கேரளா, மகாராஷ்டிராவில் இருந்து தமிழகம் வருவோர் கட்டாயம் 7 நாள் வீட்டில் தனிமைப்படுத்த வேண்டும்: புதிய நெறிமுறைகளை வெளியிட்டது தமிழக அரசு

சென்னை: கேரளா, மகாராஷ்டிராவில் இருந்து தமிழகம் வருவோர் கட்டாயம் 7 நாள் வீட்டில் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என்று தமிழக அரசு புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. வெளிநாடுகளில் இருந்து வரும் அனைவருக்கும் கொரோனா சோதனை கட்டாயம் உட்கொள்ள வேண்டும் எனவும் கூறியுள்ளது. வெளிநாடுகளில் இருந்து வருபவர்கள் 3 நாட்களுக்குள் கொரோனா பரிசோதனை செய்து முடிவுகளை ஆன்லைனில் பதிவேற்ற வேண்டும் என அறிவுறுத்தல் செய்யப்பட்டுள்ளது. சோதனை முடிவை www.newdelhiairport.in என்ற தளத்தில் அப்லோட் செய்திருக்க வேண்டும் என கூறியுள்ளது. வெளி மாநிலங்களில் இருந்து வருபவர்களுக்கு அறிகுறி இருந்தால் கொரோனா சோதனை கட்டாயம் எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளது.

ஒரே தெருவில் 3 வீடுகளில் கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டால் அந்த பகுதி கட்டுப்பாட்டு பகுதியாக மாற்றம் செய்ய வேண்டும் என அறிவித்துள்ளது. 14 நாட்கள் கட்டுப்பாடு பகுதியாக அறிவிக்கப்பட்டு தடுப்பு பணிகள் மேற்கொள்ளப்படும் என தெரிவித்துள்ளது. இந்தியாவில் கடந்த சில மாதங்களாக கொரோனா பாதிப்பு குறைந்து வந்தது. இதனால் ஊரடங்கு தளர்வுக்கு பின் மக்கள் தற்போது இயல்பு நிலைக்கு திரும்பி வருகின்றனர். இதனிடையே கடந்த சில நாட்களாக மகாராஷ்டிரா, கேரளா, பஞ்சாப், சத்தீஷ்கார், மத்திய பிரதேசம் போன்ற மாநிலங்களில் கொரோனா எண்ணிக்கை திடீரென அதிகரித்து வருகிறது. இதனால் அந்தந்த மாநிலங்களில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த அந்த மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

Related Stories:

>