ஈக்வெடாரில் ஒரே நேரத்தில் 3 சிறைகளில் சிறை கைதிகள் பயங்கர மோதல்!: 80 கைதிகள் கொல்லப்பட்டதால் பதற்றம்..!!

ஈக்வெடார்: ஈக்வெடார் நாட்டில்  ஒரே நேரத்தில் 3 சிறைகளில் ஏற்பட்ட பயங்கர கலவரத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 80 ஆக அதிகரித்துள்ளது. ஈக்வெடாரில் உள்ள சிறைகளில் அளவுக்கு அதிகமான கைதிகளை அடைத்து வைப்பதால் கைதிகள் குழுக்களாக பிரிந்து வன்முறைகளில் ஈடுபடுவது தொடர்ந்து வருகிறது. இந்நிலையில் ஈக்வெடாரில் உள்ள முக்கியமான 3 சிறைகளில் கைதிகள் திடீரென வன்முறையில் ஈடுபட்டனர். சக கைதிகள் மற்றும் சிறை அதிகாரிகள் மீது கொடூரமாக தாக்குதல் மேற்கொண்ட வன்முறை கும்பல் சிறைக்கும் தீ வைத்தனர்.

கலவரத்தை ஒடுக்க சிறை அதிகாரிகள் மேற்கொண்ட முயற்சி பலன் அளிக்கவில்லை. குவாயாகுவில் என்ற இடத்தில் உள்ள சிறையில் ஏற்பட்ட கலவரத்தில் 20க்கும் மேற்பட்ட கைதிகளை மற்றொரு பிரிவினர் தலையை துண்டித்து கொடூரமாக கொன்றுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த தகவல் பரவியதை அடுத்து டுவெண்கா நகர சிறைச்சாலையிலும் பயங்கர கலவரம் ஏற்பட்டது. இதில் 33 கைதிகள் கொல்லப்பட்டனர். 75க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

இது தவிர ஈக்வெடாரின் மத்திய பகுதியான லடாக்விபா என்ற சிறைச்சாலையில் கைதிகள் திடீர் வன்முறையில் ஈடுபட்டு ஒருவரை ஒருவர் பயங்கர ஆயுதங்களை கொண்டு தாக்கி கொண்டதில் 12 பேர் உயிரிழந்தனர்.

இந்த 3 சிறை கலவரங்களிலும் படுகாயம் அடைந்துள்ள 200 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். 3 கலவரங்களிலும் கொல்லப்பட்டவர்கள் எண்ணிக்கை 80 ஆக அதிகரித்துள்ளதாக ஈக்வெடார் சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர். வன்முறை மற்ற சிறைகளுக்கும் பரவாமல் தடுக்கும் பணியில் துணை ராணுவ படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளார்கள்.

Related Stories:

>