தமிழக சட்டமன்ற தேர்தல் தொகுதி பங்கீடு தொடர்பாக திமுக - காங்கிரஸ் நிர்வாகிகள் பேச்சுவார்த்தை!: முக்கிய அறிவிப்பு வெளியாகும் என தகவல்..!!

சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தல் தொகுதி பங்கீடு தொடர்பாக திமுக - காங்கிரஸ் நிர்வாகிகள் சென்னை அண்ணா அறிவாலயத்தில் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர். தமிழகம் மற்றும் புதுவைக்கான சட்டமன்ற தேர்தல் விரைவில் நடைபெறவுள்ளது. இதற்கான தேதி அறிவிக்கப்படவுள்ள சூழலில் அரசியல் கட்சிகளும் தங்களது கூட்டணிக்கான பேச்சுவார்த்தையில் மும்முரம் காட்டி வருகின்றனர். அதன் அடிப்படையில்  திமுக-வுடன் கூட்டணி அமைத்துள்ள காங்கிரஸ் கட்சி தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தையை அண்ணா அறிவாலயத்தில் நடத்தி வருகிறது.

பேச்சுவார்த்தைக்கு திமுக சார்பில் பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, முதன்மை செயலாளர் கே.என். நேரு, மகளிரணி செயலாளர் கனிமொழி, செய்தித்தொடர்பு செயலாளர் டி.கே.எஸ். இளங்கோவன், ஆர்.எஸ். பாரதி உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். காங்கிரஸ் சார்பில் தமிழக பிரதிநிதி தினேஷ் குண்டுராவ் மற்றும் சிறப்பு பிரதிநிதிகளான கேரள மாநிலத்தின் முன்னாள் முதல்வர் உமன்சாண்டி, அகில இந்திய செய்தி தொடர்பாளரும், பொதுச்செயலாளராகவும் உள்ள ரந்தீப் சீங் சுஜ்வாலா, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவர் கே. ராமசாமி ஆகியோர் பெங்கேற்றுள்ளனர்.

இது முதற்கட்ட பேச்சுவார்த்தை. இந்த பேச்சுவார்த்தையின் போது காங்கிரஸ் கட்சி எத்தனை தொகுதிகளில் திமுக கூட்டணியுடன் இணைந்து போட்டியிட வேண்டும் என்ற விருப்பத்தை அவர்கள் தெரிவிப்பார்கள். கடந்த 2011ம் ஆண்டில் நடந்த பேச்சுவார்த்தையின் போது திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 63 இடங்கள் ஒதுக்கப்பட்டது. அதற்கடுத்த 2016ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலின் போது காங்கிரஸ் கட்சிக்கு 41 இடங்கள் வழங்கப்பட்டன. இந்நிலையில் இந்த தேர்தலில் 40 தொகுதியை பெற்றாக வேண்டும் என்ற எண்ணத்தில் இந்த பேச்சுவார்த்தையை நடத்தி வருகின்றனர். திமுக தலைவர்களுடனான பேச்சுவார்த்தை அடுத்து சத்யமூர்த்திபவனில் காங்கிரஸ் நிர்வாகிகள் ஆலோசனை நடத்த உள்ளனர்.

Related Stories: