அறநிலையத்துறையில் பணி நிரந்தரம்கோரி ஆணையர் அலுவலகத்தில் நாளை நூதன போராட்டம்

சென்னை: 110 விதியின் கீழ் அறிவிக்கப்பட்ட நிலையில் 2 ஆயிரம் கோயில் பணியாளர்களை பணி நிரந்தரம் செய்யாததை கண்டித்து அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில் நாளை நூதன போராட்டம் நடைபெறும் என்று தமிழ்நாடு திருக்கோயில் தொழிலாளர் யூனியன் அறிவித்துள்ளது. தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில், 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ரூ.150 பெற்று தினக்கூலிகளாக பணியாற்றி வருகின்றனர். இதனால் அவர்கள் குடும்பம் நடத்த  முடியவில்லை. இதனால், 5 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வரும் ஊழியர்கள் தங்களை நிரந்தர ஊழியர்களாக பணியமர்த்த கோரி பல கட்டங்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இதை தொடர்ந்து மறைந்த முதல்வர் ஜெயலலிதா தினக்கூலி ஊழியர்களாக பணியாற்றி வரும் 8184 பேர் பணி வரன்முறை செய்யப்படுவார்கள் என்று கடந்த 2014ல் அறிவித்தார்.

ஆனால், 7 ஆண்டுகள் மேலான நிலையில் 2217 பேர் வரை மட்டுமே பணி நிரந்தரம் செய்யப்பட்டுள்ளனர். இந்த நிலையில் தகுதியான கோயில் பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய தமிழ்நாடு திருக்கோயில் தொழிலாளர் யூனியன் சார்பில் கோரிக்கை வைத்தனர். இதையேற்று, கடந்த சட்டசபை கூட்டத்தொடரில் 110 விதியின் கீழ் 2 ஆயிரம் தினக்கூலி மற்றும் தொகுப்பூதிய பணியாளர்களுக்கு கால ஊதியம் முறை வழங்கி பணிநிரந்தரம் செய்யப்படும் என்று முதல்வர் எடப்பாடி அறிவித்தார். ஆனால், தற்போது வரை அந்த அறிவிப்பை செயல்படுத்தவில்லை. இதை கண்டித்து நாளை அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில் பெருந்திரள் முறையீடு நடத்த நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

Related Stories:

>