மருத்துவ மேற்படிப்பில் ஓபிசி இட ஒதுக்கீடு மறுக்கப்படுவது அநீதி: ராமதாஸ் அறிக்கை

சென்னை: பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கை: ஓபிசி இட ஒதுக்கீட்டுக்கு சென்னை உயர் நீதிமன்றமும் அதனால் அமைக்கப்பட்ட குழுவும் ஒப்புதல் அளித்து விட்ட நிலையில், மீண்டும் ஓபிசி இடஒதுக்கீடு மறுக்கப்பட்டிருப்பது மிகப்பெரிய சமூக அநீதியாகும். மருத்துவப் படிப்பு மற்றும் மருத்துவ மேற்படிப்புகளுக்கான அகில இந்திய தொகுப்பு இடங்களில் ஓபிசி இடஒதுக்கீடு வழங்கப்படாததால், கடந்த சில ஆண்டுகளில் மட்டும் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பு மாணவர்களுக்கு கிடைத்திருக்க வேண்டிய 11 ஆயிரத்திற்கும் கூடுதலான இடங்கள் பறிக்கப்பட்டன.

2020-21ம் ஆண்டில் 3758 ஓபிசி மாணவர்கள் மருத்துவக் கல்வி வாய்ப்புகளை இழந்துள்ளனர். 2021-22ம் ஆண்டிலும் ஓபிசி இட ஒதுக்கீடு மறுக்கப்பட்டால் 5 ஆயிரத்திற்கும் கூடுதலான ஓபிசி மாணவர்கள் மருத்துவக் கல்வி பயிலும் வாய்ப்பை இழப்பர். இது ஈடுசெய்ய முடியாத சமூக அநீதி. இந்த அநீதி தொடருவதை அனுமதிக்கக்கூடாது. எனவே, 2021-22ம் ஆண்டில் அகில இந்திய தொகுப்பு இடங்களில் ஓபிசி இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த வேண்டும்; அதற்கான திருத்த அறிவிப்பை தேசிய தேர்வு வாரியம் உடனடியாக வெளியிட வேண்டும்.

Related Stories: