73வது பிறந்த நாள் கொண்டாட்டம் ஜெயலலிதா சிலைக்கு இபிஎஸ், ஓபிஎஸ் மரியாதை: ராயப்பேட்டை தலைமை அலுவலகத்தில் நடந்தது

சென்னை: மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் 73வது பிறந்தநாளையொட்டி சென்னையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் உள்ள அவரது சிலைக்கு இபிஎஸ், ஓபிஎஸ் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். மறைந்த முதல்வரும் அதிமுக பொதுச்செயலாளருமான ஜெயலலிதாவுக்கு நேற்று 73வது பிறந்த நாள். இதையொட்டி சென்னை, ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் உள்ள அவரது சிலைக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்  நேற்று காலை 10 மணிக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தொடர்ந்து, மூத்த நிர்வாகிகளான கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம், மதுசூதனன் மற்றும் அமைச்சர்கள், எம்பி, எம்எல்ஏக்களும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அங்கிருந்த எம்ஜிஆர் சிலைக்கும் தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இதையடுத்து எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் கட்சி வளாகத்தில் கூடி இருந்த தொண்டர்களுக்கு இனிப்புகள் வழங்கினர். ஜெயலலிதாவின் 73வது பிறந்தநாளை கொண்டாடும் வகையில் அனைத்துலக எம்ஜிஆர் மன்ற செயலாளர் தமிழ்மகன் உசேன் ஏற்பாட்டின் பேரில் கட்சி அலுவலகத்தில் 73 கிலோ கேக்கை இபிஎஸ், ஓபிஎஸ் வெட்டி இருவரும் ஒருவருக்கொருவர் பறிமாறிக் கொண்டனர். அதிமுக நிர்வாகிகளுக்கும் அளித்தனர். ஜெயலலிதா பிறந்தநாள் விழா மலரை இபிஎஸ், ஓபிஎஸ் ஆகியோர் வெளியிட அவைத்தலைவர் மதுசூதனன் பெற்றுக்கொண்டார்.

பல்வேறு காரணங்களால் மரணம் அடைந்த அதிமுக தொண்டர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.3 லட்சம் வீதம் ரூ.18 லட்சத்துக்கான காசோலையை இபிஎஸ், ஓபிஎஸ் வழங்கினர். சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஏற்பாடு செய்த மருத்துவ முகாமையும் முதல்வர் எடப்பாடி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் துவக்கி வைத்தனர். இந்த மருத்துவ முகாம் 26ம் தேதி வரை நடக்கிறது. கட்சி தலைமை அலுவலகம் வந்த அனைவருக்கும் இலக்கிய அணி சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.

ஜெயலலிதா பிறந்த நாளையொட்டி சென்னை, ராயப்பேட்டையில் உள்ள கட்சி  அலுவலகத்தில் ஏராளமான அதிமுக தொண்டர்கள் கூடினர். அந்த பகுதி  முழுவதும் அதிமுக கொடி மற்றும் தோரணங்கள் கட்டப்பட்டு விழாக்கோலம்  பூண்டிருந்தது. இதேபோன்று, தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் நேற்று அதிமுக தொண்டர்கள் ஜெயலலிதா படத்தை அலங்கரித்து வைத்து மரியாதை செலுத்தினர். அந்த பகுதிகளில் அதிமுக கொடியேற்றப்பட்டு தொண்டர்களுக்கு இனிப்புகள் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. நலத்திட்ட உதவிகளையும் வழங்கினர். ஜெயலலிதா, எம்ஜிஆர் நடித்த படங்களின் பாடல்கள் ஒலிபரப்பப்பட்டன.

Related Stories: