தமிழகம் உட்பட 10 மாநிலங்களில் கொரோனா பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய மத்திய குழு நியமனம்

புதுடெல்லி: கொரோனா பாதிப்பு மிகுந்த தமிழகம், கேரளா உள்ளிட்ட 10 மாநிலங்களில், அது குறித்து ஆய்வு மேற்கொள்ள மத்திய உயர்நிலைக் குழு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பு ஓராண்டை கடந்த நிலையில்,  தடுப்பூசி பயன்பாட்டுக்கு வந்தபிறகும்,  கடந்த சில வாரங்களாக, கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வராதது உலக நாடுகளை கவலையில் ஆழ்த்தியுள்ளது. இங்கிலாந்து உள்ளிட்ட பல நாடுகளில் உருமாறிய வைரசால் மக்கள் பாதிப்புக்கு உள்ளாகி இருப்பதால் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இந்தியாவிலும் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருகிறது. அதிலும் குறிப்பாக, தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா, குஜராத், பஞ்சாப், சட்டீஸ்கர், மேற்கு வங்கம், ஜம்மு காஷ்மீர், மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்கள், யூனியன் கொரோனா பாதிப்பு அதிகளவில் காணப்படுகிறது. இதனால்,  இந்த மாநிலங்களிலும் கொரோனா குறித்து ஆய்வு மேற்கொள்ள 3 பேர் கொண்ட பல மத்திய உயர்நிலைக் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன.

இந்த குழுக்கள் சுகாதார அமைச்சகத்தின் கூடுதல் செயலர் அந்தஸ்த்தில் உள்ள அதிகாரிகளின் தலைமையில் செயல்படும் என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. தினசரி பாதிப்பு அதிகரித்து வரும் கேரளா, மகாராஷ்டிரா, குஜராத், பஞ்சாப், சட்டீஸ்கர், ஜம்மு காஷ்மீர், மத்திய பிரதேசம் மாநிலங்களில், கொரோனா பாதிப்பு மிகுந்த மாவட்டங்களின், மாவட்ட அதிகாரிகளை தொடர்பு கொண்டு நிலவரம் குறித்து ஆய்வு மேற்கொள்ளும்படி கேட்டு கொள்ளப்பட்டுள்ளது.

ஆய்வின் முடிவு குறித்து அந்தந்த மாநில தலைமை செயலரிடம், மத்திய குழு விளக்கம் அளிக்க நேரம் ஒதுக்கும்படி, இந்த 10 மாநிலங்களின் தலைமைச் செயலர்களுக்கும் மத்திய சுகாதாரத் துறை செயலர் தனித் தனியாக கோரிக்கை விடுத்துள்ளார்.

19 மாநிலங்களில் உயிரிழப்பில்லை

மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், ` கேரளா, மகாராஷ்டிராவில் கடந்த ஒரு வாரமாக, தினசரி பாதிப்பு எண்ணிக்கை 4,000 ஆக அதிகரித்துள்ளது. நேற்று காலையுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில், குஜராத், அரியானா, ராஜஸ்தான், ஒடிசா, ஜார்கண்ட், சண்டிகர், அசாம், லட்சத்தீவு, இமாச்சல், லடாக், மணிப்பூர், மிசோரம், திரிபுரா, மேகாலயா, அந்தமான் நிகோபர் தீவுகள், சிக்கிம், நாகாலாந்து, அருணாச்சல், டாமன்-டையூ மற்றும் தாத்ரா-நாகர்வேலி உள்ளிட்ட 19 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் உயிரிழப்பு எதுவும் இல்லை. இதுவரை, 1 கோடியே 21 லட்சத்து 65 ஆயிரத்து 598 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது,’ என்று கூறப்பட்டுள்ளது.

Related Stories:

>