திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோயில் தேரோட்டம் கோலாகலம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

திருவொற்றியூர்: திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோயில் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்தது. இந்த கோயிலுக்கு சென்னை மற்றும் புறநகர் பகுதியில் இருந்து தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து செல்கின்றனர். இக்கோயிலில் ஆண்டு தோறும் நடைபெறும் மாசி பிரமோற்சவ விழா நடைபெறும். இந்நிலையில், இந்த ஆண்டுக்கான மாசி பிரமோற்சவ விழா கடந்த 18ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வான தேர் திருவிழா நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. முன்னதாக அபிஷேக அலங்காரம் செய்யப்பட்டது. பின்னர் கோயில் வளாகத்தில் சந்திரசேகரர் - திருப்புரசுந்தரி தாயார் அலங்கரிக்கப்பட்ட தேரில் எழுந்தருளினர்.

தொடர்ந்து, காலை 10.20 மணிக்கு தேரோட்டம் தொடங்கியது. இதல், முன்னாள் எம்எல்ஏ கே.குப்பன், சமத்துவ மக்கள் கழக தலைவர் எர்ணாவூர் ஏ.நாராயணன், கே.கார்த்திக்  உட்பட ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். பின்னர் சன்னதி தெருவில் இருந்து தொடங்கிய தேரோட்டம் 108 கைலாய வாத்தியம் ஒலிக்க, சிவாச்சாரியார்கள் புடைசூழ சிலம்பாட்டம் பரதநாட்டியம், 108 சங்க நாதம் முழங்க 42 அடி உயரம் கொண்ட தேர் திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் 4 மாட வீதிகளை சுற்றி வந்து கோயிலை வந்தடைந்தது. தேரோட்டத்தை காண வந்த பக்தர்களுக்கு நீர்மோர் மற்றும் பழங்கள் வழங்கப்பட்டது. மேலும், மாசி திருவிழாவின் 9ம் நாள் உற்சவமான திருக்கல்யாணம் வரும் வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது. இதனைத்தொடர்ந்து 63 நாயன்மார்களின் வீதி புறப்பாடு உற்சவமும் நடைபெறுகிறது.

Related Stories: