அதிமுக உடையாமல் இருக்க மூன்று அமைச்சர்கள் ஓபிஎஸ்சை சரிகட்டினோம்: அமைச்சர் வேலுமணி பேச்சு

சென்னை: திருவொற்றியூர் பகுதி அதிமுக சார்பில், பெரியார் நகரில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மற்றும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பங்கேற்று, 10 ஆயிரத்து 73 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி பேசினார். அவர் பேசியதாவது: நம்மிடம் இன்று ஜெயலலிதா இல்லை. ஆனால், அவர் வழங்கிய திட்டங்கள் ஒவ்வொரு இல்லத்திலும் உள்ளது. எம்.ஜி.ஆர் மறைந்தபோது, நம் கட்சிக்கு ஒரு சறுக்கல் ஏற்பட்டது. ஆனால் அவற்றை தகர்த்தெறிந்து, கட்சி மற்றும் ஆட்சியை ஜெயலலிதா காப்பாற்றினார். கடந்த 2016-ம் ஆண்டு தேர்தலில் ஜெயலலிதா வெளிநாடு சென்று சிகிச்சை பெற்றிருந்தால், இன்று உயிரோடு இருந்திருப்பார். ஆனால், நாங்கள் தேர்தலில் வெற்றி பெறவேண்டும் என்பதற்காக தீவிர பிரசாரம் செய்ததால், அவரது உடல்நிலை மோசமானது. ஜெயலலிதா மறைவுக்குப் பின் என்ன நடந்தது? அதிமுக இரண்டாக பிரிந்தது. இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டது. ஜெயலலிதா இறந்தபோது பிரச்னை ஏற்பட்டது. நானும் அமைச்சர்கள் தங்கமணி, சி.வி.சண்முகம் ஆகியோர் ஓபிஎஸ்சிடம் பேசி சரிசெய்துவிட்டோம் என்றார்.

Related Stories: