ஐநா தீர்மானத்துக்கு இலங்கை எதிர்ப்பு: மனித உரிமை மீறல் விவகாரம்

கொழும்பு: இறுதிப் போரில் மனித உரிமை மீறல்கள் நடந்ததாக ஐநா.வில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள அறிக்கைக்கு இலங்கை எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இலங்கையில் ராணுவத்துக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையே நடந்து வந்த யுத்தம், 2009ம் ஆண்டு உச்சத்தை அடைந்தது. சுமார் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் இறுதிப்போரில் கொல்லப்பட்டதாகவும், பலர் காணாமல் போயுள்ளதாகவும் ஐநா மனித உரிமைகள் ஆணையர் மிச்செல் பச்லெட் தனது அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.  ‘ஏற்பட்ட இழப்புகளுக்கு இலங்கை பொறுப்பேற்க வேண்டும், மீண்டும் நல்லிணக்கத்தைக் கொண்டு வர முயல வேண்டும்’ எனவும் ஐநாவின் 93 பக்க அறிக்கை இலங்கையை நிர்ப்பந்திருந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளதுடன், தீர்மானத்தைத் திரும்பப் பெறுமாறு இலங்கை கேட்டுக் கொண்டுள்ளது.

காணொலி வாயிலாக நடந்த ஐநா மனித உரிமைகள் ஆணையத்தின் கூட்டத்தில் கலந்து கொண்ட அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் தினேஷ் குணவர்த்தனே, ‘இது அரசியல் சார்பு கொண்ட தீர்மானம், ஐநா இதை மறுபரிசீலனை செய்ய வேண்டும்’ என கேட்டுக் கொண்டுள்ளார்.

இந்தியா ஆதரிக்க வேண்டுகோள்

ஐநாவின் தீர்மானம் வெற்றியடைந்தால், இலங்கை அரசு சர்வதேச நாடுகளின் போர்க்குற்ற விசாரணைக்கு ஆளாக வேண்டியிருக்கும். இதனால் தீர்மானத்தைத் தோல்வியடையச் செய்ய ஆதரவைத் திரட்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. ஏற்கனவே இங்கிலாந்து, ஜெர்மனி, கனடா, மலாவி போன்ற நாடுகள் இலங்கைக்கு ஆதரவாக உள்ளன. தற்போது இந்தியாவின் ஆதரவைப் பெறவும் இலங்கை முயற்சி செய்து வருகிறது. இதுகுறித்த கோரிக்கை கடிதத்தை வெளியுறவுச் செயலர் ஜெயந்த் கொலம்பேஜ், பிரதமர் நரேந்திர மோடிக்கும் அனுப்பியுள்ளார்.

Related Stories: