முதல்வர் சுற்றுப்பயணத்தில் பெண் ஐபிஎஸ்க்கு பாலியல் தொல்லை சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸின் அத்துமீறல் காவல்துறைக்கு மிகப்பெரிய அவமானம்: திமுக போராட்டத்தில் குதிக்கும்; மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை

சென்னை: முதல்வர் சுற்றுப்பயணத்தில் பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு, டிஜிபி ராஜேஷ்தாஸின் செயல் காவல் துறைக்கு மிகப் பெரிய அவமானம் என்றும், இந்த போக்கு தொடர்ந்தால் திமுக போராட்டத்தில் இறங்கும் என்று மு.க.ஸ்டாலின் எச்சரித்துள்ளார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: பெண் ஐ.பி.எஸ். அதிகாரி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாருக்கு உள்ளாகியிருக்கும் தமிழக காவல்துறை சிறப்பு டி.ஜி.பி. ராஜேஷ்தாஸை, முதல்வர் பழனிசாமி காப்பாற்றி வருவதற்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

பாலியல் குற்றத்துக்கு உள்ளாகும் ஒரு சில போலீஸ் அதிகாரிகளையும், அதிமுகவினரையும் பாதுகாக்கும் முதல்வர் பழனிசாமி, பெண்ணினத்தின் பாதுகாப்பிற்கே சவாலாக இருப்பது மிகுந்த கவலையளிக்கிறது. தினகரன் மற்றும் ஆங்கில நாளிதழ் ஒன்றில் இன்றைய தினம் ‘பாலியல் தொல்லை கொடுத்த உயர் போலீஸ் அதிகாரி மீது புகார்’ என்று செய்தி வெளிவந்திருக்கிறது. தங்களுக்கு நேரும் அநீதியை சந்திக்கும் பாலியல் தொல்லைகளை வெளியில் சொல்லவே பெண்கள் பயந்து தயங்கும் நேரத்தில், இந்த பெண் ஐ.பி.எஸ். அதிகாரி தனது சீனியர் போலீஸ் அதிகாரி மீது புகார் கொடுத்திருப்பது வரவேற்கத்தக்கது. அந்த பெண் போலீஸ் ஐ.பி.எஸ். அதிகாரியின் துணிச்சலுக்கு நான் தலை வணங்குகிறேன்.

புதுக்கோட்டை, திருச்சி ஆகிய மாவட்டங்களில் முதல்வர் சுற்றுப்பயணம் செய்த நேரத்தில் நிகழ்ந்த இந்த பாலியல் தொல்லை, தமிழக காவல்துறைக்கு மிகப் பெரிய அவமானத்தை ஏற்படுத்தியுள்ளது. நேர்மையான கண்ணியமான ஐ.பி.எஸ். அதிகாரிகள் பணியாற்றும் தமிழக காவல்துறையில் இதுபோன்ற விரல் விட்டு எண்ணும் சில புல்லுருவி போலீஸ் அதிகாரிகளால் ‘யூனிபார்மில் உள்ள பெண் ஐ.பி.எஸ். அதிகாரிக்கே பாதுகாப்பு இல்லை’ என்ற நிலை உருவாகியுள்ளது. இந்த நிலையைப் பார்த்து, அத்துறைக்குப் பொறுப்பு வகிக்கும் முதல்வர் பழனிசாமி வெட்கித் தலைகுனிய வேண்டும். ஆனால், பொள்ளாச்சி பாலியல் குற்றத்திலேயே அதிமுகவினரைக் காப்பாற்றிய முதல்வர், ‘பெண்களுக்குப் பாதுகாப்பான ஆட்சி’ என நடத்தி வரும் பிரசாரத்தைப் பொய்யாக்கி விட்டது.

அதிமுக ஆட்சியில் இது முதல் புகார் அல்ல. ஏற்கனவே லஞ்ச ஒழிப்புத்துறையில் இருந்த ஐ.ஜி. முருகன் மீது, எஸ்.பி. அந்தஸ்தில் உள்ள பெண் போலீஸ் அதிகாரி புகார் கொடுத்தார். அதையும் மூடி மறைத்தார் முதல்வர். உயர் நீதிமன்றம் தலையிட்ட பிறகு சி.பி.சி.ஐ.டி.யில் வழக்கும் பதிவு செய்யப்பட்டது. அதிலும் பாதுகாத்து, இன்று வரை அந்த வழக்கின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தனது ஊழல் வழக்குகளில் இருந்து தப்பிக்கவும், தனது சட்ட விரோத உத்தரவுகளை நிறைவேற்றவும் இதுபோன்ற பாலியல் தொந்தரவில் ஈடுபடும் போலீஸ் அதிகாரிகளை முதல்வர் பழனிசாமி காப்பாற்றுகிறார்.

அதன் விளைவு, இன்றைக்குப் பேச வேண்டும் எனத் தனது காருக்குள் அழைத்து ஒரு பெண் எஸ்.பி.க்கு பாலியல் தொந்தரவு கொடுக்கும் தைரியத்தை காவல்துறையில் உள்ள சிறப்பு டிஜிபியே பெற்றிருப்பது கேவலமானது. அதுவும், முதல்வரின் பிரசார பாதுகாப்பிற்குச் செல்லும் ஒரு உயர் போலீஸ் அதிகாரியே இப்படியொரு அத்துமீறலில் ஈடுபட்டுள்ளது அசிங்கத்தின் உச்சபட்சம். நம்மை யார் என்ன செய்ய முடியும் என்ற ஆணவத்தின் வெளிப்பாடு. தமிழகக் காவல்துறையில் பணியாற்றும் பெண்களுக்கு முதல்வர் உருவாக்கியுள்ள இந்த இழி நிலையைத் திமுக ஒருபோதும் அனுமதிக்காது.

எனவே, பெண் போலீஸ் எஸ்.பி. கொடுத்துள்ள புகாரின் மீது உடனடியாக நடவடிக்கை எடுத்து சட்டம் ஒழுங்கு சிறப்பு டி.ஜி.பி. ராஜேஷ்தாஸை சஸ்பெண்ட் செய்து, கிரிமினல் வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்று முதல்வர் பழனிசாமியைக் கேட்டுக் கொள்கிறேன். பாலியல் தொல்லையில் ஈடுபட்ட இதுபோன்ற போலீஸ் அதிகாரியைப் பாதுகாத்து தமிழகக் காவல்துறையில் பணியாற்றும் ஆயிரக்கணக்கான பெண் போலீசார் மற்றும் பெண் போலீஸ் அதிகாரிகளின் பாதுகாப்பிற்கு குந்தகம் விளைவிக்க முயற்சித்தால் திமுக மாபெரும் போராட்டத்தில் இறங்கும் என்று எச்சரிக்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார். அதிமுக ஆட்சியில் இது முதல் புகார் அல்ல. ஏற்கனவே லஞ்ச ஒழிப்புத்துறையில் இருந்த ஐ.ஜி. முருகன் மீது, எஸ்.பி. அந்தஸ்தில் உள்ள பெண் போலீஸ் அதிகாரி புகார் கொடுத்தார்.

Related Stories: