சென்னையில் 44வது புத்தகக் காட்சி: துணை முதல்வர் தொடங்கி வைத்தார்

சென்னை: சென்னையில் கொரோனா குறைந்துள்ளதால், தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் (பபாசி) தமிழக அரசிடம் புத்தகக் காட்சி நடத்த கோரிக்கை வைத்தன. இதையடுத்து, தமிழக அரசு புத்தகக் காட்சியை நடத்தலாம் என அரசாணை வெளியிட்டது. அதில், கர்ப்பிணிகள், கைக்குழந்தைகள் உள்பட, 65 வயதுக்கு மேற்பட்டோரை அனுமதிக்கக்கூடாது, முக்ககவசம் அணிந்திருக்க வேண்டும், குளிர்சாதன வசதி பயன்படுத்தக்கூடாது என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்தநிலையில், 44-வது சென்னை புத்தகக் காட்சி நேற்று தொடங்கியது. இதை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று காலை 10 மணிக்கு தொடங்கி வைத்து அரங்குகளை பார்வையிட்டார். வரும் மார்ச் 9ம் தேதி வரை புத்தகக் காட்சி  நடைபெறும்.

இந்த ஆண்டு சுமார் 700 அரங்குகளில் 6 லட்சம் தலைப்புகளில் புத்தகங்கள் இடம் பெறுகின்றன. காலை 11 மணி முதல் இரவு 8 மணி வரை நடைபெறும் புத்தகக் காட்சிக்கு நுழைவுக் கட்டணமாக ரூ.10 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதேபோல், உலக அறிவியல் தினமான பிப்.28ம் தேதி அறிவியல் நூல்களின் விற்பனையை அதிகப்படுத்தும் விதமாக சிறப்பு நிகழ்வுகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மார்ச் 8 மகளிர் தினத்தை ஒட்டி புத்தக அரங்குகளில் பெண் எழுத்தாளர்களும், வாசகர்களும் சந்திப்பதற்கான நிகழ்வுகள் நடைபெறும். அதேபோல், குழந்தைகளிடம் வாசிப்பு பழக்கத்தை ஏற்படுத்தும் விதமாக குழந்தைகளுக்கு கதை சொல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. புதிய பதிப்பாளர்கள், புதிய எழுத்தாளர்களின் புத்தகங்களை வாசகர்களிடையே காட்சிப்படுத்துவதற்காக ரேக் என்ற புதிய திட்டத்தை பபாசி தொடங்கியுள்ளது.

Related Stories:

>