள் இரண்டினையும் மக்கள் பயன்பாட்டிற்கு விட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது குறித்து ஈரோடு மாநகராட்சி ஆணையாளர் இளங்கோவன் கூறுகையில்,`வ.உ.சி. பொழுது போக்கு மற்றும் சிறுவர் பூங்காவில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மேம்பாட்டு பணிகள் நிறைவு பெற்றுள்ளது. பூங்காவுக்கு வரும் சாலைகளில் திட்டப்பணிகள் கடந்த வாரம் தான் நிறைவடைந்தது. புதிய தார்ச்சாலை அமைக்க டெண்டர் விடப்பட உள்ளது. அதேபோல், பூங்கா திறக்கப்பட்டாலும் எலக்ட்ரிக்கல் பணிகள் நடந்து வருகிறது. அந்த பணிகள் நிறைவடைந்ததும் பூங்காவினை தனியாருக்கு டெண்டர் விட்டு அவர்கள் மூலம் பராமரிக்கப்படும். பூங்காவுக்கு அரசு நிர்ணயித்த கட்டணம் மட்டும் மக்களிடத்தில் வசூல் செய்யப்படும். இன்னும் சாலைப்பணிகள், பூங்கா டெண்டர் பணிகள் முடிந்ததும் அடுத்த 10 நாட்களுக்குள் மக்கள் பயன்பாட்டிற்கு விடப்படும்’ என்றார்.

Related Stories: