சட்டப்பேரவை தேர்தலையொட்டி ஆந்திரா, கர்நாடக மாநில எல்லைகளில் சோதனைகளை தீவிரப்படுத்த வேண்டும்: 3 மாநில அதிகாரிகள் கூட்டத்தில் அறிவுறுத்தல்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் நடந்த தேர்தல் பாதுகாப்பு குறித்த 3 மாநில அதிகாரிகள் ஆலோசனை கூட்டத்தில் எல்லைகளில் சோதனைகளை தீவிரப்படுத்த அறிவுறுத்தப்பட்டது. கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில், தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் 2021ஐ முன்னிட்டு மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை சார்பில் மாவட்ட எல்லையோர மாநிலங்களான கர்நாடகா மற்றும் ஆந்திரா மாநில மதுவிலக்கு மற்றும் அமல்பிரிவு, காவல்துறை அலுவலர்களுடனான ஆலோசனை கூட்டம் நேற்று  நடந்தது.

மாவட்ட கலெக்டரும், தேர்தல் அலுவலருமான ஜெயசந்திரபானு ரெட்டி தலைமை வகித்து பேசியதாவது: கிருஷ்ணகிரி மாவட்ட எல்லையான கர்நாடகா மற்றும் ஆந்திரா எல்லையோர சோதனை சாவடிகளை பலப்படுத்துவது மற்றும் கூடுதலாக தேவைப்படுகின்ற இடங்களில் சோதனை சாவடிகள் அமைத்து பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் மது கடத்தல் தடுப்பு பணிகளை தீவிரமாக கண்காணிக்க வேண்டும். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஏற்கனவே உள்ள மதுவிலக்கு மற்றும் அமலாக்கப்பிரிவு சோதனை சாவடிகளையும், கர்நாடகம் மற்றும் ஆந்திரா மாநில எல்லையில் உள்ள சோதனை சாவடிகளில் வாகன தணிக்கை மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளை தீவிரப்படுத்த வேண்டும்.

மேலும், தமிழகம், கர்நாடகம் மற்றும் ஆந்திர எல்லையோர வனப்பகுதிகளிலும், மதுபானங்கள் கொண்டு செல்வதும், தேர்தல் நேரங்களில் கர்நாடகம், ஆந்திரம் மற்றும் தமிழக பகுதிகளில் உள்ள மதுபான கடைகள் செயல்பாட்டை தீவிரமாக கண்காணிக்க வேண்டும். தேர்தல் அட்டவணை வெளியானவுடன், 3 மாநிலங்களிலும் மதுபான கடத்தல் குற்றங்களில் ஈடுபடுபவர்களை கண்காணித்திடவும், அந்தந்த மாநில எல்லையோர காவல் அலுவலர்கள் கூட்டாக ஒருங்கிணைந்து விழிப்புடன் பணியாற்றுமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories:

>