வாக்குறுதிகள் எல்லாம் அம்பேல்! தொகுதி பக்கமும் வராமல் எம்எல்ஏ எஸ்கேப்... - நாகை தொகுதி எம்எல்ஏ தமிமுன் அன்சாரி

மயிலாடுதுறை தனி மாவட்டமாக உருவானதால் மயிலாடுதுறை, பூம்புகார், சீர்காழி ஆகிய 3 தொகுதிகள் மயிலாடுதுறை மாவட்டத்திற்கும், நாகை, கீழ்வேளூர், வேதாரண்யம் ஆகிய 3 தொகுதிகள் நாகை மாவட்டத்திற்குள்ளும் உள்ளது. தேர்தலை பொறுத்தவரை தேர்தல் நடத்தும் அதிகாரியாக நாகை மாவட்ட கலெக்டரே இருந்து வருகிறார். தேர்தல் ஆணையம் மயிலாடுதுறைக்கு என்று தனியாக தேர்தல் நடத்தும் அதிகாரியை நியமித்து அறிவிக்கும் வரை நாகை மாவட்டத்திற்குள்ளேயே நாகை, கீழ்வேளூர், வேதாரண்யம், மயிலாடுதுறை, பூம்புகார், சீர்காழி என்ற 6 சட்டமன்ற தொகுதிகளும் இருக்கும்.

நாகை சட்டமன்ற தொகுதியின் பிரதான தொழிலாக மீன்பிடி தொழில், விவசாயம் இருந்து வருகிறது. இதில் 50 சதவீத மக்கள் வேளாண்மை தொழிலும், 30 சதவீத மக்கள் மீன்பிடி தொழில் சார்ந்த வேலைகளில் ஈடுபடுகின்றனர். 20 சதவீத மக்கள் வணிக தொழில் செய்து வருகின்றனர். நாகை சட்டமன்ற தொகுதியில் தற்போது 1,97,316 பேர் உள்ளனர். இதில் ஆண்கள் 95,558, பெண்கள் 1,01,748, இதர 10 பேர் என கூடுதலாக பெண் வாக்காளர்கள் அதிகம் கொண்ட தொகுதியாகவும் நாகை உள்ளது. நாகை சட்டமன்ற தொகுதியில் எம்எல்ஏவாக அதிமுக கூட்டணியில் போட்டியிட்ட மனிதநேய ஜனநாயக கட்சியை சேர்ந்த தமிமுன் அன்சாரி உள்ளார்.

2016 சட்டமன்ற தேர்தலின் போது அதிமுக கூட்டணியில் போட்டியிட்டதால் இரட்டை இலை சின்னத்தில் தேர்தலை சந்தித்தார். இவரை எதிர்த்து திமுக கூட்டணியில் மனிதநேய மக்கள் கட்சியை சேர்ந்த முகமது ஜவஹருல்லா போட்டியிட்டார்.

ஒவ்வொரு தேர்தலிலும் நாகை தொகுதிக்கு என்னென்ன தேவை என அதிமுக வேட்பாளர்கள் அளிக்கும் வாக்குறுதிகளையே தற்போது எம்எல்ஏ ஆக உள்ள தமிமுன் அன்சாரியும் அள்ளி வீசினார். ஆனால் தேர்தலில் வெற்றி பெற்று எம்எல்ஏ ஆனதும் தொகுதி பக்கமே வந்து எட்டிப் பார்க்கவில்லை.

இதனால் தேர்தல் வாக்குறுதிகளான நாகூர் தர்கா சுற்றுலா தலமாக்குதல், நாகையில் துறைமுகம் அமைப்பது, நாகை அக்கரைபேட்டை ரயில் மேம்பாலம் பணி, திருமருகல் தனி தாலுகாவாக மாற்ற திட்டம், நாகூர் வெட்டாற்றில் தடுப்பணை கட்டும் பணிகள் எதுவுமே நடக்கவில்லை. அப்படியே கிடப்பில் கிடக்கிறது. நாகூர் வெட்டாற்றின் கரையில் கொட்டப்படும் நாகை நகராட்சி குப்பை கிடங்குகள் அகற்றப்படாமல் மலைபோல் குவிந்து கிடப்பதால் நாகை நகர் முழுவதும் துர்நாற்றம் தான் வீசுகிறது. தொகுதி பக்கமே வராத சிட்டிங் எம்எல்ஏ என்கின்றனர் தொகுதி மக்கள்.

* ‘அள்ளி வீசிய வாக்குறுதிகள் இதுவரை நிறைவேற்றவில்லை’

2016ல் திமுக கூட்டணி சார்பில் போட்டியிட்ட முகமது ஜவஹருல்லா கூறும்போது, ‘தேர்தல் நேரத்தில் அதிமுகவுடன் கூட்டணி வைத்து வெற்றி பெற்ற தமிமுன் அன்சாரி பிரசாரத்தின்போது பல வாக்குறுதிகளை அள்ளி வீசினார். ஆனால் அதில் குறிப்பிட்டு சொல்லும்படி எதையும் இதுவரை நிறைவேற்றவில்லை. டெல்டா மாவட்டம் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் என முதல்வர் அறிவித்துள்ளார். ஆனால் நாகை மாவட்டத்தில் எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்கள் தங்களது பணிகளை இன்னும் செய்து கொண்டு தான் இருக்கிறது. நாகை தொகுதிக்குள் வருவது என்றாலே பயமாக உள்ளது. அந்த அளவிற்கு சாலைகள் படுமோசமாக உள்ளது. நாகூர் வெட்டாறு அருகே நகராட்சி சார்பில் கொட்டப்படும் குப்பைகள் எரிக்கப்படுவதால் நாகூர் பகுதியே புகை மண்டலமாகத்தான் காட்சி அளிக்கிறது’ என்றார்.

* ‘தொகுதிக்காக சட்டசபையில் குரல் கொடுத்தும் பயனில்லை’

நாகை தொகுதி எம்எல்ஏ தமிமுன் அன்சாரி கூறும்போது, ‘அதிமுக கூட்டணி சார்பில் மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றேன். தேர்தல் வெற்றி முடிந்த சில மாதங்களில் தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா மறைந்தார். இதன்பின்னர் எடப்பாடி பழனிசாமி முதல்வராக பொறுப்பேற்றார். மக்கள் நலன் சார்ந்த திட்டங்கள் வரும்போது ஆதரித்து பேசவும், மக்களுக்கு எதிரான திட்டங்கள் வரும்போது எதிர்த்து குரல் கொடுக்க நான் எப்பொழுதும் தயக்கம் காட்டியது இல்லை. பல போராட்டங்களுக்கு மத்தியில் நாகை தொகுதிக்கு நிறைய திட்டங்களை நிறைவேற்றியுள்ளேன். கடந்த 5 ஆண்டு காலமாக நாகை தொகுதி வளர்ச்சி பெற வேண்டும் என்பதற்காக பலமுறை சட்டசபையில் குரல் கொடுத்துள்ளேன். ஆனால் இதுவரை எந்த பயனும் இல்லை’ என்றார்.

* கட்சி தாவல் இப்படித்தான் துவங்கிச்சோ...!

1926, நவ. 8ல் சென்னை மாகாணத்திற்கு நடைபெற்ற தேர்தலில் மொத்தமுள்ள 98 இடங்களில் காங்கிரஸ் தலைமை அனுமதியுடன் உருவான சுயராஜ்ஜிய கட்சி 41 இடங்களிலும், நீதிக்கட்சி 21 இடங்களிலும், சுயேச்சைகள் 36 இடங்களிலும் வெற்றி பெற்றனர். எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை இல்லை. மறைமுகமாக ஆட்சி அமைக்கும் முயற்சியில் இறங்கியது சுயராஜ்ஜியக் கட்சி. நீதிக்கட்சி சார்பில் வெற்றி பெற்ற சுப்பராயனை அக்கட்சியிலிருந்து வெளியேற செய்து சுயேச்சை உறுப்பினர் ஆக்கினர். அதனைத் தொடர்ந்து அவர் ஆட்சி அமைக்க உரிமை கோரினார். அவருக்கு சுயராஜ்ஜியக் கட்சியினர் ஆதரவு கொடுத்தனர். நியமன உறுப்பினர்களின் ஆதரவும் சேர்த்துக் கொள்ள சுப்பராயன் முதல்வராக பதவியேற்றார். சுயராஜ்ஜியக் கட்சியின் அரங்கநாத முதலியார் இரண்டாவது அமைச்சராகவும், ஆரோக்கியசாமி முதலியார் மூன்றாவது அமைச்சராகவும் நியமிக்கப்பட்டனர். கட்சி தாவும் போக்குக்கு அடித்தளமிட்டது இந்தத் தேர்தலில் தான் என்பது வரலாறு.

Related Stories: