தமிழக போலீஸ் என்றாலே டெல்லியில் தவறாக பார்க்கிறார்கள்

ஐபிஎஸ் அதிகாரிகள் சங்கம் சார்பில் உயர் போலீஸ் அதிகாரிகள் கொண்ட ஒரு வாட்ஸ் அப் குரூப் இயங்கி வருகிறது. இந்தக் குழுவில் தமிழகத்தில் உள்ள அனைத்து உயர் போலீஸ் அதிகாரிகளும் உள்ளனர். இந்த குரூப்பில், பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு இழைக்கப்பட்ட பாலியல் குற்றச்சாட்டு குறித்து பலரும் தங்களது குற்றச்சாட்டுகளை கடுமையாக எடுத்து வைத்தனர். அதில், லஞ்ச ஒழிப்புத்துறையில் பணியாற்றும் பெண் ஐபிஎஸ் அதிகாரி பதிவிடும்போது, ‘‘ஐபிஎஸ் சங்கத்தால் எந்த பயணும் இல்லை. பிறந்த நாள் வாழ்த்து  மட்டும்தான் இந்த குரூப்பில் போடுகிறீர்கள். பெண் அதிகாரியை பாலியல் தொந்தரவு செய்த அதிகாரியை இந்த குரூப்பில் உள்ள மற்ற அதிகாரிகள் கண்டிக்கவில்லை என்று முதல் முறையாக பதிவிட்டுள்ளார். அதைத் தொடர்ந்து பெண் அதிகாரிகளும், ஆண் அதிகாரிகளும் கடும் குற்றச்சாட்டுக்களை தெரிவித்தனர். ஒரு அதிகாரி கூறும்போது, ‘‘5 பெண் அதிகாரிகள் உள்துறைச் செயலாளரிடம் புகார் செய்ய உள்ளனர் என்றார்.

மற்றொரு பெண் அதிகாரியோ, ‘‘ எனக்கு இந்த துறையில் வேலை செய்யவே அவமானமாக உள்ளது. இந்த அதிகாரியில் மட்டுமல்ல, மற்ற அதிகாரிகள் அதை தட்டிக் கேட்காமல் சும்மா இருப்பதுதான் அசிங்கமாக உள்ளது’’ என்றார்.  மற்றொரு ஏடிஜிபியோ, இந்த மாதிரி ஒரு சிலர் நடந்து கொள்வதால், தமிழக காவல்துறைக்கே கெட்ட பெயர் வருகிறது. போலீஸ் துறையில் வேலியே  பயிரை மேய்கிறது’’ என்றார். சென்னையைச் சேர்ந்த கூடுதல் கமிஷனர் ஒருவர் கூறும்போது, ‘‘இப்போது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்னு  சொல்கிறார்கள். சட்டப்படி நடவடிக்கை என்பது நமக்கு தெரிந்தவரை எப்ஐஆர் போடுவதுதான். இந்தப் புகார் மீது எப்ஐஆர் பதிவு செய்தாச்சா?.  ஏன் இதுவரை எப்ஐஆர் போடவில்லை. இந்த விவகாரத்துல யார் எப்ஐஆர் போடுவா? என்று கேள்விகளை எழுப்பியுள்ளார். அதற்கு மற்றொரு அதிகாரி, பெண் ஐபிஎஸ் அதிகாரி பணியாற்றும் அந்த மாவட்டத்திலேயே அதிகாரியின் புகார் கொடுத்து, வழக்குப்பதிவு செய்ய வேண்டும். பின்னர், வேறு  பிரிவுக்கு மாற்றலாம். ஆனால் இந்த விவகாரத்தில், சீரியஸ் தண்டனை கொடுக்க வேண்டும்.

அவரை விசாரிக்காமலேயே தூக்கிலிட வேண்டும் என்றார். மற்றொரு அதிகாரியோ, லஞ்ச ஒழிப்புத்துறையில் பெண் அதிகாரி புகார் கொடுத்தவுடன் நடவடிக்கை எடுத்திருந்தால் இந்த சம்பவம் நடந்திருக்காது. முருகனுக்கு பாதுகாப்பு கொடுத்ததால்தான், இதுபோன்ற சம்பவங்கள் தொடர்கின்றன என்றார். மற்றொரு பெண் அதிகாரி கூறும்போது, ‘பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு மட்டுமல்ல, காவலர்கள் முதல் இன்ஸ்பெக்டர்கள் வரை உள்ள அதிகாரிக்கும் பிரச்னைகள் உள்ளன. இதனால் இந்த அதிகாரி மீது நடவடிக்கை எடுப்பதன் மூலம், கீழ் மட்டத்தில் உள்ள பெண்களை பாதுகாக்க முடியும். யாரும் இதுபோன்ற அதிகாரிக்கு உதவி செய்யக்கூடாது. இந்த பெண் அதிகாரியை தன் மகள்போல உயர் அதிகாரி பார்க்க வேண்டும் என்றார்.

எல்லோரும் கடுமையாக கண்டித்து எழுதியபோது ஒரே ஒரு ஐபிஎஸ் அதிகாரி மட்டும் ராஜேஷ்தாசுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறும்போது, ‘‘சோஷியல் மீடியாவில் மொத்தமாக டேமேஜ் பண்ணுகிறார்கள். நாம் உயர் அதிகாரிகள். நாம் கோபப்படக்கூடாது. உண்மையை விசாரிக்கனும். உணர்ச்சிவசப்படக் கூடாது. நீங்களே தீர்ப்பு எழுதிவிட்டீர்கள் என்று கூறியுள்ளார். அப்போது டெல்லியில் பணியாற்றிய அதிகாரி ஒருவர், இந்த சம்பவத்தால் தமிழக போலீஸ் என்று டெல்லியில் சொல்வதற்கே கஷ்டமாக உள்ளது. நம்மைப் பற்றி தவறாக நினைக்கிறார்கள். இதனால் இந்த விவகாரத்தில் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Related Stories:

>