எம்எல்ஏ பேச்சால் முகம் சுழிச்ச பெண்கள்

தர்மபுரி பாலக்கோடு தொகுதியில் மாற்று கட்சிகளை சேர்ந்த மகளிர் அமைப்புகள், அதிமுகவில் இணையும் நிகழ்ச்சி நடந்தது. அமைச்சர் அன்பழகன் முன்னிலையில் பாப்பிரெட்டிப்பட்டி தொகுதி எம்எல்ஏ கோவிந்தசாமியும் கலந்துகிட்டாரு. கட்சியில் சேர்ந்த பெண்களுக்கு அதிமுக கரையுடன் இரட்டை இலை சின்னம் போட்ட சேலையை அமைச்சர் கொடுத்தாரு. நிகழ்ச்சி முடிஞ்சதும் மைக்கை பிடித்த எம்எல்ஏ, ‘‘இந்த சேலையை இப்போது யாரும் கட்டாதீங்க. எலக்‌ஷன் அன்னைக்கு ஜம்முன்னு இருக்கிற நீங்க எல்லாரும் கும்முன்னு சேலையை கட்டிகிட்டு வந்து நம்ம கட்சிக்கு ஓட்டுப் போடுங்க,’’ என்றாராம். எம்எல்ஏ இப்படியா பேசுறதுன்னு அங்கிருந்த பெண்கள் முகம் சுழிச்சாங்களாம்.

* கோவை தெற்கு தொகுதி பாஜ தேசிய தலைவிக்கா? அதிமுக மாசெக்கா?

கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ.வாக அ.தி.மு.க.வை சேர்ந்த அம்மன் கே.அர்ச்சுனன் உள்ளார். இவர், கோவை மாநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளராக உள்ளார். இவர், கடந்த 2016 சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் மயூரா ஜெயக்குமாரை 17,419 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி கண்டார். வரும் சட்டமன்ற தேர்தலிலும் இத்தொகுதியில் இவரே அ.தி.மு.க. சார்பில் களம் இறங்க ஏற்பாடு செய்து வருகிறார். ஆனால், அ.தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாரதிய ஜனதா, இத்தொகுதியை கைப்பற்றி விடவேண்டும் என துடிக்கிறது.

கடந்த தேர்தலில், இதே தொகுதியில் பா.ஜ. வேட்பாளராக  களமிறங்கிய வானதி சீனிவாசன், மீண்டும் இதே தொகுதியில் களம் இறங்க, கட்சியின்  மேலிடத்திற்கு அழுத்தம் கொடுத்து வருகிறார். இவர், தற்போது பா.ஜ. மகளிர் பிரிவில் தேசிய தலைவி ஆகிவிட்டதால், இவரால் எளிதில் கட்சியின் மேலிடத்தை, சம்மதிக்க வைக்க முடியும் என்ற நிலை உள்ளது. ஆனால், சிட்டிங் தொகுதியை இழக்க அ.தி.மு.க.வுக்கு விருப்பம் இல்லை. இந்த மல்லுக்கட்டு, அ.தி.மு.க.-பா.ஜ. தொண்டர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இத்தொகுதி தேசிய தலைவிக்கா? அல்லது மாநகர செயலாளருக்கா? என்ற எதிர்பார்ப்பு எகிறியுள்ளதால் அ.தி.மு.க. கூட்டணியில் அனல் பறக்க துவங்கியுள்ளது.

Related Stories: