மணல் கடத்தலை தடுக்க எடுத்த நடவடிக்கை என்ன? தலைமை செயலர் அறிக்கையளிக்க உத்தரவு

மதுரை: மணல் கடத்தலை தடுக்க நடவடிக்கை மேற்கொள்வதை கண்காணிக்கவும், இதுவரை எடுத்த நடவடிக்கை குறித்து அறிக்கையளிக்கவும் ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி தாலுகா நெறிஞ்சிக்குடி உள்ளிட்ட கிராம மக்கள் இணைந்து தங்கள் பகுதியில் நடக்கும் மணல் கொள்ளையால் நிலத்தடி நீர் மட்டம் வெகுவாக பாதித்துள்ளதாகவும், புகார் அளித்தாலும் அதிகாரிகள் கண்டுகொள்வதில்லை. எனவே, மணல் கொள்ளையை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனக் கூறி ஐகோர்ட் மதுரை கிளை நிர்வாக நீதிபதிக்கு சில ஆண்டுகளுக்கு முன் கடிதம் எழுதியிருந்தனர்.

இந்த கடிதத்தின் அடிப்படையில் ஐகோர்ட் மதுரை கிளை நீதிபதிகள் தாமாக முன்வந்து பொது நல மனுவாக விசாரித்தனர். இந்த மனுவை நேற்று மீண்டும் விசாரித்த தலைமை நீதிபதி சஞ்சிப் பானர்ஜி, நீதிபதி ஆர்.ஹேமலதா அமர்வு, தமிழகத்தில் மணல் கடத்தலை தடுப்பது தொடர்பாக ஐகோர்ட் ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது. அந்த உத்தரவுகளை கண்டிப்பாகவும், முறையாகவும் பின்பற்றி அமல்படுத்த வேண்டும். சட்டவிரோத மணல் கடத்தலை தடுக்கும் நடவடிக்கைகளை விரைவாக மேற்கொள்ள வேண்டும். இந்த விவகாரத்தில் தமிழக தலைமை செயலர் சிறப்பு கவனம் செலுத்தி கண்காணிக்க வேண்டும். இது நீர் வள ஆதாரம் தொடர்பானது. இதுவரை மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்த கலெக்டர்களின் அறிக்கை அடிப்படையில், தமிழக தலைமை செயலர் 4 வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டுமெனக் கூறி விசாரணையை தள்ளி வைத்தனர்.

Related Stories:

>