ஆட்டோவை பறிமுதல் செய்ததால் நிதி நிறுவனத்தின் முன் டிரைவர் தீக்குளித்து சாவு: நெல்லை அருகே பரிதாபம்

நெல்லை: ஆட்டோவை பறிமுதல் செய்த தனியார் நிதி நிறுவனம் முன்பு டிரைவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு பாரதிநகரை சேர்ந்தவர் பழனிவேல் (35). இவரது தங்கை கணவர், கடந்த சில மாதங்களுக்கு முன்பு நெல்லையில் உள்ள தனியார் நிதி நிறுவனம் மூலம் ஆட்டோ வாங்கினார். அதனை பழனிவேல் ஓட்டி வந்தார். ஆட்டோவுக்கு 3 மாத தவணை தொகையை கட்டவில்லை என கூறப்படுகிறது. இதனால் நிதி நிறுவன ஊழியர்கள், நேற்று முன்தினம் கயத்தாறு சென்று ஆட்டோவை பறிமுதல் செய்தனர். இதையறிந்து நிதி நிறுவன அலுவலகத்திற்கு அன்று மாலை வந்த பழனிவேல், ஆட்டோவை திருப்பி தருமாறு கேட்டார்.

அதற்கு அவர்கள் மறுத்து விட்டனர். இதனால் மனமுடைந்த பழனிவேலு, திடீரென தான் கொண்டு வந்திருந்த பெட்ரோலை உடலில் ஊற்றி தீக்குளித்தார். பலத்த தீக்காயமடைந்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று மதியம் பழனிவேலு இறந்தார். இது குறித்து பழனிவேலுவின் மனைவி ஆறுமுகக்கனி (30) நெல்லை சந்திப்பு போலீசில் புகார் செய்தார். பிரேத பரிசோதனை முடிந்த பிறகும் அவரது உறவினர்கள் சம்பந்தப்பட்ட நிதி நிறுவன ஊழியர்களை கைது செய்யவும், இழப்பீடு வழங்கவும் வலியுறுத்தி பழனிவேலு உடலை வாங்க மறுத்தனர். இதையடுத்து போலீசார் வழக்குப்பதிந்து நிதி நிறுவன ஊழியர்கள் 4 பேரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories:

>