கூடுவாஞ்சேரி அருகே பரபரப்பு: விஏஓ வீட்டை உடைத்து 110 சவரன் கொள்ளை: மர்மநபர்களுக்கு போலீஸ் வலை

கூடுவாஞ்சேரி: கூடுவாஞ்சேரி அருகே ஓய்வு பெற்ற விஏஓ வீட்டை உடைத்து 110 சவரன் நகை, 50 ஆயிரம், 2 கிலோ வெள்ளி பொருட்களை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றனர். இச்சம்பவம், கூடுவாஞ்சேரி அருகே பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது. கூடுவாஞ்சேரி அடுத்த கன்னிவாக்கம் கிராமம், திருவள்ளூர் தெருவை சேர்ந்தவர் செந்தாமரை (75). ஓய்வு பெற்ற விஏஓ. இவரது மனைவி பிரேமா (65). இவர்களுக்கு 2 மகன்கள், 3 மகள்கள் உள்ளனர். தரை தளத்தில் செந்தாமரையும், மாடியில் அவரது மகன் சித்த மருத்துவர் நந்தகுமார் (39) ஆகியோர் குடும்பத்துடன் வசிக்கின்றனர். சென்னை, சிஐடி நகரில் உள்ள செந்தாமரையின் மகள் மகேஸ்வரி, கடந்த 11ம் தேதி புதிதாக வீடு கட்டி கிரக பிரவேசம் நடத்தினார். அதில் கலந்து கொள்வதற்காக, செந்தாமரை குடும்பத்தினர் அனைவரும் சென்றனர். நந்தகுமாரின் மனைவி ஆனந்தவல்லி சென்னை, வளசரவாக்கத்தில் உள்ள அவரது தாய் வீட்டுக்கு கடந்த 20 நாட்களுக்கு முன் சென்றார். அவரை அழைத்துவர நந்தகுமார் நேற்று முன்தினம் இரவு சென்றார்.

இந்நிலையில், நேற்று காலை 11 மணியளவில் அனைவரும் வீடு திரும்பினர். அப்போது, வீட்டின் கேட் உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். உள்ளே சென்று பார்த்தபோது, தரைதளத்தில் உள்ள வீட்டிலும், மாடி வீட்டிலும் உள்ள 3 பீரோக்கள் உடைக்கப்பட்டு அதில் இருந்த பொருட்கள் சிதறி கிடந்தன. அந்த பீரோக்களில் வைத்திருந்த 110 சவரன் நகை, 50 ஆயிரம், 2 கிலோ வெள்ளி பொருட்களை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரிந்தது. தகவலறிந்து வண்டலூர் டிஎஸ்பி அனுமந்தன், கூடுவாஞ்சேரி இன்ஸ்பெக்டர் அசோகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரித்தனர். மேலும், காஞ்சிபுரத்தில் இருந்து மோப்ப நாய் மற்றும் கைரேகை நிபுணர்கள் வந்து, அங்கு பதிவான ரேகைகளை பதிவு செய்து சென்றனர். தொடர்ந்து, போலீசார் வழக்குப்பதிவு செய்து, அப்பகுதியில் சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து, மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories:

>