ராகுலை கிண்டலடிக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்

கேரளாவில் சமீபத்தில் காங்கிரஸ் சார்பில் நடத்தப்பட்ட ஐஸ்வர்ய கேரளா யாத்ராவில், வயநாடு தொகுதி எம்பி. ராகுல் காந்தி பங்கேற்று பேசினார். இது குறித்து மார்க்சிஸ்ட் கட்சி வெளியிட்ட அறிக்கையில், `ராகுல் காந்தி ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியின் மீது மட்டுமே குற்றம் சாட்டினார். மத்தியில் ஆளும் பாஜ அரசு பற்றி எதுவுமே பேசவில்லை. அவரது இந்த செயல், காங்கிரஸ் எம்எல்ஏ.க்களுக்கு ஊக்கமளிப்பது போல இருக்கிறது போலும். அதனால்தான், அவர்கள் பாஜ.வில் இணைகின்றனர். ஐக்கிய முற்போக்கு முன்னணியின் எந்த கூட்டத்திலும், பாஜ.வை விமர்சிக்க கூடாது என்பது மேலிடத்து உத்தரவோ?’ என்று கேட்டு கிண்டல் அடித்துள்ளது. மேலும், ‘தங்க கடத்தல் வழக்கு பற்றி பேசும் ராகுல், தானும் நிதி மோசடி வழக்கு ஒன்றில் ஜாமீனில் வெளியே வந்திருப்பதை மறந்து விட வேண்டாம்,’ என்று அந்த அறிக்கையில் அவரை விமர்சித்துள்ளது.

* பாஜ.வை தடுக்க கோல் கீப்பராக மாறுகிறார் மம்தா

மேற்கு வங்கத்தில் 3வது முறையாக ஆட்சியை பிடிக்க முயற்சித்து வரும் முதல்வர் மம்தா பானர்ஜிக்கு, பாஜ சிம்ம சொப்பனமாக இருந்து வருகிறது. அவருக்கு எந்தெந்த வகையில் குடைச்சல் கொடுக்க முடியுமோ, அந்தந்த வகையில் செய்து கொண்டிருக்கின்றனர் பாஜ தலைவர்கள். மம்தாவுக்கு நெருங்கிய சொந்தங்கள் மீது சிபிஐ, வருமான வரித்துறை ஏவி விடப்பட்டுள்ளது. இருந்தாலும், அசராமல் இருக்கிறார் மம்தா. இத்தேர்தலில் பாஜ எவ்வளவுதான் முயன்றாலும், அதை வெற்றிப் பெற விட மாட்டேன் என கர்ஜித்துக் கொண்டிருக்கிறார்.

ஹூக்ளியில் நடந்த ஒரு பிரசார கூட்டத்தில் நேற்று பேசிய மம்தா, ‘‘அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்புக்கு ஏற்பட்டதை விட மோசமான கதி, பிரதமர் மோடிக்கு காத்திருக்கிறது. இந்த தேர்தலில் நான் கோல்கீப்பராக இருப்பேன், பாஜ.வை ஒரு கோல் கூட அடிக்க விட மாட்டேன். எந்த மோடியும், குஜராத்தும் மேற்கு வங்கத்தை ஆள முடியாது. மேற்கு வங்கம் மட்டுமே, மேற்கு வங்கத்தை ஆள முடியும்,’’ என்று விளாசினார். மேற்கு வங்க மண்ணின் மகளாகிய தான் மட்டுமே, இந்த மாநிலத்தை ஆள வேண்டும் என்பதைதான் மம்தா இப்படி குறிப்பிட்டார்.

* நாட்டுக்கு ரொம்ப முக்கியமா? ஆமா, ரொம்ப முக்கியம்தான்

அசாமில் அனல் பறக்கும் அரசியல் பரபரப்புக்கு இடையில், கலகலப்புக்கும் பஞ்சமின்றி இருக்கிறது. சமீபத்தில், மஜூலியில் நடந்த பிரசார கூட்டத்தில் பேசிய இந்தி நடிகர் விவேக் ஓபராய். ‘முதல்வர் ‘சர்பானந்த சோனாவால் எனக்கு மூத்த சகோதரரை போன்றவர். முதல்வராக இருந்த போதும் அவருடைய எளிமையையும், நேர்மையையும் பார்த்து வியந்திருக்கிறேன். அசாம் மக்களுக்காக அர்ப்பணிப்போடும் கடமை உணர்வுடனும் உழைக்கிறார். அவரிடம் எனக்கு புரியாதது ஒரே விஷயம்தான். சினிமா ஹீரோவை போல் அழகாக இருக்கிறார். ஆனால், ஏன் இன்னும் சிங்கிளாகவே இருக்கிறார் என்று தெரியவில்லை,’’ என்றார். அவருடைய இந்த திடீர் கேள்வியால் முதலில் திகைத்து, பின்பு ஒட்டு மொத்த கூட்டமும் கலகலப்பானது. முதல்வரோ வெட்கத்தில் நெளிந்தார். ‘இது நாட்டுக்கு ரொம்ப முக்கியமா?’ என்று எதிர்க்கட்சிகள் இதை கிண்டலடிக்க, ‘அசாம் மக்களையே தன் குடும்பமாக முதல்வர் நினைப்பதால் இது எல்லோருக்கும் தெரிய வேண்டிய முக்கியமான விஷயம்தான்’ என்று பாஜ.வினர் பதிலடி கொடுத்து வருகின்றனர்.

* இளசுகளை களமிறக்க தயாராகும் காங்கிரஸ்

புதுச்சேரியில் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் கூட்டணி ஆட்சி பறிபோன நிலையில் அக்கட்சி தலைவர்களும், தொண்டர்களும் கொந்தளிப்பில் உள்ளனர். இதனால், கட்சியில் உள்ள விசுவாசிகளுக்கு முன்னுரிமை அளிப்பது, கோஷ்டி பூசலை ஒழித்து ஒற்றுமையாக தேர்தலை எதிர்கொள்ளும் முடிவுகளை கட்சித் தலைமை எடுத்துள்ளது. குறிப்பாக, எதிர்க்கட்சிகளின் ஆட்சி கவிழ்ப்பு நடவடிக்கை காரணமாக ஏற்பட்டுள்ள அனுதாபத்தை வாக்குகளாக மாற்றுவதற்கான பிரசார வியூகங்கள் வகுக்கப்பட்டு வருகின்றன. அது மட்டுமின்றி, தற்போது ஓட்டம் பிடித்த அமைச்சர்கள், எம்எல்ஏ.க்களின் தொகுதிகளில் போட்டியிடுவதற்காக மட்டுமின்றி, அவர்களை தோற்கடிப்பதற்கான பலமுள்ள வேட்பாளர்களையும் தயார்படுத்தும் பணிகளையும் முடுக்கி விட்டுள்ளது. குறிப்பாக, இளசுகளை அதிகளவில் களமிறங்க காங்கிரஸ் தலைமை முடிவு எடுத்திருக்கிறது என்ற தகவல், புதுச்சேரியில் உலா வந்து கொண்டிருக்கிறது.

Related Stories: