புதிய திட்டங்கள் தொடக்க விழா- பாஜ பொதுக்கூட்டம் பிரதமர் மோடி இன்று தமிழகம் வருகை: கோவை, புதுச்சேரி நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்

கோவை: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நடைபெறும் அரசு விழாக்களில் பிரதமர் மோடி இன்று கலந்து கொள்ள உள்ளார். இதற்காக, பிரதமர் நரேந்திரமோடி டெல்லியில் இருந்து சென்னை வருகிறார். பின்னர், சென்னையில் இருந்து தனி விமானம் மூலமாக புதுச்சேரி லாஸ்பேட்டை வருகிறார். அங்கிருந்து காரில் ஜிப்மர் வளாகத்தில் உள்ள அப்துல்கலாம் அரங்கில் நடைபெறவுள்ள நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பல்வேறு திட்டப்பணிகளை துவக்கி வைக்கிறார். ரூ.2426 கோடி செலவில் விழுப்புரம்- நாகை இடையேயான 4 வழிச்சாலை திட்டத்துக்கு அடிக்கல் நாட்டுகிறார்.

ரூ.491 கோடி செலவில் காரைக்காலில் ஜிப்மர் மருத்துவமனை கிளையை ஆகஸ்டு மாதத்துக்குள் முடித்து வைப்பதற்கான பணிகளை துவக்கி வைக்கிறார். சாகர் மாலா திட்டத்தின்கீழ் ரூ.44 கோடி செலவில் புதுச்சேரி துறைமுக விரிவாக்கப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டவுள்ளார். இந்திராகாந்தி விளையாட்டு மைதானத்தில் ரூ.7 கோடி செலவில் 400 மீட்டர் செயற்கை ஓடுதள பாத அமைக்கும் திட்டத்தை துவக்கி வைக்க இருக்கிறார். ஜிப்மர் மருத்துவமனையில் ரூ.28 கோடி செலவில் அதி நவீன மற்றும் ஆராய்ச்சி வசதிகள், பயிற்சி மையத்தை உள்ளடக்கி ரத்த வங்கி அமைக்கும் பணிகளையும் துவக்கி வைக்கவுள்ளார்.

லாஸ்பேட்டையில் இந்திய விளையாட்டு ஆணையத்தின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள 100 படுக்கை வசதிகள் கொண்ட மகளிர் விடுதியை திறந்து வைக்கவுள்ளார். ரூ.14.83 கோடி செலவில் கடற்கரையில் பிரெஞ்சு காலத்தில் இருந்த மேரி கட்டிடம், அதே முறையில் புதுப்பிக்கப்பட்டதையும் பிரதமர் மோடி திறந்து வைக்க இருக்கிறார். இந்த நிகழ்ச்சியை முடித்துகொண்டு கோவை செல்கிறார். கோவை கொடிசியா ஹாலில் அரசு விழாவும், கொடிசியா மைதானத்தில் பொதுக்கூட்ட நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது. கொடிசியாவில் மாலை 3.30 மணிக்கு நடைபெற உள்ள அரசு விழாவில் ரூ.12 ஆயிரத்து 400 மதிப்பிலான புதிய திட்டங்களை மோடி துவங்கி வைக்கிறார். விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம், உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி உள்ளிட்ட பலர் கலந்து கொள்கின்றனர்.

அரசு விழாவில் துவங்கி வைக்க உள்ள திட்டங்கள் குறித்து அரசு துறை அதிகாரிகள் கூறியதாவது:- நெய்வேலியில் ரூ.8,000 கோடியில் 1000 மெகாவாட் உற்பத்தி திறனில் வடிவமைக்கப்பட்ட புதிய அனல்மின் திட்டமான லிக்னைட் அடிப்படையிலான மின் உற்பத்தி நிலையத்தை நாட்டுக்கு பிரதமர் மோடி அர்ப்பணிக்கிறார். நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம் மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் 2,670 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்ட ரூ.3 ஆயிரம் கோடி மதிப்பிலான என்.எல்.சி.ஐ.எல். நிறுவனத்தின் 709 மெகாவாட் சூரிய மின்சக்தி திட்டத்தை அர்ப்பணிக்கிறார்.

வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில் ரூ.42 கோடியில் கட்டப்பட்டுள்ள பாலம் மற்றும் ரயில்வே பாலத்தை திறந்து வைக்கிறார். பிரதமரின் நகர்ப்புற வீட்டு வசதி திட்டத்தின்கீழ் கட்டப்பட்ட வீடுகள், தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தின்கீழ் திருப்பூர் வீரபாண்டி, மதுரை ராஜாக்கூரில் கட்டப்பட்டுள்ள குடியிருப்புகளையும் பிரதமர் மோடி திறந்து வைக்கிறார். இந்த குடியிருப்புகள் ரூ.330 கோடி செலவில் கட்டப்பட்டுள்ளது. கீழ்பவானி திட்டத்தை விரிவுபடுத்துதல், புதுப்பித்தல் மற்றும் நவீனமயமாக்கல் திட்டம், வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில் ரூ.20 கோடியில் 5 மெகாவாட் சூரிய மின்சக்தி தொகுப்புக்கும் அடிக்கல் நாட்டுகிறார். கோவை, மதுரை, சேலம், தஞ்சை, வேலூர், திருச்சி, திருப்பூர், நெல்லை மற்றும் தூத்துக்குடி உள்பட ஸ்மார்ட் சிட்டி நகரங்களில் ரூ.107 கோடியில் அமைக்கப்பட உள்ள ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு மையங்கள்  என மொத்தம் ரூ.12,400 கோடி மதிப்பிலான திட்டங்களை துவங்கி வைக்கிறார். இவ்வாறு அதிகாரிகள் கூறினார்கள். அரசு விழாவை முடித்துக்கொண்டு கொடிசியா மைதானத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் மோடி கலந்து கொள்கிறார்.

* மோடி வருகையொட்டி பள்ளிகளுக்கு விடுமுறை

புதுச்சேரியில், மோடி வருகையொட்டி அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு கல்வித்துறை இன்று விடுமுறை அறிவித்துள்ளது. இதுகுறித்து பள்ளி கல்வி இயக்ககம் இணை இயக்குனர் மைக்கேல் பென்னோ வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு;

பிரதமர் மோடி வருகையொட்டி இன்று (25ம் தேதி) போக்குவரத்து மாற்றம் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பள்ளிக்கு மாணவர்கள் வந்து செல்வதில் உள்ள சிரமங்களை கருத்தில்கொண்டு கல்வித்துறை இயக்குனரின் அறிவுறுத்தலின்படி புதுச்சேரியில் உள்ள அரசு, தனியார் பள்ளிகளுக்கு இன்று ஒருநாள் மட்டும் விடுமுறை என அறிவிக்கப்படுகிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: