நீட் தேர்வு ஆள் மாறாட்ட வழக்கில் முக்கிய குற்றவாளியை ஏன் இதுவரை கைது செய்யவில்லை? சிபிசிஐடிக்கு ஐகோர்ட் கிளை கேள்வி

மதுரை: கேரள மாநிலம், மலப்புரம் மாவட்டம் திரூர் - உன்னியாலைச் சேர்ந்த ரஷீத் (45) ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், ‘‘நீட் தேர்வில் நடந்த முறைகேடு தொடர்பாக விசாரித்து வரும் தேனி சிபிசிஐடி போலீசார், மாணவர்கள், பெற்றோர் பலரை கைது செய்தனர். இதில் எனக்கும் தொடர்புள்ளதாகக் கூறி கைது செய்துள்ளனர். எனக்கு இந்த மோசடியில் எந்த தொடர்பும் இல்லை. தவறாக எனது பெயரை வழக்கில் சேர்த்துள்ளனர். ஆள் மாறாட்டத்தில் ஈடுபட்டதாக 10 பேரின் புகைப்படங்கள் வெளியிட்டிருந்தாலும், இவர்கள்தான் ஈடுபட்டனர் என்பதற்கு சாட்சியம் போதுமானதாக இல்லை. கைதானவர்களின் தகவலின்பேரிலேயே பலரை கைது செய்துள்ளனர்.

ஜாமீன் கோரிய எனது மனு பிப்.16ல் தேனி மாவட்ட நீதிமன்றத்தில் தள்ளுபடியானது. இந்த வழக்கில் எனக்கு ஜாமீன் வழங்க வேண்டும்’’ என்று கூறியிருந்தார். இந்த மனுவை நேற்று விசாரித்த நீதிபதி நிர்மல்குமார், ‘‘ஆள் மாறாட்டத்தில் முக்கிய குற்றவாளியான தீபக் மற்றும் கிருஷ்ணாசிங் ஆகியோரை ஏன் இதுவரை கைது செய்யவில்லை? அவர்கள் எப்போது கைது செய்யப்படுவர். ஏற்கனவே கைதானவர்களை 3 நாட்கள் மட்டுமே காவலில் எடுத்து விசாரித்தது ஏன்? விசாரணையில் என்ன தகவல் கிடைத்துள்ளன. கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் எவை என்பது உள்ளிட்ட வழக்கின் தற்போதைய நிலை குறித்த அறிக்கையை, சிபிசிஐடி தரப்பில் தாக்கல் செய்ய வேண்டும்’’ என உத்தரவிட்டு விசாரணையை மார்ச் 10க்கு தள்ளி வைத்தார்.

Related Stories:

>