பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 2வது நாளாக மறியல் போராட்டம்: நூற்றுக்கணக்கான மாற்றுத் திறனாளிகள் கைது

செங்கல்பட்டு: செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அருகில் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைக்கான சங்கம் சார்பில் அரசு வழங்கும் உதவித் தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று முன்தினம்  காலை முதல் காத்திருக்கும் போராட்டம் நடந்தது. மாற்றுத் திறனாளிகளின் போராட்டம் குறித்து அதிகாரிகள் யாரும் பேச்சு வார்த்தை நடத்தவில்லை. இதனால், அவர்களது போராட்டம் நேற்று வரை தொடர்ந்தது. இதற்கிடையில், நேற்று முன்தினம் இரவு 10 மணியளவில் செங்கல்பட்டு டவுன் இன்ஸ்பெக்டர் விநாயகம், போராட்டம் நடந்த பகுதிக்கு சென்றார். அங்கிருந்த மாற்றுத் திறனாளிகளிடம், உங்களுக்கு எப்படி மின்சாரம் வந்தது என கேட்டு விட்டு சென்றார். அவர் சென்ற 2 நிமிடங்களில், அப்பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. பல்வேறு வகையில் ஊனமுற்ற மாற்றுத் திறனாளிகள் உணவு சமைப்பதற்கு  கூட வழி இல்லாமல் இரவு முழுவதும் இருளில் மூழ்கி இருந்தனர். நேற்று காலை மீண்டும் கோரிக்கைகளை வலியுறுத்தியும், போலீசாரை கண்டித்தும் செங்கல்பட்டு - மதுராந்தம் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

தகவலறிந்து செங்கல்பட்டு டவுன் போலீசார், சம்பவ இடத்துக்கு சென்று, மறியலில் ஈடுபட்டவர்களை கைது செய்து, தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைக்கான சங்க மாவட்ட செயலாளர் ஹரிகிருஷ்ணன், செய்தியாளரிடம் கூறுகையில், செங்கல்பட்டு நகரில் தடை செய்யப்பட்ட கஞ்சா விற்பனை, தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு, கொலை, கொள்ளை என தொடர்ந்து நடக்கிறது. அதை பற்றி கவலைப்படாத இன்ஸ்பெக்டர் விநாயகம், மாற்றுத்திறனாளிகள் போராட்டம் நடத்தும் பந்தலில் மின்சாரத்தை துண்டித்து செல்வது மிகவும் கண்டனத்துக்கு உரியது என்றார்.

திருப்போரூர்: திருப்போரூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் சங்க ஒன்றியத் தலைவர் லிங்கன், செயலாளர் அருள்ராணி, பொருளாளர் திருஞான சம்பந்தன் உள்பட 100க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகளும், அவர்களின் பாதுகாப்பாளர்களும் திருப்போரூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு சாமியானா பந்தல் அமைந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நேற்று 2வது நாளாக போராட்டம் தொடர்ந்து நடந்தது. மதியம் 12 மணியளவில், தங்களது கோரிக்கை களை வலியுறுத்தி 40க்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளிகள் திருப்போரூர் - செங்கல்பட்டு சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து திருப்போரூர் இன்ஸ்பெக்டர் கலைச்செல்வி, எஸ்ஐ மணி ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்ட 40 பேரையும் கைது செய்து, தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். செய்யூர்: செய்யூர் தாலுகா சித்தாமூர் ஒன்றியத்தில் வசிக்கும் மாற்றுத் திறனாளிகள் நூற்றுக்கும் மேற்பட்டோர் பிடிஓ அலுவலக வளாகத்தில் நேற்று 2வது நாளாக போராட்டம் நடத்தினர். மதியம், சித்தாமூர் - சூனாம்பேடு நெடுஞ்சாலையில் அவர்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

உத்திரமேரூர்: உத்திரமேரூரில் அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைக்கான நல சங்கம் சார்பில் உத்திரமேரூர் தாலுகா அலுவலகம் எதிரே நேற்று 2வது நாளாக தொடர்ந்தது. மதியம், மாற்றுத் திறனாளிகளின் கோரிக்கையை நிறைவேற்றாத மத்திய, மாநில அரசுகளை கண்டித்து உத்திரமேரூர் - வந்தவாசி சாலையில் தாலுகா அலுவலகம் எதிரே திடீர் மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்து உத்திரமேரூர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, போராட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத் திறனாளிகளை கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர்.

Related Stories: