நல்ல காலம் பொறக்குது... நல்ல காலம் பொறக்குது... குடுகுடுப்பைக்காரன் வேடத்தில் வாக்கு சேகரிப்பு

நல்ல காலம் பொறக்குது... உதயசூரியனுக்கு ஓட்டு போடுங்க... என திமுக தொண்டர் ஒருவர் குடுகுடுப்பைக்காரன் வேடத்தில் ஆவடி தொகுதியில் வாக்கு சேகரித்து வருகிறார். இந்த நூதன முறையிலான தேர்தல் பிரசாரம், அனைத்து தரப்பு பொதுமக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கிறது. இதையடுத்து, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், முதல்வர் எடப்பாடி பழனிசாமி உள்பட எதிர்கட்சி தலைவர்கள் தமிழகம் முழுவதும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக, திமுகவினர் பொதுமக்களை நேரடியாக சந்தித்து, அதிமுக ஆட்சியின் அவலங்களை எடுத்துரைத்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும், இவர்கள் கிராமசபை கூட்டம், உங்கள் தொகுதியில் ஸ்டாலின், ஸ்டாலின்தான் வரப்போறாரு.. விடியலை தரப்போறாரு என பல்வேறு யுக்திகளை கடைபிடித்து மக்களை சந்தித்து வருகின்றனர். இதுதவிர திமுக தொண்டர்கள் பலரும் பல்வேறு வகையில் பொதுமக்களை சந்தித்து தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். இதற்கிடையில், திமுக தேர்தல் பிரசாரம் பொதுமக்களை கவரும் வகையில், ஆவடி தொகுதிக்கு உட்பட்ட திருநின்றவூர், நெமிலிச்சேரி, நடுகுத்தகை, ஆவடி, பட்டாபிராம், திருமுல்லைவாயல், திருவேற்காடு ஆகிய பகுதிகளில் குடுகுடுப்பைக்காரன் வேடத்தில் கருப்பு பனியன், சிவப்பு வேட்டி அணிந்து திமுக தொண்டர் ஒருவர் கையில் குடுகுடுப்பை அடித்தபடி பொதுமக்களிடம் உதயசூரியனுக்கு வாக்கு சேகரித்து வருகிறார்.

அப்போது, அவர், ‘‘நல்ல காலம் பொறக்க போகுது... நல்ல காலம் பொறக்க போகுது... உதயசூரியனுக்கு ஓட்டு போடுங்க... நாடு நாடாக இருக்கணும், வீடு வீடாக இருக்கணும் உதயசூரியனுக்கு ஓட்டு போடுங்க. விலைவாசி, ஜி.எஸ்.டி கம்மியாக வேணும்னா உதயசூரியனுக்கு ஓட்டு போடுங்க. நகைக்கடன், கல்விக்கடன் ரத்தாகணுமா உதயசூரியனுக்கு ஓட்டு போடுங்க. காஸ், பெட்ரோல், டீசல் விலை கம்மியாக உதயசூரியன் ஓட்டு போடுங்க. ஜக்கம்மா சொல்றா ஜக்கம்மா சொல்றா... உதயசூரியனுக்கு ஓட்டு போட சொல்றா... ஒரு குடும்பத்திற்கு 6 ஆயிரம் வேணும்னா, நாடு நாசமாகாமல், வீடு வீதிக்கு வராமல், பிள்ளைகள், தொழில், சொந்த பந்தங்கள் நல்லா இருக்கணும்னா உதயசூரியனுக்கு ஓட்டு போடுங்க ஜக்கம்மா சொல்றா...’’ என்றபடி குடுகுடுப்பை அடித்து கடைவீதி, குடியிருப்பு, மார்க்கெட், பஸ், ரயில் நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் திமுகவுக்கு வாக்கு சேகரித்து வருகிறார்.

* எதிர்கட்சி தொகுதி என்பதால் புறக்கணிப்பு: பழையனூர் கிராமத்தை சேர்ந்த கே.வாசுதேவன்

திமுக எம்எல்ஏ என்பதாலேயே மதுராந்தகம் சட்டமன்ற தொகுதி தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருகிறது. நகராட்சியில் பாதாள சாக்கடை அமைக்க வேண்டும் என்பது பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கை. ஆனால் இதுவரையில் அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. மதுராந்தகம் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் 5 ஆண்டுகளாக ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் 350க்கும் மேற்பட்டோர் தற்போது வரை நிரந்தரம் செய்யப்படவில்லை. இதுகுறித்து தொழிலாளர்கள் சர்க்கரை ஆலையின் சேர்மனாக இருக்கும் மதுராந்தகம் ஒன்றிய அதிமுக செயலாளர் மற்றும் அரசு அதிகாரிகளிடம் பலமுறை கோரிக்கை வைத்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இப்பகுதியில் விவசாயிகளின் நெல் மூட்டைகளை பாதுகாக்க அரசு சார்பில் நெல் கொள்முதல் நிலையம் அமைந்துள்ள இடங்களில் கட்டிடம் கட்டித்தர வேண்டும் எனவும் பலமுறை கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால் இன்றுவரை எவ்வித நடவடிக்கையும் இல்லை.

Related Stories: